பொலிக! பொலிக! 96

யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே கிளம்பிப் போகவேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது மன்னன் விஷ்ணுவர்த்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘அது பெரும் காடாயிற்றே. இங்கிருந்து சென்றடையவே பல நாள் பிடிக்குமே சுவாமி?’

‘அதனால் பரவாயில்லை மன்னா. வைணவர்கள் திருமண் காப்பின்றி இருக்கக்கூடாது. பரமாத்மாவான ஶ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது அது. மண்ணிலேயே பரிசுத்தமானது. என்றோ ஒருநாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாகும்போது நாம் நெற்றியில் தரிக்கும் திருமண் காப்பு நம்மைப் பரமனின் அடியார்களென்று நிலமகளுக்கு எடுத்துச் சொல்லும். அவன் பாதம் பற்றிய நம்மைப் பரமபத வாயிலுக்கு இட்டுச் செல்லும்.’

‘சரி, அப்படியானால் நானும் தங்களுடன் வருகிறேன்’ என்றான் விஷ்ணுவர்த்தன்.

மன்னனே கிளம்புகிறான் என்பதால் வீரர்கள் முன்னால் சென்று பாதை அமைத்துக்கொண்டே போனார்கள். ஒரு வாரப் பயணத்தின் இறுதியில் யதுகிரியை அடைந்தார்கள். அன்று பகுதான்ய வருடத்தின் தைமாதப் பிறப்பு. வேத புஷ்கரணியின் கரைக்கு வந்து நின்ற ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். கனவில் பெருமான் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கினார். ‘ஆ, அதோ பாருங்கள்! மேலே கருடன் பறக்கிறது!’ என்றான் ஒரு வீரன். ராமானுஜர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு அனைத்தும் புரிந்தது.

அது புள்ளரையன் கோயில். எம்பெருமான் உத்தரவின் பேரில் ஸ்வேதத்வீபத்தில் இருந்து கருடன் எடுத்து வந்து சேர்த்த பரிசுத்தமான மண்.

‘புரியவில்லையே சுவாமி! ஸ்வேதத்வீபம் என்றால்?’

 

‘எம்பெருமான் பிரம்ம வித்யையை அறியத் தவம் இருந்த தீவு அது. பாற்கடலுக்கு வடக்கே வெகு தொலைவில் உள்ள இடம்.’

‘யாருமற்ற தீவா?’

‘கண்டவர் நம்மில் யாரும் இல்லை. ஆனால் வேதங்களில் அந்தத் தீவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெய்வ நிலை அடைந்த பல மெய்ஞானிகள் அங்கு உண்டு. அவர்களுக்கு உணர்ச்சி கிடையாது. பசி தாகம் கிடையாது. உறக்கமோ விழிப்போ கிடையாது. பாவமற்ற பரிசுத்தமான ஆத்மாக்களான அவர்களின் தேகங்களில் இருந்து தெய்வீக மணம் வீசும். நான்கு கரங்களும் அறுபது பற்களும் கொண்டவர்கள் அவர்கள்.’

‘கேட்கும்போதே சிலிர்க்கிறதே. அந்தத் தீவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணா இது?’

‘ஆம். கருடாழ்வார் எடுத்து வந்து சேமித்து வைத்திருக்கிறார்.’ என்றவர், சட்டென்று தமது திரிதண்டத்தால் அந்த இடத்தைத் தொட்டு சிறிதாகக் குத்தினார். வறண்டு, இறுகிக் கிடந்த அந்த இடத்தின் மேற்புறம் மறுகணம் நெகிழ்ந்து கொடுத்தது. வீரர்கள் உடனே அங்கு குவிந்து கரங்களால் தோண்ட ஆரம்பித்தார்கள்.

தோண்டத்தோண்ட மண்ணின் தோற்றம் மாறிக்கொண்டே வந்தது. அதன் பழுப்பு மெல்ல மெல்ல உதிர்ந்து வெண்மை நிறம் காட்டத் தொடங்கியதும் வீரர்கள் உற்சாகமாகி மேலும் வேகமாகத் தோண்டினார்கள். சரேலென்று ஒரு கட்டத்தில் மண்ணின் நிறம் முழு வெண்மையாக இருப்பதைக் கண்டார்கள்.

‘இதோ திருமண்! இதுதான் திருமண்! இந்த உலகில் இதனைக் காட்டிலும் தெய்வீகமான மண் வேறில்லை. இந்த இடத்தில் இது யுகம் யுகமாக இருந்து வருகிறது. இனி எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் வைணவர்கள் வந்தாலும் அவர்களின் நெற்றியை அலங்கரிக்க இம்மண் வற்றாது தோன்றியபடியே இருக்கும்!’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் ராமானுஜர்.

விஷ்ணுவர்த்தனின் வீரர்கள் அங்கே சேகரித்த திருமண்ணை கவனமாகக் கூடைகளில் எடுத்துக்கொண்டார்கள். மறுநாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று திருமண் சேகரிக்கும் பணி தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஒருநாள் காலை குளித்து, பூஜை முடித்து, திருமண் சேகரிக்க அந்த இடத்துக்கு வரும்போது ஓரிடத்தில் புற்று ஒன்று இருப்பதை உடையவர் கண்டார். அதனைச் சுற்றி துளசி வளர்ந்திருந்தது. ஒரு கணம்தான். அவர் மனத்தில் ஏதோ பட்டது. புற்றும் துளசியும். கையெட்டும் தூரத்தில் திருமண் வேறு தோண்டத்தோண்டக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியானால்?

‘மன்னா நில்!’ என்றவர், தமது திரிதண்டத்தால் அந்தப் புற்றைத் தொட்டுக் காட்டினார்.

‘சுவாமி? இது வெறும் புற்று.’

‘ஆனால் எனக்கென்னவோ உள்ளே இருப்பது ஆதிசேஷனாகத் தோன்றவில்லை. அவன்மீது சயனிப்பவனே இங்கு இருக்கிறான் என்கிறேன். பார்த்துவிடலாமா?’

யாருக்கும் எதுவும் புரியவில்லை. அடுத்தடுத்து நிகழும் அதிசயங்கள் அளித்த பரவசத்தில் இருந்தார்கள். உடையவர் சொன்னால் செய்துவிட வேண்டியதுதான். உத்தரவிடுங்கள் சுவாமி.

அந்தப் புற்றை அகழ்ந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

யதுகிரி நாயகன் அந்த இடத்தில் மண்ணுக்கடியில் மோனத்தவம் இருந்துகொண்டிருந்தான். ‘ஆஹா! ஆஹா!’ என்று தலைக்குமேல் கரம் கூப்பிக் கூத்தாடினான் விஷ்ணுவர்த்தன். வீரர்கள் திகைத்துப் போய் கைகட்டி நின்றார்கள்.

‘விஷ்ணுவர்த்தா! நீ புண்ணியம் செய்தவன். உனக்கு முன் எத்தனையோ மன்னர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள். ஆனால் உன் காலத்தில்தான் எம்பெருமான் தன்னை இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். இனி நீ என்ன செய்யப் போகிறாய்?’

கிறுகிறுத்துப் போயிருந்த மன்னன் உடனே தன் வீரர்களை அழைத்தான். தலைநகருக்குச் செய்தி அனுப்பி மேலும் ஆயிரமாயிரம் வீரர்களையும் தொழிலாளர்களையும் அங்கு வரச் சொல்லி உத்தரவிட்டான்.

‘சுவாமி, இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இந்த இடத்தில் நான் இப்பெருமானுக்குக் கோயில் எடுப்பேன். என்றென்றும் உற்சவங்கள் தங்குதடையின்றி நடைபெற வழி செய்வேன். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று மட்டும் நீங்கள் பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுங்கள்!’ என்றான் மன்னன்.

உடையவர் மூன்று நாள்களுக்குப் பெருமானைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். பாலால் திருமஞ்சனம் செய்து, தியானித்தார். மறுபுறம் காட்டைத் திருத்தும் பணிகள் ஆரம்பித்து வேகமெடுத்தன. கண்ணெதிரே ஒரு குன்றம் சார்ந்த நகரம் உருவானது. மக்கள் தேடித்தேடி வந்தார்கள். கோயில் எழுந்தது. உடையவர் தாம் கண்டெடுத்த பெருமானை அங்கு கொண்டு பிரதிஷ்டை செய்தார். ஆலயக் குடமுழுக்கும் ஆகம கைங்கர்யங்களும் செம்மையாக நடந்தேறின.

‘உடையவரே, இந்நகருக்கு ஒரு பெயர் சூட்டுங்கள்’ என்று கேட்டுக்கொண்டான் விஷ்ணுவர்த்தன்.

‘நாராயணன் வந்துதித்த தலமல்லவா? திருநாராயணபுரம் என்பதே இந்நகரின் பெயராக இருக்கட்டும்’ என்றார் ராமானுஜர்.

மூலவர் கிடைத்துவிட்டார். ஒரு பிரம்மோற்சவம் நடத்தலாம் என்றால் உற்சவர் விக்கிரகம் வேண்டுமே?

உடையவர் மனத்தில் ஒரு சொல்லாக உற்சவர் உதித்தார்.

‘நான் ராமப்ரியன். டெல்லி சுல்தான் அரண்மனையில் இப்போது இருக்கிறேன்.’

(தொடரும்)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading