17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு சுப்புடுவின் தொடைதட்டல்

14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் மின் நூலுக்கு சி. சரவண கார்த்திகேயன் எழுதிய முன்னுரை:

எங்கள் வீடு குமுதம் வாங்கும் வீடு. அது என் அம்மாவின் தேர்வு. பெண்களும் இலக்கியமும் சமமாய்க் கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருந்த என் பதின்மங்களின் மத்தியில் குமுதம் இதழ் கச்சிதமாய் எனக்கான தீனியாய் அமைந்திருந்தது. அது புத்தாயிரத்தின் தொடக்கம். குமுதம் வார‌ இதழ் நான்கைந்து எழுத்தாளர்களின் பெயர்களைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தது. ம.வே.சிவக்குமார், கே.என்.சிவராமன், கிருஷ்ணா டாவின்ஸி, ப்ரியா கல்யாணராமன், ரவிவர்மா என்ற அந்த வரிசையில் இன்னமும் கூடுதலாய் அடிபட்ட பெயர் பா.ராகவன்.

2000‍ல் வெளியான மாளவிகா என்ற வரலாற்றுச் சிறுகதை நான் வாசித்த அவரது முதல் எழுத்தாக இருக்கலாம். “அழகிய அறியாமையில் நெய்யப்பட்டதொரு மானிடப் பூச்சி” போன்ற வரிகளால் ஆன கதை. பிறகு ருசி, அடையாளங்கள், வெறும் காதல் எனச் சீரான இடைவெளியில் குமுதம் வெளியிட்ட அவரது சிறுகதைகள் ஈர்த்தன. பின் அதிலிருந்து சட்டெனெ அபுனைவுக்குத் தாவி பாக். ஒரு புதிரின் சரிதம் எழுதினார். அதுவும் வசீகரித்தது. அவரது நூல் ஒன்றிற்கு நான் முன்னுரை எழுதுவேன் எனப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் யாரேனும் சொல்லி இருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இதை என் மீதான அன்பில் அவரளித்திருக்கும் கௌரவம் என்றே கொள்கிறேன். (“முன்னோடி ஒருவர் இளம் எழுத்தாளனுக்கு…” என நீட்டிமுழக்கத் திட்டமிட்டேன். “முப்பது வயதையும் எண்பது கிலோவையும் தாண்டியவர்களை இளம் எழுத்தாளர் என அழைப்பது ஒரு கருத்தியல் வன்முறை” என்றதில் மண்ணள்ளிப்போடுகிறார்.)

14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் என்ற வினோதஞ்செறிந்த‌ தலைப்புடைய இக்குறுநூலானது அவரது கடந்த சில்லாண்டு ஃபேஸ்புக் பதிவுகளின் தொகுதி. இவற்றில் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே அவை எழுதப்பெற்ற கணங்களிலேயே வாசித்திருக்கிறேன். இப்போது ஒன்றாய் அள்ளி வாசிக்கையில் அவராளுமையின் விஸ்தீரணத்திலிருந்து ஒரு விளையாட்டுத்தன முகம் மெல்ல எட்டிப் பார்க்கிறது.

பெரும்பாலும் என்றில்லை; கிட்டத்தட்ட‌ எல்லாமே அங்கதச்சுவை நிறை பதிவுகள்.

பொதுப்புத்தியின் புனிதங்களை, விழுமியங்களைப் புன்னகைத்தபடி புறங்கையால் ஒதுக்கும் கொழுப்புடைய எழுத்தாளனுக்கே, ரசிக்கும்படி பகடிபடைத்தல் சாத்தியம். நொபேல் பரிசு பெற்ற பாப் டிலனை போகிறபோக்கில் ஸ்வீடிஷ் கங்கை அமரன் என்று எழுதுகிற‌ கொழுப்பு பா.ராகவன் அவர்கட்குண்டு. (பேலியோகாரர்களைப் பார்த்து ‘கொழுப்பு’ என்றால் பாராட்டாகவே கொள்வார்கள் என நம்புகிறேன்.)

“வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே” என்கிறார் தாயாமானவர். அவரை இங்கே மறுத்து ஆமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. பா. ராகவனின் நடை வக்கணையானது. கமர்கட் ஒன்றை நாவில் வைத்து உருட்டி ரசித்து ருசிப்பதைப் போல் எடுத்துக் கொண்ட‌ விஷயத்தை எழுதுவது தான் அவர் பாணி. வாசிக்கும் போது நாம் ரசிப்பதை விட எழுதும் போது அவர் அதிகம் ரசித்து எழுதுவாரோ எனத்தோன்றும். ரெண்டு போன்ற புதினங்கள் என்றாலும் சரி, மாயவலை முதலிய அபுனைவுகள் என்றாலும் சரி இதை உணரலாம். நேரடியாக வாசிப்பின்பத்துடன் தொடர்புடையது இந்தப் பாணி. இந்தப் பதிவுகளிலும் அதன் வலுவான சாயைகள் நிரம்பி இருக்கின்றன. ஒரு ஃபீல்குட் உணர்வை விரும்புபவர்களுக்கானது இந்நூல்.

நீங்கள் ரசிகர் எனில் குறைந்தது நூறு புன்னகைகளுக்கு இப்புத்தகம் உத்தரவாதம்.

இதில் இடம் பெற்றுள்ள சுமார் காலாயிரம் பதிவுகளுள் பெரும்பாலானவற்றைச் சில வகைமைகளுக்குள் அடைக்கலாம்: கவிதை எதிர்ப்பு, இலக்கியக் கிண்டல், அரசியல் பகடிக‌ள், சமூக அவதானங்கள், சகதர்மினி கேலிக‌ள், பெண்ணெழுத்துப் பற்றியவை, சமூக வலைதள‌ அபத்தங்கள், அப்புறம் கொஞ்சமாய் சீரியஸ் எழுத்து.

கவிதை என்பது யூதர்கள் என்றால் பா.ராகவன் ஹிட்லர். அந்தளவுக்கு இந்நூலில் சுமார் கால் பங்கு கவிதைகளைக் காத்திரமாய் எதிர்ப்பவை. நல்ல குடும்பத்தில் பிறந்தவன் கவிதை எழுத மாட்டான் என்பது தவிர, எல்லாம் சொல்லி விட்டார்.

நடந்தவாக்கில்
தலை பின்னிக்கொண்டே
பள்ளிக்கூடப் பேருந்தைப் பிடிக்க
விரையும்
சிறுமியே நீ
எனக்கு
ஒரு புன்னகையைத் தருகிறாய்
ஒரு ஆர்வத்தைத் தருகிறாய்
ஒரு பதற்றத்தைத் தருகிறாய்
ஒரு பெருமூச்சைத் தருகிறாய்
ஒரு தரிசனத்தைத் தருகிறாய்
துயரின் ஒரு துளியை
வியர்வைபோல் வழித்து
போகிற வாக்கில் என்மீது
தெளித்துச் சென்றுவிடுகிறாய்.

இப்படியான நற்கவிதை புனையும் ஆசாமி கவிதை எழுதுவதைச் சதா பயங்கர‌வாதத்துடன் ஒப்பிட்டுக் கேலி செய்து கொண்டிருப்பாரா? செய்கிறார். “நூறு நாள் கவிதை எழுதாதிருப்பது ஒரு கவிஞன் செய்யக்கூடிய ஆகப்பெரிய சமூக சேவை. அதற்காகவாவது சிநேகனுக்குப் பரிசு கொடுத்திருக்கலாம். #பிக்பாஸ்” என்கிறார்.

இக்கவிதை பழகிய தெரு நாய் போல குரைக்காமல் கடிக்காமல் தான் இருக்கிறது. விரைவில் பா.ராகவன் கவிதைத் தொகுப்பொன்றைக் கொண்டு வர வாழ்த்துகள்!

சமகால இலக்கியப் போக்குகள், நடப்புகள் குறித்த அவரது கேலி அலாதியானது. உதாரணமாய் ஜெயமோகனின் அபிப்பிராய சிந்தாமணியை கிரேசி மோகன் எழுதாத கமலின் நகைச்சுவைப் படம் என்கிறார். கோணங்கியின் பாழியை பைதான் நிரலோடு ஒப்பிடுகிறார். ஆச்சரியக்குறிகளற்ற கரமசாவ் சகோதரர்களை நிச்சயம் ஆனந்த விகடன் தொடர்கதையாகப் போடாது என்கிறார். “திடீரென்று பிரமிள் பிறந்த தின நினைவுகூரல் செய்திகளை இந்த ஆண்டு காண்கிறேன். இதெல்லாம் புவி வெப்பமயமாதலின் விளைவுகளுள் ஒன்று.” என்று கிண்டல் பண்ணுகிறார். ‘குறிப்பிடத்தக்கது’ என்ற சொல்லை இவர் கேலி செய்ததிலிருந்து அதை எங்கும் பிரயோகிக்கவே சங்கடமாய் இருக்கிறது. தவிர்த்து வருகிறேன்.

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் / வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” என்று குறள் ஐந்து உருவகங்களை ஒன்றரை அடியில் அடர்த்தி காட்டியது போல் ஃபேஸ்புக் வந்தும் ட்விட்டரின் 140 கட்டுப்பாட்டைக் கைவிடாத பிடிவாதத்தின் பக்கவிளைவு: “குற்றமும் தண்டனையும் ஒன்றேதான். தமிழில் வாசிக்க எடுத்தது.”. கேட்டால் “குள்ளமாயிருப்பதே குரோட்டனுக்கழகு.” என்று அவர் சொல்லக்கூடும்.

“எழுத்தாளனுக்குச் சார்பு இருக்கக்கூடாது, வெளியே இருந்து எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும்” என என்னிடம் பா.ராகவன் சொல்லி இருக்கிறார். ஆனால் அவருக்கே ஒரு மெல்லிய வலதுசாரிச் சாய்வுண்டு என்று தான் படுகிறது. அதையும் மீறித் தென்படும் அரசியல் அங்கதங்கள் இந்நூலின் முத்திரை: உதா: “Pan – ஆதார் இணைப்பு என்பது கங்கை காவிரி இணைப்புக்கு முன்னோட்டம் போலிருக்கிறது.”  “மோடி மட்டும் மங்கோலியா போகாவிட்டால் அந்நாட்டின் தலைநகரம் உலான்படோர் என்பது எப்படி நமக்குத் தெரியவந்திருக்கும்?”.

அவரது அங்கத உச்சமாய்ச் சில சமூகப் பகடிகளைச் சொல்லலாம். “மோட்டார் என்பது ரிப்பேர் ஆவதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட ஓர் இயந்திரம்.”, “காய்த்துக் குலுங்கும் அடுத்த வீட்டு மாமரங்களே 3ம் உலக யுத்தத்தின் மூலகாரணியாக அமையும்.”, “கிண்டிலில் எனது வெஜ் பேலியோ புத்தகம் வெளியான நாள்முதல் தினசரி பத்து பிரதிகளுக்குக் குறையாமல் விற்கிறது. அலை உறங்கும் கடல் மாதத்துக்குப் பத்து விற்கிறது. இதில் இருந்து ஒன்று புரிகிறது. பேலியோவில் ஒருவேளை உணவாக நாவல்களைச் சேர்த்தே தீரவேண்டும்.”  “யார் வீட்டிலேயோ கடும் புளிப்பு வாசனையுடன் தோசை வார்க்கிறார்கள். ஈஸ்ட் மட்டுமல்ல; வெஸ்ட் சவுத் நார்த் எல்லாமே நிறைந்திருக்கும் போலிருக்கிறது.”.

“எப்பப்பார் என்ன ஃபேஸ்புக் என்று Mark Zuckerberg-ஐ அவரது மனைவி கேட்பாரா என்று அறிய விரும்புகிறேன்.” என்கிறார். “எப்பப் பார் என்ன பாத்ரூம்?” என 14ம் லூயியின் மனைவி கேட்டிருக்க வேண்டும்! இன்னொன்று: “சிறு பொய்களால் மட்டுமே மனைவியைச் சமாளிக்க முடிவது உறுத்தலாக உள்ளது குருவே என்றான் சீடன். மனைவிகள் எதிர்பார்ப்பது உண்மைகளையல்ல; பொருத்தமான பதில்களை மட்டுமே என்றார் ஜென்குரு.” ஆங்காங்கே இப்படி மனைவி என்ற இனத்தின் மீதான பகடி தெறிக்கிறது. உண்மையான பிரியம் கொண்ட கணவர்களே மனைவியைக் கிண்டல் செய்வார்கள் என்பதும் உலகெங்கும் மனைவிகள் தத்தம் கணவர்களால் கேலிகள் செய்யப்படுவதை ரசிக்கவே செய்கிறார்கள் என்பதும் உண்மை தான் என்றாலும் பா.ராகவனின் மனைவியிடம் எனக்குச் செஞ்சோற்றுக் கடனுண்டு என்பதால் இந்தக் கிண்டல் பதிவுகளை அங்கீகரிக்கவியலா இக்கட்டு.

இரும்பூதெய்தும் பெருந்தகப்பனாய் மகளைச் சாக்கிட்ட பதிவுகளும் சில‌ உள.

பெண் எழுத்தாளர் குறித்த பதிவுகள் புன்னகை தாண்டி சிரிப்பைப் பிடுங்குபவை. ஒரு சோறு: “நவீன கவிதை வடிவம்தான் பெண்களுக்கு எத்தனை சௌகரியம் – நைட்டியோடே செட்டியார் கடைக்குப் போய்வந்துவிடுவது போல.” Metadata-வாய் ஃபேஸ்புக் குறித்து அவர் வைக்கும் அவதானங்கள் வல்லிய ரசனை கொண்டவை. உதாரணமாய் இவை: “ஒரு முழுநாள் ஒருவர் ஃபேஸ்புக்கில் வாழ இறந்துதான் தீரவேண்டும் போலிருக்கிறது.” “பேனா விரலோடு கன்னத்தில் கையூன்றி போஸ் தரும் படைப்பாளிகளை சாட்டையடிப் பதிவர்கள் ரீப்ளேஸ் செய்திருக்கிறார்கள்.”.

அரிதாய்ச் சில இடங்களில் அவரது சீரியஸ் முகமும் வெளிப்பட்டிருக்கிறது. அங்கேயும் சிக்ஸர்கள் தவறவில்லை: “ஆளுமை என்ற ஒன்றை உருவாக்கிக் கொள்ளத் திராணி இல்லாதபோது அடிமைத்தனம் பிடித்துப் போகிறது.” “Non-fiction என்பதும் புனைவுதான். கலைஞனுக்கு பதிலாகக் காலம் எழுதுகிறது அதை.”.

முன்னுரையில் அவர் தன் எழுத்துக்குச் சொல்லும் ஒரு விஷயம் உண்மையில் ஒரு வாழ்க்கைப்பாடம்:

“மோசமாகப் போகிறவை குறித்து எனக்கு வருத்தங்களே கிடையாது. அவை மோசம் என்று அறிந்திருப்பதே போதும் என்று எண்ணுகிறேன்.”

பா.ராகவனிடம் நான் முக்கியமாய்க் கருதும் அம்சம் ட்விட்டரோ ஃபேஸ்புக்கோ சமூக வலைதளங்களைத் தன் எழுத்துக்கான‌ சோதனைச்சாலையாக‌ மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் லாகவமான கட்டுப்பாடு தான். பொன்னான வாக்கு மாதிரி ஒரு அரசியல் தொடரையே தேர்தலை ஒட்டி எழுத முடிந்தவர் மறந்தும் தன் சீரியஸான அரசியல் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் எழுதவில்லை என்பது ஆச்சரியமூட்டுகிறது. அந்தச் சோதனை முயற்சிகளே வாசக விருந்தாகி விட்டன என்பதே அவற்றைத் தனி நூல்களாக்கும் கம்பீரத்தை அவருக்கு நல்கியிருக்கிறது.

எத்தனை எழுத்தாளுமைகளுக்கு இது சாத்தியப்பட்டிருக்கிறது என யோசியுங்கள்!

நன்றி: சி.சரவணகார்த்திகேயன்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter