சைவ நாகஸ்வர மரபை ஆவணப்படுத்திய லலிதா ராமின் பரிவாதினி அமைப்பு இப்போது வைணவ நாகஸ்வரக் கலை மரபை ஆவணப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது மிக முக்கியமானதொரு பணி. நாகஸ்வர இசையின்றிக் கோயில்கள் கிடையாது. குறிப்பாக வைணவ ஆலயங்களின் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைக்கும் பிரத்தியேக இசை இணை உண்டு. உற்சவங்களில் இது உச்சம் பெறும். கோயில்களுக்குப் போகிறவர்களில் எத்தனைப் பேர் அங்கு ஒலிக்கும் நாகஸ்வர இசையை நின்று கவனிப்பார்கள் என்று தெரியவில்லை. எனக்கு அந்தப் பழக்கம் உண்டு. கோயில்களிலோ, திருமண வீடுகளிலோ ரசிக்கும்படியான வாசிப்பு அமைந்துவிட்டால் நான் அங்கே போய் உட்கார்ந்துவிடுவேன். அதைக் காட்டிலும் பெரிய வழிபாடு வேறென்ன.
ஒரு சங்கதி நினைவுக்கு வருகிறது. மிகப்பல வருடங்களுக்கு முன்னர் நான் கல்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஷேக் சின்ன மௌலானா அவர்களைப் பேட்டி எடுப்பதற்காக திருவானைக்காவில் அவர் வீட்டுக்குப் போனேன். சம்பிரதாயமான பேட்டிச் சடங்கு முடிந்தபின் சும்மா பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அவர் மிகவும் சகஜமாகி எனக்காகவே கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டினார். கோடி கொட்டிக் கொடுத்தாலும் இன்னொருவருக்குக் கிடைக்காத பேரனுபவம் அது.
அப்போது அவரிடம் ஒய்யாளி சேவைக்கு வாசிப்பதை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஷேக் சாகிப் மறுக்கவில்லை. மிஞ்சினால் ஐந்து நிமிடங்கள் வாசித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தச் சில மணித் துளிகளில் என் மானசீகத்தில் நம்பெருமாள் நிகழ்த்திய ஆனந்தக் களிநடனம் இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பூட்டுவது.
இறைவனைக் காண மிக எளிய வழி இசை. ஆலய இசை மரபை ஆவணப்படுத்தும் இப்பெரும்பணியை எதிர்வரும் மார்ச் மாதம் செய்யவிருக்கிறது பரிவாதினி. மிகப்பெரிய பொருட்செலவை உள்ளடக்கிய இப்பணியைக் குறித்த முழு விவரங்களை வாசகர்கள் இங்கே பார்க்கலாம்:
வைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி
கலை ஆர்வலர்களின் பொருளுதவி இப்பணிக்கு மிகவும் அவசியம். இதுவரை 1.2 லட்சம் நிதி சேர்ந்திருப்பதாக ராம் அறிவித்திருக்கிறார். இன்னும் தேவைப்படுவது சுமார் நான்கு லட்சம்.
ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட அன்பர்கள் இத்திருப்பணிக்கு உதவினால் சந்தோஷம்.
மேலே உள்ள சுட்டியிலேயே திட்டத்தைக் குறித்த முழு விவரங்களோடு, பணம் செலுத்துவதற்கான வழி முறைகளும் தரப்பட்டுள்ளன.