குசலவபுரி என்கிற கோயம்பேடு

வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது?

கோயம்பேட்டில் ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். கேள்விப்பட்டதுதான். போனதில்லை. அக்கோயில் ராமாயணத்துடன் ஏதோ வகையில் சம்மந்தப்பட்டது என்றும் காதில் விழுந்திருந்தது. இன்று நேரில் சென்றதால் விவரம் அறிந்தேன்.

முன்னொரு காலத்தில் வால்மீகி முனிவர் கோயம்பேட்டில் ஆசிரமம் கட்டி வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழ் ஈழத்தாரால் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி, குடும்பம் நடத்தி கர்ப்பவதியான சீதை, முனிவரின் இந்த ஆசிரமத்துக்குத்தான் வந்து தங்கியிருந்திருக்கிறாள். அதாவது கர்ப்பகாலம் முழுதும். அம்மா வீடு ஏன் அவரைக் கைவிட்டது என்பது குறித்த சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லையாதலால் அதற்குள் நாம் நுழைய வேண்டாம். சீதையானவள் வால்மிகி முனிவரின் கோயம்பேடு ஆசிரமத்தில் வசித்து, அங்கேயே இரட்டைக் குழந்தைகளைப் பெற்று, கொஞ்சகாலம் அங்கேயே வளர்க்கவும் செய்திருக்கிறாள்.

வால்மிகி முனிவரிடம் பாடம் படித்து வளர்ந்த லவனும் குசனும் ஆசிரமத்துக்குப் பக்கத்திலேயே கோயில் கொண்டிருந்த சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள். அந்தச் சிவன் கோயிலுக்குப் பக்கத்திலேயே வால்மிகி ஆசிரமம் இருந்த இடத்தில் சிலபல நூறாண்டுகளுக்கு முன்னர் வைகுந்தவாசப் பெருமாள் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு போன்ற ஒரு ஜனசந்தடி பிரதேசத்தில் இப்படியொரு அமைதியான கோயில் இருக்குமென்று நான் நினைத்ததில்லை. குலோத்துங்க சோழன் (எத்தனையாவது என்று தெரியவில்லை) கைங்கர்யம் செய்திருப்பதாகத் தகவல் பலகை தெரிவிக்கிறது. பழைய கோயில்தான். சந்தேகமில்லை. ஆனால் பழசுமில்லாத, புதுசுமில்லாத ஒரு ரெண்டுங்கெட்டான்தனத்தை அவ்வப்போதைய கைங்கர்யர்கள் கவனமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பக்கத்து சிவன் கோயிலுடன் ஒப்பிட்டால், பெருமாள் கொஞ்சம் ஏழைதான் போலிருக்கிறது. சிவனார் பெரிய கோபுரம், சமீபத்திய கும்பாபிஷேகம், ஆரவாரமான பூஜை புனஸ்காரங்களுடன் ஜோராக இருக்கிறார். வைகுந்தவாசப் பெருமாள் ஏனோ தமிழ் எழுத்தாளன் மாதிரிதான் இருக்கிறார். புராதனமான இக்கோயிலுக்கு ஒரு முகப்புக் கோபுரம்கூட இல்லை. தாயாருக்கு (கனகவல்லித் தாயார்) தனி சன்னிதி இருக்கிறது. ஆனால் தனி பட்டாச்சாரியார் இருப்பதாகத் தெரியவில்லை. பெருமாள் சன்னிதி பட்டரிடம் கேட்டபோது, கொஞ்சநாழி காத்திருந்தா தாயார் சன்னிதி திறக்கலாம் என்று சொன்னார்.

இந்தக் கோயிலில் ராமர் சன்னிதி ஒரு விசேஷம். ராமரும் சீதையும் மட்டும்தான். ஆஞ்சநேயர் கிடையாது. லட்சுமணன் கிடையாது. வசிஷ்டன் புனைந்த மௌலியை ராமர் கழட்டி வைத்திருக்கிறார். மரவுரிதான். சீதைகூட கோடாலிக் கொண்டை போட்ட கோலத்தில்தான் காட்சி கொடுக்கிறாள். புருஷன் பெண்டாட்டி சண்டை முடிந்து கொஞ்சநாள்தான் ஆகியிருக்கும் போலிருக்கிறது. ஆசிரமத்திலிருந்து அழைத்துப் போக வந்திருக்கிறார்.

கோயிலைவிட்டு வெளியே வந்ததும் லவனும் குசனும் எங்கே என்று என் மகள் கேட்டாள். ரொம்பக் கவனமாக அவர்களைக் கடவுளாக்காமல் விட்டிருப்பதை மனத்துக்குள் ரசித்தபடி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே உள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாட விட்டுவிட்டேன்.

வாய்ப்பிருந்தால் கோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாளைச் சென்று சேவித்துவிட்டு வாருங்கள். பஸ் ஸ்டாண்ட் தாண்டி, சிக்னல் தாண்டி, மேம்பாலத்தின் அடியில் இடதுபுறம் திரும்பினால் இருநூறடியில் மீண்டுமொரு இடது வளைவு. வால்மீகி காலத்தில் இந்த இடம் பெரிய காடாம். இப்போது சதுர அடி ரூபாய் ஐயாயிரத்துக்குக் குறையாது.

Share

20 comments

  • ஹலோ, திருவான்மியூர்தான் வால்மிகி இருந்த இடம் என்று கதை; அங்கே வால்மிகிக்கு கோவில் கூட உண்டு. இது என்ன புது வரலறு?.

    • நல்ல கதையாக இருக்கிறதே. அத்தனை பெரிய மகரிஷி. இரண்டு ஆசிரமங்கள் வைத்துக்கொள்ளக்கூடாதா? ஒருவேளை கெஸ்டாசிரமமாயிருக்குமோ?

  • நான் இப்போது கோயம்பேட்டில் தான் வசிக்கிறேன். பசுக்களை லவகுசா பராமரித்த மேடுதான் – கோ இருந்த மேடுதான், கோயம்பேடாய் மறுவியது.

  • உங்களிடம் முன்பு ஒரு முறை மாடம்பாக்கம் கோவில் பற்றிச் சொல்லியிருந்தேன் … அது பொன்னியின் செல்வன் காலகட்டத்தில் கட்டப்பட்டது என நினைக்கிறேன் .. கல்வெட்டில் சுந்தரசோழன் ,அநிருத்தர் பெயர்கள் இருக்கும். அங்குச் சென்று இருக்கிறீர்களா ? தாம்பரத்தில் இருந்து 6 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

  • கவனிப்பில்லாமல் கிடக்கும் கோவிலை பார்த்தாலே “என்னிடம் ஒரு வரலாறு இருக்கு” என்று சொல்வதை போல் தோன்றும். நான் பிறந்த கிராமம் தேருக்கு புகழ்பெற்ற திருவாரூர் மாவட்டத்திலுள்ள காக்கையாடி என்ற ஊரும் இராமாயணத்துடன் தொடர்புடையது தான். சீதாபிராட்டிக்கு கெடுதல் விளைவித்து சாபம் பெற்ற காக்காசுரன் விமோசனமடைந்ததால் இப்பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இங்கு கூட குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ஒரு கோவில் இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.

  • ஏன் ரெண்டு ஆஸ்ரமமா இருந்திருக்கணும்? ஒரே ஆஸ்ரமம் அவ்ளோ பெருசா இருந்திருக்கக் கூடாதா என்ன? இப்போதைய ஆனந்தமயமான குருஜிக்களே ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டு ஆஸ்ரமம் கட்டும்போது ராமருக்கே குல குருவாய் இருந்தவருக்கு இவ்ளூண்டு சென்னைய சுத்தி வளைச்சிருக்குமளவு செல்வாக்கு இருந்திருக்காதா என்ன?

  • திருவான்மியூரிலிருந்து ’வால்மிகி, நகர்’, என்று சொல்லுவார்கள் அதோடு மெட்ரோ ரயில் எல்லாம் வரப்போகிறது என்பதை ஞானதிருஷ்டியினால் உணர்ந்த அப்பெருமுனிவன், கோயம்பேட்டிற்குக் குடிபுகுந்தான் என்ற வரலாற்று (வரல இல்ல, விடேன்) உண்மையை அறிவோமாக. 🙂

  • பாரா… வடபழனியில் வால்மீகி என்று மெரினா (பரணீதரன்) 60களில் ஒரு தொடரை விகடனில் எழுதியிருக்கிறார். பின்னர் அதை நாடகமாக்கினார். அதிலேயும் கோயம்பேடு வருகிறது. அது சரி.. //தமிழ் ஈழத்தாரால் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி, குடும்பம் நடத்தி கர்ப்பவதியான சீதை, முனிவரின் இந்த ஆசிரமத்துக்குத்தான் வந்து தங்கியிருந்திருக்கிறாள்.// இதென்ன புது கண்டுபிடிப்பு ? இதில் தமிழ் ஈழம் எங்கிருந்து வந்தது ?!

  • வரலாற்றை திரித்த பாவத்துக்கு உங்களை கம்யூனிஸ்ட்டுகளே திட்டப்போகிறார்கள். இத்தனை பெரிய தண்டனை கிடைத்திருக்கவேண்டாம்.

  • வால்மீகி ஆஸ்ரமம் முதலில் திருவான்மியூரில்தான் இருந்ததாகவும்,சீதாதேவி வருகைக்குப்பின்னர் சற்று அதிக இடம் தேவைப்படவே, அவர், அவர்களை கோயம்பேட்டில் வசிக்கசெய்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
    அவ்வாறு சீதாதேவி கைக்குழந்தைகளான லவன் மற்றும் குசனுடன் கோயம்பேடு நோக்கி செல்லும்போது ,வழியில் பசியால் அவர்கள் அழ உடனே அங்கே அவர் நின்று,ஒரு கிண்டியில் பால் கொடுத்த அந்த இடமே “கிண்டி” என அழைக்கப்படுகிறது என்றும் ஒரு தல புராணம் சொல்கிறது.

  • ko ayam bedu ramapiranin aswametha yagathin pothu valam vantha kuthiraikalin irumbu chuvadugalin kal patham patta boomi thann ko ayam bedu. antha aswametha yaga kuthiraikalai lavan kusa thaduthu niruthiyathal ramanukku theriapaduthi raman awarkalidam porida vantha thagavum athai aduthey lananum kusanum ramanin mahankal than ena theriavanthathagavum antha kalathil dandakaranya vanappaguthi vadanatin ippothaiya chattiskar paguthiyilirunthu tamilagam varai irunthathagavum ariyappadugirathu. melum siruvapuri enum murugan koil ulla paguthiyilthan siruvarkalana lavanum kusanum porepurinthathagam oru thodar seithiyum ariyappadugirathu. ippaguthigalai ulladakkiya vada thamilhzakathin paguthiyai vagula aranyam enavum hanuman seethaiyai thedi elangai chellum pothu kurppidum valhzippaguthiyaga ramayanathil kurippum irrupathagavum theriavarugirathu

  • பாரா,
    (ராவணன் தமிழன் இல்லையா? ஈழ மன்னனும் இல்லையா? அட ராமா.)

    ராவணன் ஈழ மன்னன்தான்..அவனது வம்சத்தவர்தான் இன்றும் ஈழத் தமிழர்களை அழித்தொழித்துக் கொண்டிருக்கின்றனர்.

    அந்த சிங்களர்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வட இந்தியாவின் ஆரியக் குடிகளிலிருந்து போயிருக்கக் கூடும் வாய்ப்பிருக்கிறது.

    இந்தத் தல புராணமும் குசலவபுரிக் கோயிலின் ஓரத்தில் இருந்து கல்வெட்டில் இருந்ததே,பார்க்க வில்லையா?

  • சுருட்டப் பள்ளின்னு தமிழக ஆந்திர எல்லையில் ஒரு கோவில் இருக்கு. சிவன் பார்வதி மடியில் ஆலக்கால விஷ மயக்கத்தில் தாச்சிண்டிருப்பார் . 11 feet.
    மூலஸ்தானம் லிங்கம் வால்மீகி பிரதிஷ்டை செய்ததாம்.
    அங்கேயும் வால்மீகி லவ குச எல்லாம் வருது. ஒரு கல்லில் குஞ்சு குஞ்சு பாதங்கள். நம்ம ட்வின் பரோஸ் உடையதாம். சீதையை மீட்டு வந்த ராமர் ராமேஸ்வரத்தில் செய்த சிவ பூஜை அடுத்து இங்கேயும் வந்து செய்ததாக ராமர் லிங்கம் with ராமர் சீதை and சகோ க்களோடு காட்சி தருகிறார்கள் .

    அப்படியே கொஞ்சம் சிறுவா புரி வந்தீங்கன்னா முருகன் கோவில். அஸ்வமேதக் குதிரையை மீட்க வந்த சித்தப்பா லட்சு வோடு லவ் குச டிஷ் டிஷ் பண்ணி மயங்க வைத்த இடம்.
    இப்போ லிங்க் கொஞ்சம் connect ஆகுதோ?
    அதாகப் பட்டது கோ அயம் பேடு – அரசனின் குதிரையை அடைத்து வைத்த லவ் குச சுருட்டப் பள்ளியில் துள்ளி விளையாடி கோயம்பேட்டில் அரசனின் குதிரையை அடைத்து ‘சிறுவர் அம்பு எறி’ யில் …. என்று போகுது ராமாயணம்.

  • குருங்காலீஸ்வரர் ( லவ் குச வின் தேர் ஏறியதால் குருங்கி விட்ட ஈஸ்வர்.) அப்பா ராமாரையே போருக்கு அழைத்த பாவம் நீங்க பலா மரத்தின் கீழ் வழிபட்ட சிவன் என்பது இக்கோவில் புராணம் . பெருமாள் கோவிலில் நம்ம சீதை பிள்ளை தாச்சியாய் இருக்கிறாள். ஆஞ்சநேயர் இருக்கிறார். தனியே பெருமாள் கோவில் எதிரில் தெப்பக் குளம் அருகே. நடுவில் சிவன் கோவில் முன் மண்டபம் சரபேஸ்வரர் மண்டபம். தூண்களில் ராமாயண புடைப்பு சிற்பங்கள் .

    பா ரா அது எப்படி நீங்க பெருமாளை மட்டும் சேவிக்க சொல்லி recommend செய்யலாம்.

    கொசுறு செய்தி. கோயம்பேடு இக்கோவில் சொத்தாம். முக்கியமா அந்த பேருந்து நிலையம். செவி வழிஞானம்.

  • உணவின் வரலாற்றைப் போல இடங்களின் பெயர்காரணங்களை வைத்து மற்றொரு கட்டுரைத் தொகுப்பு எழுதலாமே. இல்லை இல்லை கதைத் தொகுப்பு எழுதலாமே.

  • இந்த சுருட்டப்பள்ளி பற்றிய என் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குறிப்புகள் இதோ! :

    http://www.writerlaram.com/tamil/?p=128

    கோயம்பேட்டை எப்படி இதனுடன் கனெக்ட் செய்வது என்பது நீங்கள் போடவேண்டிய ரூட்!

  • அந்தக் குரோம்பேட்டை அழிச்சாட்டிய மாமா பற்றிக் குறிப்பிட்டதும் உங்களது பழைய கதை சொல்லும் ஸ்டைல் நினைவு வந்தது. என் போன்ற பாமரர்களுக்குப் பிடித்த அந்த பாணியை விட்டுட்டு ஏன் திடீர்னு மேஜிக்கல் ரியலிஸத்துக்கு மாறினீர்கள்? (கேளம்பாக்கம் பற்றிய உங்கள் வர்ணனைகள் சுவையாக இருக்கும்.) இப்ப உங்க சிறுகதைகள் கல்கியில் காணோம். வேறு எதிலாவது சிறுகதை எழுதுகிறீர்களா? படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி