அவர் சாமியாராகப் போன கதையை எத்தனை முறை அவரைச் சொல்ல வைத்துக் கேட்டிருப்பேனோ, கணக்கே கிடையாது.
‘நானும் ஆசைப்பட்டு அலைஞ்சிருக்கேன் சார். ஆனா நடக்கலை. நீ பொருந்தமாட்டன்னு தபஸ்யானந்தா சொல்லிட்டார் சார். அதைத்தான் தாங்கவே முடியலை’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்.
‘அவ்ளோதானா? பொருந்தமாட்டேன்னா சொன்னார்? தப்பாச்சே. ஓடிப்போயிடு; சன்னியாச ஆசிரமத்தையே நாறடிச்சிடுவேன்னு அடிச்சித் துரத்தியிருக்கணுமே’ என்றார்.
அப்பழுக்கற்ற மகான்களை எனக்குச் சுட்டிக்காட்டியவர் அவர்தான். குமுதம் துணை ஆசிரியராக, நகைச்சுவை எழுத்தாளராகத்தான் அவரை உலகம் அறியும். ஆனால் இந்திய ஞான மரபு குறித்தும் தத்துவங்கள் குறித்தும் அவரளவு அறிந்தவர்களும் தேர்ந்தவர்களும் குறைவு. இழுத்துப் பிடித்துக் கிளறிக்கொண்டே இருந்தால்தான் பேச ஆரம்பிப்பார். கீதையை ஏன் ஒருவன் படிக்கவேண்டும் என்று அரை மணி நேரம் எனக்கு அவர் சொல்லிக்கொடுத்ததன் பிறகுதான் நான் அதைப் பொருந்திப் படித்தேன். முதல் முதலில் கோரக்பூர் கீதா பிரஸ் வெளியீடான கீதை உரை ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்து, ‘இதைக் காட்டிலும் எளிய உரை வேறில்லை’ என்று சொன்னார்.
என்னிடம் எப்போதும் அந்த உரையின் பத்து பிரதிகளாவது இருக்கும். என்னைக் காண வரும் நண்பர்களுக்கு அன்பளிப்பாக இன்றுவரை அதைத்தான் தருகிறேன்.
ஜகத்குருவான கண்ணனின் பாதாரவிந்தங்களில் இனி அவர் இளைப்பாறப் பிரார்த்தனை செய்கிறேன்.
போய்வாருங்கள் ஜராசு சார்.