நகரெங்கும் நேற்று நல்ல மழை பெய்திருக்கிறது. காற்றின் ஈரம், பதமான குளிர்ச்சியைத் தருகிறது. இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்.
என்னை முந்திக்கொண்டு விரைந்த கார் ஒன்று ஓரத்தில் தேங்கிய நீரை வாரி இறைத்துச் செல்ல, எனக்கு முன்னால் போன பைக் உரிமையாளர் உடலெங்கும் சேற்று நீர்.
நபருக்குக் கோபம் வந்துவிட்டது. ஒரு படு பயங்கர சேசிங் காட்சியை எதிர்பார்த்திருந்தேன். மாறாக அவர் வண்டியை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு இறங்கினார். கனத்த கல்லொன்றை எடுத்து, முன்னால் விரைந்த காரின்மீது குறி பார்த்து எறிந்தார்.
அவ்வளவுதான். காரின் பின் கண்ணாடி நொறுங்கிச் சிதறிவிட்டது.
இப்போது கார் நின்றுவிட்டது. ஹேண்ட் ப்ரேக் போட்டுவிட்டு ஓட்டுநர் இறங்கி வருவதற்குள் மேற்படி பைக் உரிமையாளர் தனது வண்டியில் ஏறிப் போயேவிட்டார்.
பின்னால் வந்துகொண்டிருந்த ஒரே பார்வையாளனும் ஒரே சாட்சியுமான நான் [என் வண்டியானது மணிக்கு பத்த அல்லது பதினைந்து கிலோ மீட்டர் மென்மையுடன் வந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது] கண்ணாடிச் சில்லுகளில் படாமல் என் வண்டியின் டயர்களைக் காக்க, சற்றே பிரேக்கடித்து, வளைத்து, நகர நினைத்தபோது கார் உரிமையாளர் தனது அதிர்ச்சி மற்றும் வேதனையைக் குறைந்தபட்சம் பகிர்ந்துகொள்ளவாவது யாரையேனும் எதிர்பார்த்தது புரிந்தது.
‘ராஸ்கல் இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது சார்’ என்றார் உக்கிரமாக. மேற்படி பைக்கின் எண்ணை அவர் கவனிக்கத் தவறியிருக்க வேண்டும். கவனித்திருந்தால் அதை வைத்து மேல் நடவடிக்கைக்கு உத்தேசித்திருக்கலாம்.
இங்கே சிந்தனையாளன் சிந்திக்கத் தொடங்குகிறான்.
பக்கத்தில் போகும் இரு சக்கர வாகனாதிபதியின்மீது சேற்றை வாரி இறைத்துவிட்டுப் போனது மேற்படி காராதிபதியின் பிழைதான். ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அவர் ஒரு மன்னிப்பேனும் கேட்டிருக்கலாம். என்ன அவசரமோ.
பைக்காதிபதியின் கோபத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நானாக இருந்தால் கல்லெடுத்து அடித்திருக்க மாட்டேன் என்றாலும் மனத்துக்குள் சுமார் நூறு கெட்ட வார்த்தைகளாலாவது அவரைத் திட்டித் தீர்த்திருப்பேன். அது கண்ணாடி உடைந்த காரின் தோற்றத்தினும் கேவலத்துக்குரியது.
இருப்பினும் உடனடியாக ஓரிரு சொல் ஆறுதல் கோரும் அந்த நபருக்கு நான் எதைத் தருவேன்?
‘விடுங்க சார். மகரத்துக்கு இன்னிக்கு அவதின்னு போட்டிருக்கான். நீங்க மகரமா?’
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
aஅற்புதம் நண்பர் பா ரா!
எந்த விடயம் எடுப்பினும் எப்படி ஒரு மெல்லிய நகையுடன் எழுதுகின்றீர்கள்? உம் எழுத்து ஒரு ராஜஸ்தான் நங்கையின்(அல்லது உமக்குப் பிடித்த கன்னியின் எனப் போட்டுக்கொள்ளவும்)- நகாசு ஓவியம். ரசித்தேன் மிக,
கவியோகி வேதம்