பகுதியளவு ஜெயமோகன்கள்

டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது.

விருது விழாவின் முதல் நாள் எழுத்தாளர்களுடனான சந்திப்பு / உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஓர் அமர்வில் நான் பங்குகொண்டேன். சுமார் இரண்டு மணி நேரம் வாசகர்களின் வினாக்களுக்கு பதில் சொன்னேன். அனைவருமே குறிப்பிட்ட எழுத்தாளரை ஓரளவேனும் ஆழமாகப் படித்துவிட்டு வந்து கேள்வி கேட்டார்கள் என்பது இதில் முக்கியம். என் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த விஷ்ணுபுரம் ரம்யா, ‘அலை உறங்கும் கடலில் வரும் நீலுப் பாட்டியையும் ‘யதி’யில் வரும் சித்ராவின் அம்மாவையும் ஒப்பிட்டுக் கேட்டதனால் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பொதுவான மூலப் பிர(கிரு)தியைத் திரை விலக்கிக் காட்ட வேண்டிவந்தது. அது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

நிற்க.

பொதுவாகத் தமிழில் தீவிரமாக இலக்கியம் படிப்பவர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதல் சொல்லப்பட்டு வருவது. இந்த விழாவில் அந்த ஆயிரம் பேரை மொத்தமாகப் பார்த்துவிட நேர்ந்ததுதான் எனக்குப் பெரிய வியப்பு. முதல் நாள் காலை பத்து மணிக்குத் தொடங்கிய முதல் எழுத்தாளர் சந்திப்பு அமர்வு முதல் இரண்டாம் நாள் மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவரை எந்த அமர்வின்போதும் ஒரு காலி இருக்கையைக் கூடப் பார்க்க முடியவில்லை என்பதைப் பார்த்த பின்பும் நம்பச் சிறிது சிரமமாகத்தான் உள்ளது. பல அமர்வுகளில் பலபேர் உட்கார இடமின்றி நின்றுகொண்டே ரசித்தார்கள்.

பாவண்ணன், மு. இளங்கோவனுடன்

எழுத்து / வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றவற்றில் சிறிது முன்னப்பின்னதான் இருப்பார்கள் என்று (என்னை முன்வைத்து) நினைத்துக்கொண்டிருந்தேன். இல்லை. விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் அமர்வுகளில் ராணுவ ஒழுங்கு கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். எழுத்தாளர் சந்திப்புகளின்போது கர்ம சிரத்தையாக நோட்ஸெல்லாம் எடுத்தவர்களைப் பார்த்தேன். பிறகு எழுதி வைத்த குறிப்புகளை வெளியே வந்து விவாதிப்பதையும் பார்த்தேன்.

எந்த அமர்வின்போதும் அரசியல் இல்லை. விதண்டாவாதங்கள் இல்லை. தேவையற்ற பேச்சுகள் இல்லை. இலக்கியம் தவிர யாருக்கும் வேறு எந்த சிந்தனையும் இல்லை. விஷ்ணுபுரக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இருந்தாலும் நேரடியாகக் கண்டபோது சிறிது திகைப்பாகத்தான் இருந்தது.

ஆண்டிறுதி விடுமுறை தினங்களை இந்த விழாவுடன் கோத்துத் திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து பலர் வந்திருந்தார்கள். ஆண்டு தோறுமே அப்படித்தான் செய்கிறோம் என்று சொன்னார்கள். என் மாணவர்கள் சிலரையும் நிகழ்ச்சியில் கண்டேன். பல வருடங்களாக வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஸ்லீப்பர் செல்களால் ஆனது உலகம்.

நெடுநாள் பார்க்காதிருந்த பல நண்பர்களை இந்த இரண்டு நாள்களில் கண்டு, பேச முடிந்தது மகிழ்ச்சியளித்தது. முக்கியமாக சு. வேணுகோபால். முப்பதாண்டுகளுக்கு முன்னர் எப்படி ஒரு பற்றவைத்த தீக்குச்சி போல இருந்தாரோ, அதே போலத்தான் இப்போதும் இருக்கிறார். ‘காற்றுக் கடவு முடிச்சிட்டேன்யா’ என்று உற்சாகமாகச் சொன்னார். முப்பதாண்டுகளுக்கு முன்னர் அதை எழுதுவதற்காகவே பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகை வேலையை விட்டுவிட்டு அம்மாபட்டிக்குத் திரும்பிச் சென்றவர். நடுவில் எவ்வளவோ நடந்துவிட்டது. எத்தனை எத்தனையோ புத்தகங்கள் அவருக்கு வெளியாகிவிட்டன. எவ்வளவோ விருதுகள், அங்கீகாரங்கள். ஆனாலும் அந்த நாவல் அவரது வாழ்நாள் கனவு. அந்நாவலின் கருவை முதல் முதலில் அவர் சொல்லக் கேட்டவன் நான். எனவே அவர் முடித்துவிட்டதாகச் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. எடிட்டிங் தொடங்கிவிட்டதாகவும் ஒரு வருடத்தில் முடிந்துவிடும் என்றும் சொன்னார்.

உரையாடல் அரங்கு

நான் பார்க்க விரும்பி, தள்ளிப் போய்க்கொண்டே இருந்தவர்களுள் ஒருவர் கனலி விக்னேஸ்வரன். அவரைச் சந்தித்தது இன்னொரு மகிழ்ச்சி. விக்னேஸ்வரன் ஒரு தனி நபர் ராணுவம். எந்தளவுக்கு என்றால் நிகழ்ச்சியின் ஏதோ ஒரு கட்டம் சலிக்கிறது என்றால் மறு கணமே அடுத்த இதழுக்கு வந்திருக்கும் சிறுகதை ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு எடிட் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். இரண்டு பக்கம் படித்து ஒழுங்கு செய்துவிட்டுப் புத்துணர்ச்சியுடன் மீண்டும் நிகழ்ச்சியில் ஆழ்ந்துவிடுகிறார். அவரது உரையாடல் அரங்கு செறிவுடன் அமைந்திருந்தது. இணைய வழி சிற்றிதழ் இயக்கத்தின் சிக்கல்களையும் சவால்களையும் புரிந்துகொள்ள முடிந்தது.

இவ்வளவு பிரம்மாண்டமான, கட்டுக்கோப்பான இலக்கிய விழா ஒன்று தமிழ்நாட்டில்தான் நடக்கிறதா என்று இறுதிவரை தோன்றிக்கொண்டே இருந்தது. பின்னணியில் இருப்பவர் ஜெயமோகன் என்றாலும் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினருமே பகுதியளவு ஜெயமோகனாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

இப்படியொரு அமைப்பினை உருவாக்க எவ்வளவு சக்தியைச் செலுத்தியிருக்க வேண்டும்!

விழா உரைகள் தொகுப்பு

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி