ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 11

ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, நா. மகாலிங்கம் அவர்களின் வள்ளலார் – காந்தி மையம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்கினேன். அன்று எனக்குப் பரிசாகக் கிடைத்தது ஒரு புத்தகம். திருவருட்பாவின் உரைநடைப் பகுதி. அன்றிரவே அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி சுமார் பத்து நாள்களில் படித்து முடித்தேன். அப்போது எனக்கு அந்தப் புத்தகம் முழுவதுமாகப் புரிந்தது என்று சொல்ல முடியாது. அரைகுறையாகக் கூடப் புரிந்துகொண்டேன் என்று சொல்லத் தயக்கமாக உள்ளது. ஒரு சில பகுதிகள் புரிந்தன என்று மட்டும்தான் சொல்லலாம். ஆனால் அவரது ஜீவகாருண்யம் என்ற கருத்தாக்கம் மிகவும் சிந்திக்க வைத்தது. உணர்ச்சிவயப்பட்டவனாக, வாழ்நாளில் என்றுமே அசைவம் உண்ணக்கூடாது என்று அப்போது முடிவெடுத்தேன்.

அது பற்றி என் நண்பர்களிடம் சொன்னபோது, ‘பாப்பாரப்பய கறி தின்னாம இருக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?’ என்று கேட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. பிராமணப் பையன்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று விளங்கவில்லை. என் உறவினர்களில் பலர் முட்டையில் தொடங்கி மாட்டுக்கறி வரை விரும்பி உண்பவர்களாக இருந்ததை என்னால் அவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லை. என்னைவிட நான்கைந்து வயது மூத்தவர்களான இரண்டு உறவுக்காரர்கள் அன்று மாட்டுக்கறி சாப்பிடுவதற்காகவே சைதாப்பேட்டையில் இருந்து குரோம்பேட்டைக்கு தினமும் மாலை வேளைகளில் வருவார்கள். காவல் நிலையத்துக்கும் வெற்றி திரையரங்கத்துக்கும் இடையே உள்ள சந்தில் அன்று வரிசையாகத் தள்ளுவண்டிக் கடைகளில் மாட்டுக்கறி வியாபாரம் நடக்கும். சென்னையிலேயே மிகத் தரமான கறி அங்குதான் கிடைக்கும் என்று அதன் ரசிகர்களான என் உறவுக்காரர்கள் சொன்னார்கள். மாலை ஆறு மணி முதல் ஒன்பது, பத்து மணி வரை நல்ல கூட்டம் இருக்கும். பிளாஸ்டிக் தட்டில் பாலித்தீன் தாள் வைத்துக் கறியை அள்ளிப் போட்டுத் தருவார்கள். சில கடைகளில் பொரியல் போலச் செய்வார்கள். சிலர் சென்னா மசாலா போலத் தளர சமைப்பார்கள். எந்தெந்த வகைமைக்கு என்னென்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாம் மாட்டுக்கறிதான். அதில் சந்தேகமில்லை.

அந்தக் கறிக்காகப் பதிமூன்று கிலோ மீட்டர் பயணம் செய்து வருகிற என் உறவினர்கள் இருவரும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். பஸ்கி, தண்டால் எடுப்பார்கள். கர்லாக் கட்டையெல்லாம் சுற்றுவார்கள். பெண்கள் சேலையை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு மார்பை மறைப்பதை எப்படித் தன்னியல்பாகச் செய்வார்களோ, அதே போல இவர்கள் அடிக்கடி சட்டை பொத்தான்களைக் கழட்டி விட்டுக்கொண்டு உள்ளே குனிந்து குனிந்து தமது புடைத்த மார்பைப் பார்த்து மகிழ்வார்கள்.

பேட்டைக்கு அவர்கள் வந்து இறங்கும்போது நான் வெற்றி திரையரங்கின் வாசலில் அவர்களுக்காகக் காத்திருப்பேன். உள்ளூர்க்காரன் என்பதால் பேச்சுத் துணைக்கு என்னை அங்கு வரச் சொல்வார்கள். அந்த வயதில், அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக அசைவம் சாப்பிடுவதைப் பார்ப்பதில் எனக்கும் ஆர்வம் இருந்ததால் தவறாமல் செல்வேன்.

இவர்கள் இப்படி என்றால், இன்னொரு உறவுக்காரப் பெண்மணி தனது குழந்தைக்கு ரகசியமாக தினமும் முட்டை வேகவைத்துத் தருவதை மிகச் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன். ஆம்லெட் மட்டும் சாப்பிடுவேன், எப்பவாவது சிக்கன் சாப்பிடுவேன், வெளியூர் போனால் மட்டும் இதெல்லாம் தவிர்க்க முடியாது என்று வேறு வேறு உறவினர்கள் வேறு வேறு காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு காலக்கட்டத்துக்குப் பிறகு பலபேர் வீட்டிலேயே முட்டை சமைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

எனக்குத் தெரிந்து பொதுவான அசைவ உணவாளர்களுக்கும் பிராமண அசைவ உணவாளர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இவர்கள் முட்டை வேக வைக்கவும் ஆம்லெட் போடவும் தனிப் பாத்திரம் வைத்திருப்பார்கள். வெளியே அசைவம் சாப்பிட்டால் மறக்காமல் அஜந்தா பாக்கு போடுவார்கள்.

இந்த விவகாரத்தில் இவ்வளவு நிலவறைகள் இருக்கும்போது ‘பாப்பாரப்பய சைவம் சாப்பிடுறது ஒரு பெரிய விஷயமா’ என்ற விமரிசனம் எத்தனை பிழைபட்டது! உண்மையில் நான் மரக்கறி உணவு மட்டுமே உண்பவனாக இருப்பதற்கு சாதியோ, குடும்பச் சூழ்நிலையோ காரணமே இல்லை. தரமணியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்குக் கிடைத்த பல பரிசோதனை வாய்ப்புகள் அன்று என் வயதுப் பிள்ளைகள் யாருக்கும் கிடைத்திருக்காது. ஆயினும் உணவு விஷயத்தில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தேன். காரணம், வள்ளலார்.

பத்தாம் வகுப்புக்குப் பின்பு பாலிடெக்னிக்கில் சேர்ந்து, முதல் வாரத்திலேயே அந்தப் படிப்பு எனக்குரியதல்ல என்று தெரிந்துவிட்ட பின்பு எனக்கு உண்டான அச்சங்கள் பலவற்றில் இருந்து விடுபட வள்ளலார்தான் உதவினார். மற்ற சித்தர்கள், யோகிகளைப் போலல்லாமல் எனக்குச் சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்தவர் என்பதாலும், எனது நகரத்திலேயே வாழ்ந்தவர் என்பதாலும் எப்படியும் அவரது தரிசனத்தைப் பெற்றுவிடலாம், கெஞ்சிக் கேட்டு தீட்சை வாங்கிக்கொண்டு ஒரு துறவியாகி நற்கதி அடைந்துவிடலாம் என்று எண்ணிக்கொள்வேன்.

சென்னையில் வசித்த காலத்தில் அவர் விரும்பிச் சென்ற பாரிமுனை கந்தசாமி கோயிலுக்கும் (அவர் கந்த கோட்டம் என்பார்.) திருவொற்றியூர் தியாகராசப் பெருமான் ஆலயத்துக்கும் அவ்வப்போது செல்வேன். பாரிமுனையில் இருந்து திருவொற்றியூருக்கு அவர் நடந்தே செல்வார் என்று படித்துவிட்டு நானும் ஒருமுறை யாத்திரை போல நடந்து போக முடிவு செய்தேன். கல்லூரிக்குச் செல்வது போல வீட்டில் இருந்து காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தாடண்ட நகர் பேருந்து நிலையத்தை அடைந்து, பாரிமுனை செல்லும் பேருந்தில் ஏறி பூக்கடை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். அங்கிருந்து கந்தசாமி கோயிலுக்கு நடந்து சென்று, வாசலிலேயே நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு என் யாத்திரையைத் தொடங்கினேன்.

சரியான வழித்தடம் அறிந்து சென்றால், அங்கிருந்து திருவொற்றியூர் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுதான். ஆனால், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை வரை சரியாகச் சென்றவன், அதன்பின் எங்கோ பாதையைத் தவறவிட்டுவிட்டேன். வழியில் யாருடனும் பேசக்கூடாது, பசித்தால் எதையும் உண்ணக்கூடாது, சென்று சேரும்வரை வள்ளல் பெருமானைத் தவிர வேறு சிந்தனையே இருக்கக்கூடாது என்று சுய விதிமுறைகளை வகுத்துக்கொண்டிருந்ததால் நான்கைந்து மணி நேரம் அலைந்து திரிந்து அவதிப்படும்படி ஆகிவிட்டது.

அன்று திருவொற்றியூர் போய்ச் சேரும்போது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. நாள் முழுதும் நடந்த களைப்பு. கண் இருட்டிவிட்டது. அப்போதுகூட நான் மயங்கி விழும் கணத்தில் வள்ளலார் ஜோதி வடிவில் வந்து என்னை ஏந்திக்கொள்வது போலக் கற்பனை செய்து பார்த்தேன். அந்தக் காட்சி நன்றாக இருந்ததால் திரும்பத் திரும்ப அதையே யோசித்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக எனக்கு மயக்கம் வரவில்லை.

கோயிலுக்குப் போய்விட்டு, அங்கிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ள பட்டினத்தார் சமாதிக்குச் சென்றேன். இன்றளவு அப்போது பட்டினத்தாருக்குப் பார்வையாளர்கள் கிடையாது. அவர் ஏகாந்தமாகக் கடலைப் பார்த்துக் கிடப்பார். பராமரிப்பில்லாத ஜீவ சமாதியாகவே இருந்தது. (2015ம் ஆண்டு பட்டினத்தார் சமாதி செப்பனிடப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது.) காவி உடை தரித்த யாராவது நான்கைந்து பேர் அங்கே வானம் பார்த்துப் படுத்திருப்பார்கள். அவர்களெல்லாம் சாதுக்கள்தானா, வெறும் பிச்சைக்காரர்களா என்று கண்டுபிடிக்க முடியாது. அன்று எனக்கு இருந்த மனநிலையில், காவி தரித்த யாரைக் கண்டாலும் மகானாக இருப்பாரோ என்று தோன்றும். கிட்டே போகும்போது பீடி அல்லது கஞ்சா வாடை இருந்தால் அவர் சாதுவல்ல என்று முடிவு செய்துகொண்டு நகர்ந்து போய்விடுவேன். எவ்வளவு அழகிய அறியாமை! வாழ்க்கை அந்த அழகைத்தான் முதலில் உண்டு செரிக்கிறது.

அன்று பட்டினத்தார் சமாதியில் யாரோ ஒரு பெரியவர் (அவர் காவி அணிந்திருக்கவில்லை) ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கடையில் வாங்கி வந்திருந்த பிரியாணிப் பொட்டலம். உணவுக்கு இடையே தட்டுப்படுபவற்றை அவர் வாயில் இட்டுக் கடித்த விதத்தில் அதை அறிந்துகொண்டேன். எனக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. ‘இது சித்தர் சமாதி. வெளிய போய் சாப்ட்டு வாங்க’ என்று சொன்னேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘சரி தம்பி’ என்று மட்டும் சொல்லிவிட்டு பொட்டலத்துடன் எழுந்தார்.

எனக்கு அது சங்கடமாக இருந்தது. அவர் முறைத்து, வாதம் செய்திருந்தாலோ, நீ யார் கேட்க என்று முழுதும் சாப்பிட்டு முடித்திருந்தாலோ நான் வீறுகொண்டிருப்பேன். உண்மையில் அப்படியொரு தருணத்துக்காக ஆசைப்பட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது. பட்டினத்தாரைக் குறித்தும் வள்ளலாரைக் குறித்தும் நறுக்கென்று அவரிடம் நாலைந்து சொற்கள் வீசிவிட்டுப் போகத் தயாராக இருந்தேன். எதற்கும் வாய்ப்பில்லாமல் அவர் உடனே எழுந்துவிட்டது சிறிது ஏமாற்றமாக இருந்தது.

வெளியே போய் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சமாதிக்கு வந்தார். இப்போது நான் யார், எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டார். நாளெல்லாம் நடந்ததால் உண்டான கடும் கால் வலியும் கல்லூரிப் படிப்பு முற்றிலும் புரியாமல் இருந்த பதற்றமும் எதிர்காலம் குறித்த அச்சமும் அதனாலேயே சன்னியாசியாகிவிட வேண்டும் என்ற வேட்கையும் மிகுந்திருந்ததால், பட்டினத்தாரிடம் என் கோரிக்கையை முன்வைக்கிற பாவனையில் அந்தப் பெரியவரிடம் அனைத்தையும் மனம் விட்டுச் சொன்னேன். வள்ளலார் என்னைத் தடுத்தாட்கொள்ள எப்போது வருவார் என்று எதிர்பார்த்து, திருவொற்றியூருக்கு வந்து போய்க்கொண்டிருந்ததை விவரித்தேன்.

அவர் சிரிக்கவில்லை. நான் மனச்சோர்வு கொள்ள வேண்டும் என்று விரும்பவும் இல்லை. ஆனால் ஓர் உண்மையை எனக்குத் தெரியப்படுத்திவிட நினைத்திருக்கிறார்.

‘நேரத்தோட வீடு போய்ச் சேருப்பா. மெட்ராசுல இப்பல்லாம் அந்த மாதிரி யாரும் இருக்கறதும் இல்ல, வர்றதும் இல்ல. இங்க திரியறவனுகல்லாம் சோத்துக்காகத்தான் திரியறானுக.’

பிறகு நான் திருவொற்றியூருக்குப் போவது மெல்ல மெல்லக் குறைந்து இயந்திரவியல் இரண்டாம் ஆண்டிலேயே முற்றிலும் நின்றுவிட்டது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி