முகங்களின் பிறப்பிடம்

ஒரு புத்தகத்தை மக்கள் கையில் எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள் அதன் வடிவமைப்பாளர்கள். எழுதியவர் யார், வாங்க வேண்டுமா வேண்டாமா, நன்றாயிருக்கிறதா இல்லையா, தேவையா தண்டமா போன்றவையெல்லாம் பிறகு வருகிற விஷயங்கள். முதலில் கையில் எடுக்க வேண்டும். அல்லது, என்னை எடு, எடு என்று அது சுண்டி இழுக்க வேண்டும். புரட்டு, புரட்டு என்று ஆர்வத்தைத் தூண்டவேண்டும்.

விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. சில புகழ் பெற்ற ஆசிரியர்களின் சில புகழ்பெற்ற புத்தகங்கள், சில அதி அவசியமான புத்தகங்கள் எத்தனை திராபையாகத் தோற்றமளித்தாலும் விற்றுவிடும். அதை வைத்து அனைத்தையும் எடைபோட முடியாது. பல்வேறு துறைகள் சார்ந்த, வெகுஜனங்களுக்கான புத்தகங்களின் வெற்றியில் அதன் ஆசிரியர், எடிட்டருக்கு உள்ள அதே அளவு பங்கு அதன் வடிவமைப்பாளருக்கும் உண்டு என்பது என் கருத்து. இதனால்தான் கிழக்கு தொடங்கும்போதே உள்ளடக்கத்துக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை அட்டை வடிவமைப்புக்கும் தரவேண்டும் என்று முடிவு செய்தேன். நான்கு பெயர்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன. குமரன், வேதா, ராஜா, ராஜன்.

கிழக்கின் சில புதிய அட்டைப்படங்கள்

இந்தப் பெயர்களை உங்களில் பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை. ஆனால் என்றோ பார்த்து, இன்னமும் உங்கள் மனத்தில் அப்படியே நிலைத்திருக்கக்கூடிய அழகிய அட்டை / பக்க வடிவமைப்புகள் ஏதும் இருந்தால் அவை கண்டிப்பாக இந்த நாலு பேரில் ஒருவர் செய்ததாகத்தான் இருக்கும். இந்தத் துறையின் இன்றைய மாஸ்டர்ஸ்.

இவர்களுள் வேதா என்கிற வேதராஜன் இப்போது தினகரன் குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளராக இருக்கிறார். ராஜா என்கிற ராஜரத்தினம் விகடனில் இருக்கிறார். [பழைய கோமல் காலத்து சுபமங்களா நினைவிருக்கிறதா?] பி.ஆர். ராஜன், [அனந்த பத்மநாபன் என்ற பெயரில் நவீன ஓவியங்களும் வரைவார். விகடனில் எஸ்.ரா தொடர்களுக்கு வரைந்தவர்.] ஸ்பிக் நிறுவனத்தில் டிசைனராகப் பணியாற்றுகிறார். குமரன், கிழக்கின் தலைமை வடிவமைப்பாளராக.

இந்த நான்கு வடிவமைப்புக் கலைஞர்களுடனும் நான் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றியிருக்கிறேன். நான்கு பேரின் வெற்றிக்கும் அடிப்படைக் காரணம், சலிக்காமல் திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக்கொண்டே இருக்கும் குணம். குமுதம் ஜங்ஷன் தொடங்கப்பட்டபோது அதன் உள்ளடக்கத்துக்கு நிகராக அதன் வடிவமைப்பு சிலாகிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது எனக்குத் தோள் கொடுத்தது ராஜா. ஒரே ஒரு ஜோக் பக்கத்தை அரை நாள் யோசித்து யோசித்துத் திரும்பத் திரும்ப விதவிதமாகச் செய்து பார்த்துக்கொண்டே இருப்போம். ஒரு பக்கத்துக்கான வண்ணத்தைத் தீர்மானிப்பதற்காக அந்தக் கதை அல்லது கட்டுரையைப் படித்துப் பார்த்து, அதன் மூடை வண்ணத்தில் கொண்டு வரவேண்டும் என்னுமளவுக்கு ராஜா தன் துறையில் ஒரு தீவிரவாதி.

வேதாவின் சிறப்பு, அவருடைய வேகம். நம்பமுடியாத வேகத்தில் சிந்திப்பார். காலை ஒன்பது மணிக்குத் தெரியும் உற்சாகம் இரவு ஏழு மணியானாலும் இம்மியும் குறையாது. வாத்து மேய்க்கிறவன் மாதிரி அலுவலகத்தில் பத்து வடிவமைப்பாளர்களை வைத்துக்கொண்டு கத்திக்கொண்டே இருப்பார். ஒவ்வொரு சீட்டாகப் போய் டிசைனை டிக்டேட் செய்கிற ஆசாமி தமிழகத்தில் அவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன். வண்ணங்களையும் வண்ணங்களின் சேர்க்கை விளைவுகளையும் எழுத்து மற்றும் படங்களின் அளவுகளையும் அவை இடம் பெறவேண்டிய பொசிஷன்களையும் மனப்பாடம் செய்து வந்தவர் மாதிரி சற்றும் சிந்திக்காமல் ஒவ்வொரு டெர்மினலுக்கும் சொல்லிக்கொண்டே போவார். ஒரு முறைகூட அவர் அளிக்கும் உத்தரவுகள் பிசகி, திரும்பச் செய்து நான் பார்த்ததில்லை.

பி.ஆர். ராஜனை நான் கல்கியில் இருந்து அறிவேன். மலையாளி. அப்போதெல்லாம் வ.வே.சு. ஐயர் மாதிரி தொப்பை வரைக்கும் தாடி வைத்திருப்பார். என்னைவிட அவர் குண்டு என்ற வகையில் அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு. [இப்போது பிரசன்னாமீது உள்ள அன்பைப் போல.] படிப்பாளி. மலையாளத்திலும் தமிழிலும் நல்ல இலக்கியங்களைத் தேடிப் படிப்பவர். சுந்தர ராமசாமி என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம். சு.ராவை ஒரு போர்ட்ரெய்ட் வரைந்து அவரிடம் கொடுத்து கையெழுத்து வாங்கி, குழந்தை மாதிரி எல்லோரிடமும் காட்டுவார். படம் வரைவதிலும் சரி, வடிவமைப்பதிலும் சரி. ஒரு சீரான வேகம் அவரிடம் எப்போதும் உண்டு. இடையில் ஓய்வெடுப்பது, அக்கம்பக்கத்தில் பேச்சுக் கொடுப்பது, எழுந்து வெளியேபோய் டீ குடிப்பது, அப்படியே ஒரு சிறு அரட்டை என்று எந்த நல்ல பழக்கமும் கிடையாது. காலை பத்து மணி சுமாருக்கு நாற்காலியில் உட்கார்ந்து இந்தப் பக்கம் ரெண்டு தடவை, அந்தப் பக்கம் ரெண்டு தடவை தன் ஸ்தூல சரீரத்தை அசைத்து செட் பண்ணிக்கொண்டு விட்டாரென்றால் மாலை ஆறு மணி வரைக்கும் மனுஷன் எழுந்திருக்க மாட்டார்.

குமரன்

கிழக்கு தொடங்கிய புதிதில் முதல் செட் அட்டைப் படங்களை எனக்கு ராஜன்தான் செய்து கொடுத்தார். தனிப்பட்ட முறையில் என்னுடைய மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்கும் அட்டைப்படம் வரைந்து, வடிவமைத்ததும் அவர்தான். ஆனால் கிழக்கில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்க, முழுநேரம் யாராவது இருந்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதுதான் குமரனைப் பிடித்தேன். சைதாப்பேட்டை ரசாக் மார்க்கெட் மாதிரி எப்போதும் ஜேஜேவென்றிருக்கும் குமுதம் வடிவமைப்புப் பிரிவில் அத்தனை பேருக்கு மத்தியில் எனக்குத் தனித்துத் தெரிந்த திறமைசாலி குமரன். நான் முன்சொன்ன மூன்று வடிவமைப்பாளர்களோடு ஒப்பிட, அவன் மிகவும் ஜூனியர். ஆனால் செய்நேர்த்தியில் ராஜாவுக்கு நிகரானவன். போட்டோ ஷாப்பில் டைப் ரைட்டிங் பரீட்சைக்கு அடிக்கிற வேகத்தில் வேலை செய்யக்கூடியவன். அவன் மௌஸைப் பிடித்துத் தடவி நான் பார்த்ததில்லை. கம்ப்யூட்டரின் அனைத்து ஷார்ட் கட் கீகளையும் அவனேதான் கண்டுபிடித்தானோ என்று நினைக்குமளவு இருக்கும் அவன் விரல் வேகம். விரல்களின் வேகத்தைவிட கற்பனை வேகம் அதிகமாக இருக்கும்.

எனக்குத் தெரிந்து, புத்தகக் கண்காட்சிகளில் அட்டைப்படங்களையும் வியந்து வாசகர்கள் பாராட்டிவிட்டுப் போகிற வழக்கம் கிழக்கில் குமரன் சேர்ந்த பிறகு தொடங்கியதுதான். பத்தடி தூரத்தில் எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டு போகிறவனை உன் டிசைன் சுண்டி இழுத்து அருகே கொண்டுவரவேண்டும் என்பதுதான் சேர்ந்த புதிதில் அவனுக்கு நான் இட்ட ஒரே கட்டளை. இன்றுவரை கிழக்கு புத்தகங்களின் அட்டை வடிவமைப்பு அதைச் செய்கிறது. ஆயிரம் புத்தகங்கள் அரங்கில் இருந்தாலும், ஒவ்வொன்றும் தனித்தனியே தனக்கான வாசகரை ஈர்க்கக்கூடிய விதத்தில் அமைவதற்குக் குமரன்தான் காரணம்.

ஆனால் ஒரு சிக்கல், அவனிடம் வேலை வாங்குவது கஷ்டம். அவன் அளவுக்கோ, அவனைவிட ஒரு படி அதிகமாகவோ வடிவமைப்புக் கலை குறித்துத் தெரிந்த எடிட்டர்களுக்குப் பிரச்னை இல்லை. வண்ணங்களைப் பற்றியும் வடிவமைப்பு பற்றியும் ஒன்றும் தெரியாத சமர்த்துகள் பக்கத்தில் போய் உட்கார்ந்தால் தீர்ந்தது விஷயம். கடித்துக் குதறிவிடுவான். கிழக்கு எடிட்டோரியலில் உள்ள  ‘கலைக்கோ’க்களுக்கு இதுதான் பெரிய பிரச்னை. செய்யவேண்டியதைக் கொடுத்துவிட்டு சமர்த்தாக நகர்ந்து வந்துவிடுவார்கள். அவன் நாலைந்து விதமாக டிசைன்கள் செய்து கொடுத்துத் தேர்ந்தெடுக்கச் சொல்லுவான். அதையும் தீர்மானிக்க முடியாமல் தவித்தால் வேறு வினையே வேண்டாம்.

கலையின் உன்னதத்தை வர்த்தகத் தேவையின் விகிதத்துக்கு நெருக்கமாகவும், அதே சமயம் அதிக சமரசங்களின்றியும் கொண்டுவரும் திறமைதான் ஒரு வெற்றிகரமான வடிவமைப்பாளரின் அடிப்படைத் தகுதி. காலச்சுவடு, தமிழினி, உயிர்மை போன்ற இலக்கியப் பதிப்பு நிறுவனங்களின் அட்டைப்படங்களை நீங்கள் கூர்ந்து கவனிக்கலாம். பழைய க்ரியா அட்டைகளையும் நினைவுகூரலாம். படைப்பு அளவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது புலப்படும். இது ஒரு கலை. மிக முக்கியமான கலை. ஆனால் இந்தக் கலைஞர்கள் ஒருபோதும் வெளியே தெரியமாட்டார்கள். இந்தத் துறையிலேயே உள்ளவர்கள், விவரமறிந்தவர்களுக்கு மட்டும் ஒரு அட்டைப்படத்தையோ, பக்க வடிவமைப்பையோ பார்த்ததும், இதைச் செய்தது யார் என்று தெரியுமே தவிர, வாசகர்களுக்கு அந்த விவரம் தெரியாது.

எதற்குத் தெரியவேண்டும் என்று தயவுசெய்து கேட்காதீர்கள்.  மைக்கல் வெஸ்ட்மோரையும் மேக்கப் பானுவையும் தெரிந்துகொள்வது ஒரு சினிமா ரசிகருக்கு எத்தனை முக்கியமோ, அதைவிட ஒரு புத்தக வாசகருக்கு இந்த விவரம் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

ஆமென்.

Share

24 comments

  • ராகவன் சார்!
    ஆங்கிலப் புத்தகங்களின் ‘நிராகரிக்கப்பட்ட அட்டைப்படங்களை’ சில வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறேன்!
    அப்படி ஏதேனும் சேகரித்து வைத்திருக்கிறீர்களா? அவற்றை பதியும் எண்ணம் ஏதாவது உண்டா?!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  • சுவாரஸ்யமானதொரு பகிர்வு

    //ஒவ்வொன்றும் தனித்தனியே தனக்கான வாசகரை ஈர்க்கக்கூடிய விதத்தில் அமைவதற்குக் குமரன்தான் காரணம்//

    (அட்டைப்)பக்கபலமாக இருந்து பணியாற்றிக்கொண்டிருப்பவரை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள் 🙂

    வரிகளுக்கள் உள்ள வலைப்பின்னல்களின் வழியே நான் போய் கண்டுட்டு வர்றேன் 🙂

  • பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே உரை நடையை வைத்து,படத்தை பார்த்து பக்கத்தை பார்த்து அதை உருவாக்கியவர் யார் என்று கண்டுபிடுத்து சொல்வேன்.இனி அட்டைப்படத்தையும் அந்த வரிசையில் சேர்க்கணும்.

  • புத்தக அட்டைபடம் மீது ஒரு தனிப் பிரியம் எனக்கும் உண்டு. ட்விட்டரில் யாராவது இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருந்தேன். அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  • காலச்சுவடு புத்தகங்களை யார் வடிவமைக்கிரார்களோ தெரியவில்லை. கட்டுரையை வாசிக்கும் பொழுது அவர்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.

    புத்தகங்கள் – என்னைப் பார், என்னைப் பார் என்று சொல்லும். பக்கங்கள் – என்னைத் தடவு, என்னைத் தடவு என்று கெஞ்சும்.

    இந்தக் கட்டுரைக்கு என்னுடைய பதிலும் – ஆமென்

  • மிக மிக முக்கியமான, அற்புதமான பதிவு. இதுவரை இந்த விசயம் பற்றி யோசித்ததே இல்லை. நல்ல அட்டைகளை பார்க்கும்போது ரசிப்பெனே தவிர, இதை செய்தவர் யார் என்று எண்ணியதேஇல்லை. பல நல்ல கலைஞர்களை நாம் இப்படிதான் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இனி எந்த பத்திரிகையையும் புத்தகத்தையும் பார்த்தாலும் வடிவமைத்தவர் யார் என்று நிச்சயமாய் யோசிக்க தோன்றும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நான்கு பேரில் திரு. ராஜா அவர்கள் வேலை செய்த சுபமங்களா பத்திரிகையை நான் தொடர்ந்து படித்திருக்கிறேன். வடிவமைப்பு மிக நன்றாக இருக்கும். எப்போதோ தெரிவித்திருக்கவேண்டிய பாராட்டை அவருக்கு இப்போது சொல்லிவிடுகின்றேன். “வெல்டன் ராஜா!”

  • அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் பாரா. வடிவமைப்புக் கலைஞர்களை நாம் கண்டுக்கொள்வதில்லை என்பது வருத்தத்திற்குரியதே. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நான்கு வடிவமைப்பு நிபுணர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரே ஒரு கேள்வி. உங்களுக்குத் தெரிந்து இந்தப் பணியில் உள்ள பெண்கள் யாராவது தெரியுமா?

    • லக்ஷ்மிப்ரபா: நன்றி. வடிவமைப்புத் துறையில் பெண்கள் ஒருசிலர் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. வெப் டிசைனிங், ஃப்ளாஷ் போன்றவற்றில் சிறப்பான பணியாற்றும் ஒரு சில பெண்களை நான் அறிவேன். பத்திரிகை, பதிப்புத் துறையில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

  • திரு அனந்த பதமநாபன் அவர்ளைப் பற்றி சொல்வதற்கு எனக்கு அவரிடம் பணிசார்ந்த தொடர்பும், அதையும் தாண்டிய அன்பும் உண்டு.எமது தகிதா பதிப்பகம் சமீபத்தில் ஒரே வெளியீட்டில் பதிமீன்று நூல்களை வெளிக்கொண்டுவந்தது. அந்த நூல்களின் அத்தனை அட்டைகளையும் அழகும் கருத்தும் ததும்பும் வகையில் படிமக் குறியீடுகளோடு வடிவமைத்திருந்தார் திரு ராஜன் அவர்கள். ஒரு நூலின் வாசல் எனபது அட்டைதான்.வீட்டில் வாசலில் இருப்பவரின் அழகிய புன்னகை விருந்தினரை எப்படி வரவேர்க்குமோ அதே போலத்தல் வாசகர்களை அட்டை வரவேற்கிறது எனபது நூறு சதவிகித உண்மை. வடிவம் சார்ந்தும் வண்ணம் சார்ந்தும் தேர்ந்த ஞானம்,உலக நாடுகளில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பல விருதுகளைப் பெற்ற பெற்ற திரு ராஜன் அவர்கள் எமது நூல்களுக்கு வடிவமைத்தது யாம் பெற்ற பேரு. உலக நாடுகளால் கெளரவிக்கப்பட்ட திரு அனந்த பத்மநாபம் ஐயா அவர்களை உள்ளூரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ,எமது வெளியீட்டு விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட தமிழ் இலக்கிய அன்பர்களின் முன்னிலையில் “கலைப் பொக்கிஷம்” என்ற விருதை வழங்கி எங்களை நாங்களே கெளரவித்துக்கொண்டதாய் .பெருமைப்பட்டுக்கொண்டோம். தொடர்ந்து தகிதா பதிப்பகம் கலைஞர்களை பாராட்டவும் வாழ்த்தவும் கெளரவிக்கவும் செய்யும். அவரில் விரல்களுக்கு உலகக் கலைஞர்களின் அன்பை அள்ளிப் போட்டு காப்பீடு செய்துகொள்கிறோம்.

  • நல்லாதானே கவர் டிசைன் எல்லாம் செய்யறாரு. அப்புறம் ஏன் அவருக்கு அவ்வளவு பெரிய ஆப்பு? 🙂

    முன்னமே ஒரு விஷயம் சொல்லி இருக்கேன். அதை இப்பவும் கேட்கலை! 🙁

  • Naan, “SIMMA SOPPANAM – Fidel Castro” Book i, attaiya parthuthan impress ahi vanginen. Now I am a great fan of Maruthan.
    Valha vadivamaippalargal !

  • அன்புள்ள ஐயா! நம்பினால் நம்புங்கள். நேற்றுதான் அலகிலா விளையாட்டு புத்தகத்தை அட்டைப்பட அழகுக்காக வாங்க தீர்மானித்திருந்தேன். இன்று இந்த கட்டுரை. படித்து வியந்தேன்.

  • சமீப காலமாக உங்கள் பதிவுகளில் ‘அடியேன்’ வாசனை அதிகமாக அடிக்கிறது! 😉 ‘குப்பை’ எளுத்தாளருடன் ஸ்நேகமோ?!

    • மாயவரத்தான்: என்னைச் சீண்டி உசுப்பேற்றுவது ரொம்பக் கஷ்டம். ரொம்ப முயற்சி செய்து களைப்படையாதீர்கள். 😉

  • நானாச்சும் பரவாயில்லை. அங்கே ஒருத்தரு புத்தக அட்டைக்காகத் தான் உங்க புத்தகம் வாங்கினேன்னு சீண்டுறார் பாருங்க.

  • கிழக்கு மற்றும் உயிர்மையின் வெற்றியில் வடிவமைப்பிற்கு மிகமுக்கிய இடம் உண்டு. அனைத்து பதிப்பகங்களும் பின்பற்ற வேண்டிய விஷயம் இது.

    கிழக்கு வெளியீடான சுஜாதாவின் “ப்ரியா” நாவலின் அட்டை வடிவமைப்பு மிக மோசமாக இருந்தது, குமரனுக்கு இல்லை இல்லை அதை ஓ.கே செய்தவருக்கு என் சார்பாக தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்கவும், இது பற்றி தங்களுக்கு முன்பே ஒரு முறை மின்னஞ்சல் செய்திருந்தேன். No Reply.

    திரைப்படங்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் போது அந்த படங்களை முன்னிருத்தி வடிவமைத்தால் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து, அதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.

  • வருஷாவருஷம், பதிப்புலகம் ஆசிரியர்களுக்கு பரிசு அல்லது மெடல் கொடுக்கும் போல், இதைப் போல் புத்தகத்தின் உப கலைஞர்களுக்கும் பரிசு, பதக்கம், அங்கீகாரம் முதலியவற்றை கொடுக்க வேண்டும்.

    விஜயராகவன்

  • ரொம்பவும் சரி. சில புத்தகங்களின் அட்டைபட வடிவமைப்பு ரொம்பவே கவர்ந்திழுக்கின்றன. குறிப்பிட்டிருக்கும் வடிவமைப்பு வல்லுனர்களுக்கு பாராட்டுக்கள்

    இதற்கு இணையாக என்னைப் பொறுத்தவரையில் புத்தகத்தின் தலைப்பும்.

  • ​முன்பு NCBH ​விற்ப​னை ​செய்த சோவியத் புத்தகங்க​ளை மிக ​நேசித்ததற்கும் வாங்கத் துடித்ததற்கும் பின்னால் இருந்த பல காரணங்களில் அதன் அட்​டைகளும், ​செய் ​நேர்த்தியும், கட்டுக்​​கோப்பான வடிவ​​மைப்பும் தான் காரணம் (உள்ளடக்கத்​தையும் அதன் தமி​ழையும் தனி​யே பல புத்தகங்களாக​வே எழுதலாம் அது தனிக் க​தை). எனக்குத் ​தெரிந்து பல இடதுசாரி முகாம்களிலிருந்து பல்​வேறு காலகட்டங்களிலும் ​வெளி​யேறி பல்​வேறு து​றைகளிலான அறிவுஜிவிகளாகவும் எழுத்தாளர்களாகவும், பதிப்பகத்தார்களாகவும் ஆனவர்கள்தான் – குறிப்பாக இன்​றைக்கு முற்​போக்காளர்களாக, தீவிர ஜனநாயகவாதிகளாக அ​டையாளம் காணப்படுபவர்கள் – தமிழகத்தில் அதிகம் என்று நி​னைக்கி​றேன். அப்படிப் பார்க்கும் ​பொழுது, ​மேற்கத்திய புத்தகங்களின் வடிவ​மைப்பு தாக்கத்​தை விட ​சோவியத் யூனியனின் புத்தக வடிவ​மைப்​பை​யே இவற்றின் மூலமாய் பார்க்க ​வேண்டியிருக்கிற​தென நம்புகி​றேன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி