மூன்று நாள் தஞ்சை பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.
பக்திப் பயணமாகத் தீர்மானித்துக் கிளம்பவில்லை என்றாலும் இந்த முறை தஞ்சைப் பயணத்தில் மூன்று திவ்ய தேசங்கள் சேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கும்பகோணத்தில் ஒப்பிலியப்பன். வெண்ணாற்றங்கரையோரம் உள்ள தஞ்சை மாமணிக் கோயில் (இது த்ரீ இன் ஒன் திவ்யதேசம். நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்மப் பெருமாள் எனத் தனித்தனிக் கோயில்கள். மூன்றும் சேர்த்து ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது. நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார்கள்). மூன்றாவது, கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.
ஒப்பிலியப்பனை விடுங்கள். அவர் சூப்பர் ஸ்டார். எத்தனையோ முறை சேவித்திருக்கிறேன். தஞ்சாவூரில் உள்ள மற்ற நான்கு கோயில்களுக்கும் நான் சென்றது இதுவே முதல்முறை. தஞ்சை மாமணிக் கோயில்களில் உள்ள மூன்று பெருமாளுமே பிரம்மாண்டமான ஆகிருதி. அந்த மணிக்குன்றப் பெருமாளின் அழகு கண்ணிலேயே நிற்கிறது.
இந்தக் கோயில்களை தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் கொஞ்சம் சிரத்தை எடுத்துப் பராமரித்தால் நன்றாக இருக்கும். நல்ல மக்கள் நெரிசல் மிக்க சாலையை ஒட்டித்தான் மூன்று கோயில்களுமே உள்ளன. ஆனால் உள்ளே எட்டிப்பார்ப்போர் அதிகமில்லை. நரசிம்மர் கோயில் சாலையை ஒட்டியே இருந்தாலும் கோயில் அதுதான் என்று கண்டுபிடிப்பதே சிரமம்.
ஆனால் மகிழ்ச்சிக்குரிய விஷயம், இந்த மூன்று கோயில்களுக்குமான ஒரே பட்டாச்சாரியார் சமர்த்தராக இருப்பது. ஸ்பஷ்டமாக அர்ச்சனை செய்கிறார். தெளிவாகத் தலவரலாறு சொல்கிறார். கணப்பொழுதில் பைக்கில் தாவி ஏறி மூன்று கோயில்களுக்கும் மாறி மாறிப் பறக்கிறார்.
தாராசுரத்தில் சந்தித்த ஒரு குருக்களும் (பிரசன்ன கணபதி என்று பேர்) இதே மாதிரி படு துடிப்பான மனிதராக உள்ளார். கோயிலெங்கும் கொட்டிக்கிடக்கும் அத்தனை சிற்பங்களையும் நுணுக்கமாக அணுகி விளக்குகிறார். புராணக் கதை சொல்லுவது பெரிய விஷயமல்ல. இரண்டாம் ராஜராஜன் காலத்து அரசியல் ஓரளவு தெரிந்து, செதுக்கப்பட்ட சிற்பங்களின் புராணக் கதைகளை அதனுடன் பொருத்தி விவரிக்கிற பாங்கு பெரிது.
இந்தக் கோடை விடுமுறையில் என் மகளைப் பொன்னியின் செல்வன் படிக்க வைக்கப் போகிறேன். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்தத் தஞ்சைப் பயணம். கொஞ்சம் அடிப்படை சரித்திரம் சொல்லி, ஆரம்பித்து வைத்தால் வாசிப்பில் ருசி கூடும். படித்து முடித்தபிறகு மீண்டும் ஒருமுறை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறேன்.
அப்போது, ‘தஞ்சை வேண்டாம்; இலங்கை போகலாம்’ என்பாளேயானால் அதுவே இப்பயணத்தின் வெற்றி.