நட்ஸ்

நேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது.

ராத்திரி பத்தரைக்கு அந்த விமானம் புனேவில் இருந்து கிளம்பியது. கிளம்பிய பதினைந்தாவது நிமிடம் அந்த மூவரும் ஆளுக்கொரு சிக்கன் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். அது முடிந்ததும் தலா ஒரு கோக் குடித்தார்கள். அரை மணிக்குப் பிறகு மூவரில் இருவர் மட்டும் சூடாக காப்பி வேண்டும் என்று கேட்டு வாங்கிக் குடித்தார்கள். இதற்கும் அரை மணிக்குப் பிறகு நட்ஸ் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டபோதுதான் எனக்கு பகீரென்றது.

மணி, பதினொன்றரைக்குமேல் இருக்கும். என்னதான் பகாசுர வம்சமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்குள் ஒரு சிக்கன் நூடுல்ஸும் ஒரு கோக்கும் ஒரு காப்பியும் ஜீரணமாகியிருக்க முடியாது. அந்த நேரத்துக்கு நட்ஸ் சாப்பிட விரும்புகிறார்கள் என்றால் சந்தேகமில்லாமல் போன ஜென்மத்தில் அவர்கள் பாராகவனாக மட்டுமே பிறந்திருக்க முடியும்.

நட்ஸ் வந்தது. நூறு கிராம் வறுத்த முந்திரி அடங்கிய அழகிய டப்பாக்கள். பிரித்து வைத்துக்கொண்டு ஐந்து நிமிடங்களில் தின்று தீர்த்தது அந்தக் குடும்பம்.

பரபரவென்று அவர்கள் சாப்பிட்ட மொத்த ஐட்டத்தையும் கலோரிகளாக மாற்றி மனத்துக்குள் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். கட்டுப்படியாகாதென்று தோன்றியது. அவர்கள் சௌக்கியமாக இருக்கவேண்டும். காலக்கிரமத்தில் வியாதி வெக்கை ஒன்றும் வந்து சேராதிருக்க வேண்டும்.

O

இந்த நட்ஸ் வெறி இருக்கிறது பாருங்கள், அதைப் பற்றிச் சொல்ல வந்தேன். அது எப்போது ஏற்படும் என்றே சொல்ல முடியாது. வெறி உண்டாகிவிட்டால் அத்தனை சீக்கிரம் தணியவும் தணியாது. எத்தனை தின்றாலும் இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டே இருக்கும்.

முன்னொரு காலத்தில் நான் குமுதத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மோட்சம் தியேட்டருக்குப் பின்னால் ஒரு சேட்டுக் கடையில் வறுத்த முந்திரி வாங்குவேன். தினமும் 100 கிராம் என்பது கணக்கு. வாங்கித் தின்றுகொண்டே நடந்தால் பஸ் ஸ்டாண்டை அடைய சரியாக இருக்கும். பிறகு பஸ் பிடித்து எழும்பூரில் இறங்கி வசந்த பவனில் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு ரயில் பிடித்தால் குரோம்பேட்டை வந்து சேர்வதற்குள் பத்து ரூபாய் வேர்க்கடலை.

பேலியோவுக்கு வந்தபின்புதான் இந்த முந்திரி, வேர்க்கடலை வெறியை விட்டொழித்தேன். தொடக்ககால பாதாம் கடிப்பு யுத்தமும் இதில் கணிசமாகப் பங்காற்றியதைக் குறிப்பிடாதிருக்க முடியாது.

சைவ பேலியோவில் பாதாம், பிஸ்தா, வால்நட், மகடமியா நட்ஸ் அனுமதிக்கப்பட்டவை. இதில் புதிதாக பேலியோவுக்கு வருகிற பலர், ‘பாதாமுக்கு பதில் பிஸ்தா மட்டும் சாப்பிடலாமா? வால்நட் மட்டும் ஓகேவா?’ என்று அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள்.

இந்த கான்செப்ட் மிக எளிதானது. கார்போஹைடிரேட் குறைவாக இருக்கவேண்டும். கொழுப்பு அதிகமாக இருக்கவேண்டும். புரதம் வேண்டும். மினரல்கள், விட்டமின்கள் ஓரளவு இருக்க வேண்டும். அனைத்தைக் காட்டிலும் முக்கியம் வாங்கும் விலையாக இருக்க வேண்டும் என்பது.

மேற்படி அனைத்து விதிகளுக்கும் பொருந்தி வருவது பாதாம் மட்டுமே.

பாதாமில் 22 கிராம் கார்போஹைடிரேட் உண்டு. ஆனால் அதில் ஃபைபர் 12 கிராமைக் கழித்துவிட்டால் நிகரம் பத்து கிராம் மட்டும்தான். மிகக் கணிசமான அளவு மக்னீசியம் உள்ள ஒரே கொட்டையினம் இதுதான். தவிரவும் புரதம் [21 கிராம்].

