அளந்து அளித்த சொல்

ந. பிச்சமூர்த்தியைக் குறித்து லா.ச. ராமாமிருதத்தின் எழுத்தில் எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவரது சிந்தாநதி தொகுப்பில் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி இரண்டு கட்டுரைகள் இருக்கும். இரண்டிலும் பிச்சமூர்த்தி வருவார். அவர் மீது லாசராவுக்கு இருந்த மரியாதை வெளிப்படும். அந்நாளில் பிற அனைத்து எழுத்தாளர்களும் பிச்சமூர்த்தியை எவ்வளவு மகத்தான ஆளுமையாகக் கருதினார்கள் என்பது புலப்படும். இப்போது அதனை எண்ணிப் பார்த்தால் லாசராவின் மொழியில் பிச்சமூர்த்தி ஓர் அலங்கார மூர்த்தியாகவே வெளிப்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. மிகையாக ஏதுமில்லை. ஆனாலும் அலங்காரம்தான்.

அதே காலக் கட்டமா இன்னும் சற்றுப் பிந்தியா என்று தெரியவில்லை. ந. பிச்சமூர்த்தி உடனான அனுபவங்கள் குறித்து அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அப்போது அசோகமித்திரன் ஜெமினியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். கி.ரா என்கிற கி. ராமச்சந்திரன் அங்கே அவருக்கு சீனியர். கி.ராவின் அறைக்குப் பிச்சமூர்த்தி வந்த ஒரு நாளில் அசோகமித்திரனை அங்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்திருக்கிறார். கி.ராவின் அறைக்குப் பிச்சமூர்த்தி வந்திருந்ததற்குக் காரணம், அவரது மகள்களுக்கு ஜெமினி தயாரிக்கவிருந்த ஒரு படத்தில் பாட்டுப் பாட வாய்ப்புக் கிடைக்குமா என்று விசாரிப்பதற்காக. இரண்டாவது வரியில் அசோகமித்திரன் இதனைச் சொல்லிவிடும்போது பிச்சமூர்த்தியின் சரியாக எடுக்கப்பட்ட முதல் நிழற்படம் புலப்படத் தொடங்குகிறது.

லாசரா, பிச்சமூர்த்தியின் தாடியையும் விழிகளின் கூர்மையையும் அனைவரும் பேசும்போது அவர் மௌனமாக எதிரே அமர்ந்து கூர்ந்து கவனிப்பதையும் குறிப்பிடுவார். அசோகமித்திரன் தோற்றத்தைப் பொருட்படுத்துவதில்லை. முதல் முதலில் பார்த்தபோது, ‘உன் கதை நன்னாவே இருக்குப்பா’ என்று பிச்சமூர்த்தி சொன்னதைத் தெரிவிக்கிறார். நான்கு வரிகள் கடந்ததும் பிச்சமூர்த்தியின் வீட்டுக்குத் தான் சென்றதை நினைவுகூர்கிறார்.

“அவர்கள் (பிச்சமூர்த்தியின் முதல் இரண்டு மகள்கள்) பயிற்சி செய்யும்போதும் சிறு சிறு கச்சேரிகள் புரியும்போதும் நான் போயிருக்கிறேன். ஐயோ இவர்களுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்புக் கிடைக்கும் என்று நானே கவலைப்பட்டிருக்கிறேன்.”

இரண்டாவது வரியில் சொன்ன தகவலுக்குப் பத்து வரிகள் கடந்த பிறகு விளக்கம் வருகிறது. அதில் ‘நானே’ என்ற அழுத்தம் தருகிற பொருள், தனி அடிக் குறிப்புக்கானது.

லாசரா, பிச்சமூர்த்தியை மிக நேரடியாக ரிஷி என்று சொல்லிவிடுவார். அசோகமித்திரன் அதனைச் சொல்வதற்கு நிறைய சொற்களை எடுத்துக்கொள்கிறார். அந்நாளில் கி.ரா., பிச்சமூர்த்தி இருவருக்குமே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் இருந்திருக்கிறது. அசோகமித்திரனும் அவர்களுடன் இந்த விஷயத்தில் பொருந்திப் போயிருக்கிறார். காரைச் சித்தர் என்றொரு சித்தரைப் பற்றிய குறிப்பு இந்தக் கட்டுரையில் இரண்டு மூன்று இடங்களில் வருகிறது. கி.ராவுக்கு காரைச் சித்தரின் மீது அபரிமிதமான பக்தி; மரியாதை. அசோகமித்திரனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனால் பிச்சமூர்த்தி காரைச் சித்தரைப் பொருட்படுத்தவில்லை என்பதை அசோகமித்திரன் மறைமுகமாகத் தெரிவிக்கிறார். ‘ஆனால் பிச்சமூர்த்தி ஏதாவது உபாசனை வைத்திருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றியது. இல்லாது போனால் அந்த நிதானமும் அமைதியும் சாத்தியமில்லை.’

இதனைச் சொல்வதோடு அசோகமித்திரனால் நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. “காரைச் சித்தர் சென்னை வந்தபோது கி.ராவால் அவருடன் இணைந்து போக முடிந்தது. பிச்சமூர்த்தி அன்று ஒதுங்கி இருந்தார். உடல்நிலை ஒரு காரணமாக இருக்கக்கூடும்.”

தன்னால் உறுதிப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை – நேரடி சாட்சியாகவே இருந்தாலும் – எவ்வளவு கவனமாக எழுத வேண்டும் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறந்த பாடம்.

ஆனால் இந்தக் கட்டுரையில் இதே பாடத்தைத் தான் பெற்ற இடம் குறித்தும் அசோகமித்திரன் ஒரு குறிப்புத் தருகிறார். கு.ப. ராஜகோபாலன் இறந்தபோது பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரையைப் பற்றிய தகவல் அது.

“ஓர் அதிகப்படியான அடைச்சொல், ஓர் அதீதமான பிரகடனம் இல்லாமல் தாங்க முடியாத துக்கத்தைச் சிறு சிறு வாக்கியங்களில் பிச்சமூர்த்தி வெளிப்படுத்தியிருந்தார். ‘வெளிப்படுத்தியிருந்தார்’ என்று சொல்வதுகூடத் தவறு. படிப்பவர்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். உண்மையில் துக்கத்தை எப்படி கண்ணியம் பிசகாது எதிர்கொள்வது என்பதற்கு அக்கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு.”

லாசராவின் கட்டுரையிலும் பிச்சமூர்த்தியின் இந்த வெளிப்பாட்டு விதம் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது:

“பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி – அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசான நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில் பிசிர்கள் சுத்திகரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும்…”

பிச்சமூர்த்தியைக் குறித்து சுந்தர ராமசாமி இலக்கியச் சிந்தனைக்காக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘ந. பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்’ என்பது அதன் தலைப்பு. அசோகமித்திரனும் லாசராவும் சுருக்கமாகத் தொட்டுக்காட்டும் ஓர் ஆளுமையை, அவரது படைப்புகளின் வழியாகத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அந்தப் புத்தகம் ஒரு நல்ல வழி.

வியப்பூட்டும் விதமாக அந்தப் புத்தகத்தின் சாரம், அசோகமித்திரன் கட்டுரையில் ஒரு பத்தியில் இப்படி வெளிப்படுகிறது:

“எளிய, கபடமற்ற மனிதனுக்கு உலகில் நிகழக்கூடிய எல்லாம் பிச்சமூர்த்திக்கும் நடந்திருக்க வேண்டும். நான் அறிந்து சில ஏமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர் சோர்வே அற்றவராக எப்போதும் இருந்தார். பேசும் போதும், விவாதத்தில் மாறுபட்ட கருத்து தெரிவிக்கும்போதும் அவருக்குக் குரலைத் தூக்கத் தேவையில்லாதிருந்தது. இன்று நினைத்துப் பார்க்கும்போது இந்த ஒரு பண்பும் அவர் எனக்குத் தெரிவித்த ஒரு பாடமாகத் தோன்றுகிறது.”

Share

1 comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter