பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது.
‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை. பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும் அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும்.
நமது பிறப்பு அப்படி.
ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும் எதிரெதிர் திசையில் பயணம் செய்வது இக்காலத்தின் இலக்கணமே. இது எம்பெருமானுக்கு மட்டும் தெரியாதா என்ன?
தெரியாமல்தான் இருந்திருக்கிறது என்பது ஒரு கதையில் தெரியவந்தது.
ராமானுஜர் திருக்குறுங்குடிக்குப் போயிருந்தபோது, குறுங்குடி நம்பி ஒரு சமாசாரம் கேட்கிறான். ‘சுவாமி, உம்மை ஒன்று கேட்க வேண்டும். நானும் எத்தனையோ காலமாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொண்டுதான் வருகிறேன். ராமாவதாரத்தில் வாழ்ந்தே காட்டினேன். ஒரு பயல் புரிந்துகொள்ளவில்லை. கிருஷ்ணாவதாரத்தில் நட்டநடு யுத்தக் களத்தில் நிறுத்திவைத்துப் பாடம் எடுத்தேன். யாரும் மதிக்கவில்லை. ஒவ்வொரு அவதாரத்திலும் என்னவாவது சொல்லிக்கொடுத்து திருத்திப் பணி கொள்ள முடியாதா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். யாரும் மதிக்கவே மாட்டேனென்கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி ஜனங்களை இழுத்து வைத்துக்கொண்டு சாதித்துவிடுகிறீர்கள்? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறார்களே! நான் கூப்பிட்டு என் பக்கம் திரும்பாதவர்களெல்லாம், நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு இந்தப் பக்கம் வருவதன் மாயம் என்ன?’
‘நல்ல கேள்விதான். ஆனால் உபதேசமாக அல்லவா கேட்கிறீர்? எனவே கேட்கும் விதத்தில் கேளும்’ என்றார் ராமானுஜர்.
உடனே பெருமான் அவருக்கு ஒரு பீடம் தருவித்து அமர வைத்து, தன் பீடத்தில் இருந்து இறங்கி வந்து பவ்யமாக, சிஷ்ய பாவத்தில் கேட்க ஆரம்பித்தபோது ராமானுஜர் அந்த ரகசியத்தைச் சொன்னார்.
‘எனக்கு உமது திருநாமம் இருக்கிறது. அதை தியானம் செய்துகொண்டு, பக்தியுடன் போதிக்கிறேன். அதனால் நான் சொல்லுவதை மக்கள் கேட்கிறார்கள். உமக்கு அப்படி என்ன இருக்கிறது? நீரே பரமாத்மா என்பதை இனி நாங்கள் சுட்டிக்காட்டி, செய்யவேண்டியதைச் செய்துகொள்கிறோம். வந்து சேருவோரை நீர் அரவணைத்து அருளாசி வழங்குங்கள்; அது போதும்!’ என்றிருக்கிறார்.
பகவானைவிட பகவான் திருநாமத்துக்கு சக்தி அதிகம் என்பதல்ல இதன் செய்தி. பகவானே ஆனாலும் நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொள்வதைவிட, இவந்தான் கடவுள் என்று இன்னொரு பொருத்தமான நபர் சுட்டிக்காட்டுவதே பலனளிக்கும் என்பதே செய்தி.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.