ஒப்பீட்டளவில் பாதாமைவிட வால்நட்டில் கார்ப் குறைவே. [14 கிராம் கார்ப். இதில் 7 கிராம் நார்ச்சத்தைக் கழித்தால் மிஞ்சி இருப்பது ஏழே கிராம்.] வால்நட் சாப்பிடுவதும் சுலபம். நெய்யில் வறுத்து கொஞ்சம் உப்பு மிளகுத்தூள் சேர்த்தால் பாதாமைவிட ருசிக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு பிரச்னைகள். பாதாமைக் காட்டிலும் இதில் ஊட்டச்சத்துகள் குறைவு. ப்ரோட்டின் 15 கிராம்தான் இருக்கும். இதர மினரல்களும் குறைந்த அளவே உண்டு. அதுகூடப் பரவாயில்லை என்று வையுங்கள். ஒரு கிலோ வால்நட் வாங்குகிற காசுக்கு இரண்டரைக் கிலோ பாதாம் வாங்கிவிடலாம் அல்லவா?

பிஸ்தா – என்னைக் கேட்டால் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். சைவ பேலியோவில் உள்ளவர்கள் பிஸ்தாவின் ருசிக்கு அடிமையாகாதிருப்பது நல்லது. சனியன் இதில் 28 கிராம் கார்போஹைடிரேட். [சர்க்கரை அளவே 8 கிராம்] ஒருவேளை நீங்கள் பிஸ்தா சாப்பிட்டுவிட்டு வழக்கமான மற்ற பேலியோ உணவுகளையும் உண்பீர்களானால் ஆத்தா சத்தியமாக எடை குறையாது.

நாற்பதுக்குள் கார்ப் என்பதே என்னைக் கேட்டால் கொஞ்சம் ஆடம்பரம் என்றுதான் சொல்லுவேன். முப்பதுக்குள் அதைச் சுருக்குவதே நல்ல பலன் பெற வழி. முந்திரியும் இப்படித்தான். அதில் முப்பது கிராம் கார்ப். மேற்கொண்டு இரண்டு காப்பி சாப்பிட்டாலே முடிந்தது கதை.

எடைக்குறைப்பில் உள்ளவர்கள் மேற்படி பணக்கார நட்ஸ் பக்கம் போகாதிருப்பதே நல்லது என்பது என் கருத்து. இதற்கு பதில் அரை பிளேட் வெஜிடபிள் பிரியாணியே சாப்பிட்டுவிடலாம்.

ஒரு மாறுதலுக்கு வாரம் ஒருமுறையாவது பாதாம் நீங்கலான பிற நட்ஸைச் சாப்பிட்டாலென்ன என்பீர்களானால் அதற்கு நீங்கள் குறைந்தது 20:4 வாரியருக்கு வரும்வரையாவது பொறுமை காப்பது அவசியம். மாலை நாலு மணிக்கு நூறு கிராம் பிஸ்தா அல்லது முந்திரி அல்லது வால்நட்டை நெய்யில் வறுத்துச் சாப்பிட்டுவிட்டு, ராத்திரி எட்டு மணிக்கு நூறு கிராம் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடலாம். கலோரிக் கணக்கு இடிக்காது. இதைத் தாண்டி வேறு என்ன எடுத்தாலும் எகிறியடிக்கும்.

O

நான் தினமும் 24:1 வாரியரையே கடைப்பிடிக்கிறேன் என்பதால் பாதாம் இப்போதெல்லாம் எனக்கு அரிதாகிவிட்டது. மாதம் ஓரிரு முறை உண்டே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இருவேளை உணவாக்கிக்கொள்கிறேன் – பாதாம் ப்ரோட்டீனுக்காக.

எப்போதாவது பிஸ்தா வெறி வரும். இருபத்தி ஐந்து கிராம் அளந்து என் ஒருவேளை உணவுக்குள்ளேயே அதையும் சேர்த்துவிடுகிறேன். பனீர், காய்கறி, கீரை, வெண்ணெய் வகையறாக்களுடன் இருபத்தி ஐந்து கிராம் பிஸ்தா அல்லது வால்நட் சேர்த்துவிட்டால் முடிந்தது. பரிகாரமாகத் தயிரை அன்று நிறுத்திவிடுகிறேன்.

முந்திரி – சாப்பிட்டே தீரவேண்டுமென்றால் ஒரு நாளைய உணவாக 100 கிராம் வறுத்த முந்திரி மட்டும் சாப்பிட்டுவிட்டு மற்ற வேளைகளை மொத்தமாகப் புறந்தள்ள முடியுமா பாருங்கள். முடியும் என்பீர்களானால் மகனே உன் சமத்து.

அவ்வளவெல்லாம் வேண்டாம், சும்மா ஒரு இருபத்தி ஐந்து கிராம், முப்பது கிராம் மட்டும் – அவ்வப்போது என்பீரானால் அது அடிக்‌ஷனாகிவிடும். எடைக்குறைப்பு நிகழாது போகும்.

Share

1 comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி