ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 12

சிறு வயதில் என்னைக் கற்பனையிலேயே வாழவைத்த சக்திகளுள் பக்கிங்காம் கால்வாய் ஒன்று. கால்வாய்க் கரை ஓரம் நின்றுகொண்டு, தாகூரைப் போல தாடி வளர்த்துக்கொண்டு கவிஞராகலாமா (ஒரு அமர் சித்ரக் கதைப் புத்தகத்தில் தாகூரின் வாழ்க்கையைப் படக்கதையாகப் படித்த விளைவு) அல்லது சாண்டில்யனைப் போல (வாரம்தோறும் குமுதத்தில் விஜய மகாதேவி) எழுத்தாளராகலாமா என்று தீவிரமாக யோசிப்பேன். அப்படி யோசிக்கத்தான் பிடிக்குமே தவிர, கதையோ கவிதையோ யோசிக்க வராது. கவிஞனாகவோ, எழுத்தாளனாகவோ ஆகிவிட்டது போல எண்ணிக்கொள்வதில் கிடைத்த சுகம், கவிதையோ கதையோ யோசிக்கும்போது இருந்ததில்லை. அதெல்லாம் பிறகு தன்னால் வந்துவிடும் என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்.

கேளம்பாக்கத்தில் வசித்தபோது பக்கிங்காம் கால்வாயில் படகுப் போக்குவரத்து இருந்து பார்த்திருக்கிறேன். அதைவிடவும் சுவாரசியமான காட்சி, சுற்றுலாப் பயணிகளாக வரும் வெளிநாட்டினர் கட்டுமரத்தில் ஏறி சுருட்டு பிடித்தபடி உல்லாசமாகச் செல்வது. அப்போதெல்லாம் உலகில் வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் கவலை என்பதே இல்லை என்று தோன்றும்.

அது உப்பளத் தொழில் நடந்துகொண்டிருந்த பிராந்தியம். கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் வழியெங்கும் பாத்தி கட்டி உப்பு பயிரிட்டிருப்பார்கள். பாத்தி நீர் வற்ற வற்ற மண்ணில் பூக்கும் உப்பு தன் முகம் காட்டத் தொடங்கும். நீர் முற்றிலும் வற்றி நிலம் தெரியும்போது பிராந்தியமே வெளேரென்றிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் உப்புதான். கால்வாயின் மறுபுறம் உப்பள முதலாளிகளின் குடோன் இருக்கும். அதற்கு உள்ளேயும் வெளியேயும் மலை போல உப்பு குவிந்திருக்கும். மிக மிகக் குறைவான அளவே சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை எதற்காக இப்படி மலை மலையாக உற்பத்தி செய்கிறார்கள் என்று அந்த வயதில் எனக்குப் புரிந்ததில்லை. கேளம்பாக்கம், கோவளம், திருவிடந்தை பகுதிகளில் எல்லாம் அன்று ஒரு படி உப்பு நாலணா. அது இரண்டு ரூபாய் ஆனது வரை நினைவிருக்கிறது.

பிறகு நாங்கள் குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்த சமயத்தில் உப்பளத் தொழிலின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. சிறு உப்பள முதலாளிகள் தமது குளங்களை மொத்தமாக டாட்டா போன்ற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டார்கள். கல் உப்பு மெல்ல மெல்ல மறையத் தொடங்கி தூள் உப்பின் ஆதிக்கம் வந்தது. அதிலும் அயோடைஸ்டு உப்பாக இல்லாவிட்டால் குலமே அழிந்துவிடும் என்கிற அளவுக்கு உப்பில் அயோடினையும் அச்சத்தையும் கலந்து வினியோகிக்கத் தொடங்கினார்கள்.

கேளம்பாக்கத்தில் இருந்தவரை உப்பையோ, கால்வாயில் கட்டுமரச் சவாரி செய்யும் வெள்ளைக்காரர்களையோ பார்க்காத நாளே இல்லை. சூழலின் வெண்மை சிந்தனையை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியது. இப்போதும்கூட கல் உப்பைக் காணும்போதெல்லாம் கறுப்புக் கண்ணாடி அணிந்து மேல் சட்டை இல்லாமல் கட்டுமரத்தில் செல்லும் யாரோ ஒரு வெள்ளையர் தோற்றம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. தொடர்பில்லாத இந்த இரு காட்சிகளும் ஒரு குறியீடு போலவே என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

பின்பு, தரமணியில் படித்துக்கொண்டிருந்தபோது பலகை வாராவதியை ஒட்டிய கால்வாய்க்கரை குடிசைப் பகுதிக்கு நண்பர்களுடன் செல்வது வழக்கம். கேளம்பாக்கத்தில் வசித்தபோது பார்த்த கால்வாய் அல்ல அது. திருவான்மியூரில் கால்வாயின் நிறம் வெண்மையல்ல. சரியாகச் சொல்வதென்றால் காலம், கால்வாயின் நிறத்தை நீக்கிவிட்டிருந்தது.

அந்த குடிசைப் பகுதியில் எழுபதுகளின் இறுதிவரை மீனவர்கள் வசித்து வந்ததாகக் கேள்விப்பட்டேன். எண்பத்தாறில் அங்கே மீனவர்கள் யாரையும் நான் காணவில்லை. அவர்கள் தொழிலை மாற்றிக்கொண்டுவிட்டார்களா அல்லது வேறு இடம் போய்விட்டார்களா என்று தெரியாது. நான் பார்த்த காலத்தில் பலகை வாராவதி குடிசைப் பகுதிகளில் வசித்து வந்தவர்களுள் பலர் ஆட்டோ ஓட்டுபவர்களாக இருந்தார்கள். மகாராஷ்டிரா, பஞ்சாப் வரை செல்லும் லாரிகளில் கிளீனராகப் போய்வரும் பையன்கள் இருந்தார்கள். அந்தப் பகுதி பெண்கள் குடிசைக்கு வெளியே அமர்ந்து கீற்றுத் துடைப்பம் செய்வார்கள். அந்தக் காட்சியை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். ஏழெட்டுப் பெண்கள் கூடி அமர்ந்து தென்னை ஓலைகளைக் கீறியெடுத்துத் துடைப்பம் செய்தபடி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சில் பெரும்பாலும் போலிஸ்காரர்கள் வருவார்கள். கௌரிசங்கர் என்ற பெயர் அவர்களால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது.

