
யூட்யூபில் ஸ்ருதி பாலமுரளி என்ற பெண்ணின் சானலை இப்போதெல்லாம் அடிக்கடி திறக்கிறேன். இவர் யார், இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார் என்று அவரது லிங்க்ட் இன் ப்ரொஃபைல் சொல்கிறது. எங்காவது வேலை பார்ப்பவராகவும் இருக்க வேண்டும்.
ஆனால் யூட்யூபில் இவர் காட்டும் முகம் முற்றிலும் வேறு. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றிருக்க வேண்டும். வயலின், புல்லாங்குழல், கீபோர்ட் என்று பல கருவிகளை அநாயாசமாக வாசிக்கிறார். சுமார் அரை மணி நேரம் இவரைக் கேட்டுக்கொண்டே இருந்தால் தமிழ் சினிமாவில் இன்றைக்கு வருகிற பாடல்கள் எது எது வேறு எதெதிலிருந்து பிறந்தது என்பது எளிதில் பிடிபட்டுவிடும். வித்யாசாகர், ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர், ஜிவி பிரகாஷ், இமான் என்று யாரையும் இவர் விட்டுவைப்பதில்லை.
அதைவிட நான் இவரது வாசிப்பில் கவனித்த இன்னொரு முக்கியமான சங்கதி உண்டு. அது, இளையராஜாவுக்குப் பிறகு வந்த எந்த இசையமைப்பாளருக்கும் அதிகபட்சம் பத்து ராகங்களுக்கு மேல் தெரியாது என்பது. ஸ்ருதி பாலமுரளியின் மேஷ்-அப் சீரிஸை மட்டும் தனியே எடுத்துக் கேட்டுப் பார்த்தால் இது புரியும். யுவன், இமான் போன்றோர் அநேகமாக ஒரே ராகத்தில்தான் இதுவரை தந்த மொத்தப் பாடல்களையும் அமைத்திருக்கிறார்களோ என்று தோன்றிவிடும்.
ஆனால் வாசிக்கும்போது இந்தப் பெண் அவ்வளவு அழகாகப் பாடல்களுடன் இரண்டறக் கலந்துவிடுகிறார். இசை இவருக்கு முழு நேரப் பணியல்ல என்று நினைக்கிறேன். முழு நேரமாக மட்டும் இருக்குமானால் மிகப் பெரிய சாதனைகள் செய்யக்கூடியவர் என்று தோன்றியது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.