ஒரு விளக்கம்

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்? [ சுட்டி இங்கே]

ராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது.

ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும் 1101-1104 காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்டது விஜய பாலா என்கிற மன்னன். சரித்திரம் பொதுவாக ஒப்புக்கொண்ட தகவல் இது. 1105ல் மகி பாலா என்கிற மன்னன் பட்டத்துக்கு வருகிறான்.  இடைப்பட்ட காலத்தில் (இது மிகச் சிறியதாகவே இருக்கவேண்டும்) யாராவது முகம்மதிய மன்னன் வந்து போயிருக்கலாம். அல்லது வந்தவன் மதமாற்றம் கண்டிருக்கலாம். ஒருவேளை வடக்கே ராமானுஜர் வேறெங்காவதும் சென்றிருக்கக்கூடும். டெல்லி என்ற பொதுவான அடையாளம் யாராலேனும் முன்மொழியப்பட்டு அதுவே பின்பற்றப்பட்டிருக்கலாம். கடைசிச் சாத்தியம், மேற்படி விஜய பாலாவின் காலத்திலேயே சுற்றுவட்டாரத்தில் யாராவது தளபதி அல்லது குறுநில மன்னன் முஸ்லிமாக இருந்திருக்கலாம். சரித்திரப்படி அந்தக் காலக்கட்டத்தில் அங்கே சுல்தானியர் ஆட்சி இல்லை.

ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் ஆண்டுத் தெளிவு பல இடங்களில் சரியாக இல்லை. சரித்திர ரீதியில் அவரது வாழ்க்கை வரலாறை எழுதுவதென்றால் இச்சரிதம் முற்றிலும் வேறொரு விதமாகத்தான் இருக்கும். சிதம்பரம் கோவிந்தராஜரை அவர் திருப்பதியில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்த காலக்கட்டம் தொடர்பாகவே இருவேறு தகவல்கள் உலவுகின்றன. ஶ்ரீபாஷ்யம் செய்து முடித்த பின்பு மேற்கொண்ட திக்விஜயத்தின் இறுதியில் அச்சம்பவம் நடந்ததென்றும், மேல்கோட்டையில் இருந்து அவர் திருவரங்கம் திரும்பிய பின்பு மீண்டும் திருமலைக்கு ஒரு யாத்திரை மேற்கொண்டு இதனை நடத்தி வைத்தார் என்றும் இரு விதமாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதைப் போலவே திருவரங்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து அவர் திருவெள்ளறையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்கிறார் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. கோயிலொழுகில் குறிப்பிடப்படுகிற இச்சம்பவம் வேறெந்த வரலாற்றாசிரியராலும் சொல்லப்படவில்லை.

கோயிலொழுகு, பிரபன்னாமிர்தம் தொடங்கி, இன்று நமக்குக் கிடைக்கும் ராமானுஜர் சரித்திரம் அடங்கிய பிரதிகள் அனைத்தும் இந்தக் காலக் கணக்கைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதால் ஆண்டுத்தெளிவு சாத்தியமில்லாமல் இருக்கிறது. பின்னாளில் வந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அனைவருக்குமே இப்பிரதிகள்தாம் மூல நூல்களாக இருந்திருக்கின்றன. எனவே அவர்களும் அதனை அடியொற்றியே அவரது வரலாறை எழுதினார்கள்.

என் நோக்கம், ராமானுஜரின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அவரைச் சற்றும் அறியாத ஒரு பெரும் சமூகத்துக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவது மட்டுமே. முழுமையான வரலாற்று நோக்கில் இன்னொரு நூல் எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இந்த இயலில் இருக்கின்றன.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!