விசாரித்தபோது, கௌரிசங்கர் என்பவர் அந்தப் பிராந்தியத்தின் பிரபல நபர் என்று தெரிந்தது. ஒரு போலிஸ்காரரையே அவர் அடித்துவிட்ட விவகாரம் எங்கள் கல்லூரி வளாகம் வரை பேசப்பட்டது. சரியாகப் படிப்பு வராத அந்நாளில் வள்ளலார் வழியில் ஒரு துறவியாகிவிடத்தான் திட்டமிட்டிருந்தேன். எதிர்பாராத விதமாக நண்பர்களுடன் பலகை வாராவதி குப்பத்துக்குப் போய் கௌரிசங்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து துறவி ஆவதைவிட ரவுடி ஆவதில் ஆர்வம் உண்டானது.

மத்திய தொழில்நுட்பக் கல்லூரிக்கு வெளியே ஒரு டீக்கடை உண்டு. கல்லூரிக்கும் ஹெல்த் செண்டருக்கும் நடுவே ஒரு மரத்தடியில் ஓலைச் சரிவில் அமைந்திருக்கும். மாணவர்கள், கடைக்கு வெளியே நின்று வடை தின்று டீ குடிப்பார்கள். திருவான்மியூர் குப்பத்தில் இருந்து வருகிறவர்கள் மட்டும் கடைக்கு உட்புறம் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்து டீ குடிப்பார்கள். அவர்கள் பேச்சு அடாவடியாக இருக்கும். எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்கள். ‘ஒர்நாள் இல்ல ஒர்நாள்’ என்ற பிரயோகத்தை அவர்களிடமிருந்துதான் முதல் முதலில் கேட்டேன்.

மாணவர்களுக்கு அவர்களிடம் இருந்தே கஞ்சா அறிமுகமானது. ‘சோத்துக்கள்ளு’ என்னும் பானத்தை அறிமுகப்படுத்தியவர்களும் அவர்கள்தாம். ஒரு ஆட்டோவில் ஐந்தாறு பேர் தொற்றிக்கொண்டு வந்து டீக்கடையில் இறங்குவார்கள். கையில் ஒரு அழுக்கு கேனில் சோத்துக்கள்ளு எடுத்து வருவார்கள். அவர்கள் டீ குடித்துவிட்டு, பையன்களுக்கு சோத்துக்கள்ளை பிளாஸ்டிக் தம்ளரில் ஊற்றித் தருவார்கள். சாராயம் போலத்தான் வாடை இருக்கும். ஆனால் அது சாராயம் அல்ல. பழைய சோறில் தண்ணீர் விட்டுக் குழைத்துக் கூழாக்கி நாலைந்து நாள் கட்டி வைத்து பிறகு அதில் இருந்து திரவம் எடுப்பார்கள். சில சேர்மானங்கள் இருக்கும். ஷேவிங் லோஷன், சிமெண்ட் தூள் போன்றவைகூட அதில் சேர்க்கப்படும் என்று கேள்விப்பட்டேன்.

தடாலடியான பேச்சு, எங்காவது சண்டை என்று தெரிந்தால் உடனே ஆட்டோவில் ஏறிப் பறக்கும் தீவிரம், எப்போதும் அவர்களது பின்னால் ஏழெட்டு மாணவர்கள் அடியாள்களைப் போல நிற்கும் காட்சி, அவர்களுக்கு சோற்றுக்கள்ளும் கஞ்சாவும் இலவசமாகக் கிடைக்கின்றன என்ற தகவல் இவையெல்லாம் மிகுந்த ஆர்வமூட்டின. படிப்பு வராத நிலையில், வள்ளலாரும் காட்சி கொடுக்காதிருந்த சூழ்நிலையில், ஒரு ரவுடி ஆகிவிடுவதே எதிர்காலத்துக்கு நல்லது என்று அப்போது நினைக்க ஆரம்பித்தேன். அடிக்கடி அந்த டீக்கடைக்குச் சென்று அமர்ந்திருப்பேன். வாராவதி தோழர்கள் வரும்போது நட்புடன் புன்னகை செய்வேன். என்றைக்காவது அவர்கள் என்னைப் பொருட்படுத்தி விசாரிப்பார்கள் என்று நெடுநாள் காத்திருந்தேன். அது மட்டும் நடக்கவில்லை. ஒரு ரவுடி ஆவதற்கான முகவெட்டு எனக்கு இல்லை என்று கருதிவிட்டார்கள் போலும். அது வள்ளலாரின் சதியாகவும் இருக்கலாம்.

பின்னாளில் இது பற்றி ஒரு கதை எழுதி, அது கல்கியில் பிரசுரமானதுடன் சரி. ஒரு துறவியாகவோ, ரவுடியாகவோ ஆகும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. கோவளத்தை ஒட்டி பக்கிங்காம் கால்வாய்க் கரையோரம் நின்று கண்ட கனவுதான் பலித்தது. பலகை வாராவதிக் கரையோரக் கனவு இஞ்சினியரிங் படிப்பைப் போலவே நினைவில் இருந்து நகர்ந்து போய்விட்டது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter