ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம் சூனியனுக்குள் இருக்கும் ஒரு புதிய திறனை அறிந்து கொள்கிறோம். இந்த அத்தியாயத்தில் சூனியனுக்கு தொலைவில் வரும் போதே மூடர்களை கண்டு கொள்ளும் சக்தியெல்லாம் இருக்கிறதாம். ஒலிம்பிக் ஜோதி போல இரவு ராணி மலரைத் தூக்கி வரும் கோவிந்தசாமிக்கும் நம் சூனியனுக்கும் இடையேயான உரையாடல் சண்டையில் முடிகிறது. சூனியனை சபித்து விட்டு ஓட்டம் பிடிக்கிறான் கோவிந்தசாமி.
இதற்குப் பிறகான கதையைச் சூனியன் இப்படி தான் நடக்குமென நம்மிடம் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் அப்படி தான் நடந்ததா என்று தெரியவில்லை.
கோவிந்தசாமி ஷில்பாவை சந்தித்து, ஒரு முறை சாகரிகாவை சந்திக்க வேண்டுமெனச் சொல்லுவான். ஷில்பா இதைப் பயன்படுத்தி கொண்டு, பூவெல்லாம் கொடுக்காதே, ஒரு சமஸ்தானத்தை அமைத்துச் சாகரிகாவின் புகழ் பாடு, உன் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவேளை உன்னை மன்னிக்கலாமெனச் சொல்வாள்.
சாகரிகா ரசிகர் வட்டம் என ஏற்கனவே பதிவு இருப்பதால், சாகரிகா கோவிந்தசாமி ரசிகர் வட்டம் என்ற பெயரைப் பதிவு செய்து அதை வெண்பலகையில் அறிவிப்பான். கோபம் கொள்ளும் சாகரிகா நிழலை முத்தமிட்டு காதலை சொல்லி, கோவிந்தசாமியை கொல்ல சொல்லி நிழலை ஏவி விடுவாள். இப்படியாக ஒரு கதையைச் சூனியன் நம்மிடம் ஜோடிக்கிறான். இதெல்லாம் நடந்ததா?
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!