ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 13

பதினெட்டு வயதில் நூலகங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். சராசரி நகர்ப்புற மனிதர்களின் வாசிப்பு ஆர்வம் என்பது பெரும்பாலும் கவலைகளின் பக்க விளைவாக உருவாவது என்பது என் அபிப்பிராயம். படிப்பதற்காகவே நூலகங்களைத் தேடிச் செல்லும் சிறுபான்மையினருக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. சிலருக்குக் கவலையை மறக்கக் குடி, உணவு, உறக்கம் எனப்பல உள்ளது போல நூலகங்களும் ஓர் எல்லை வரை அதற்கு உதவி செய்யும்.

அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்துக்கு ஒரு காலத்தில் அநேகமாக தினசரி சென்றுகொண்டிருந்தேன். அப்போது கல்லூரிப் படிப்பு முடிந்திருந்தது. நிறைய அரியர்ஸுடன் வெளியேறி, அவற்றையெல்லாம் எப்போது, எப்படி முடிப்பது என்பது குறித்து உட்கார்ந்து சிந்திப்பதற்காக ஓர் இடம் தேடிக்கொண்டிருந்தேன். கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் திரையரங்குகளில் டிக்கெட்டுக்காகச் செலவிடுவது ஒரு தவறாகத் தெரியவில்லை. தோற்றுப் போய் வெளியேறிய பின்பு ஏனோ அதைத் தொடர மனம் இடம் தரவில்லை. எனவே செலவில்லாத இடமாக, தேவநேயப் பாவாணர் நூலகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

தினமும் காலை ஒன்பது மணிக்கு நூலகத்துக்குள் சென்றுவிடுவேன். மாலை ஐந்து மணி வரை எழுந்து வெளியே வந்ததேயில்லை. அங்கேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவாக, ஒவ்வொரு புத்தக அடுக்காக, ஒவ்வொரு வரிசையாக, ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டிக்கொண்டிருப்பேன். விளையாட்டல்ல. உண்மையாகவே இதனைச் செய்தேன். இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும்போது ஏதோ ஒரு கட்டத்தில் சில புத்தகங்கள் நம்மை உள்ளே இழுத்துக்கொண்டுவிடும். பிறகு படிப்பது ஒரு போதையாகி, நூலகத்துக்குள்ளே நுழையும் வரை இருந்த கவலைகள் மொத்தமாக மறந்துவிடும்.

என்னைப் போலவே வேலை வெட்டி இல்லாத பலபேர் காலை முதல் மாலை வரை நூலகத்துக்கு வந்து இருப்பார்கள். பதினெட்டு வயதினர் முதல் அறுபது வயதுக்காரர்கள் வரை இதில் அடக்கம். பெரும்பாலும் அங்குள்ள அனைத்துச் செய்தித் தாள்களையும் அவர்கள் படித்து முடித்துவிடுவார்கள். நூலக ஆர்டர்களில் மட்டுமே வாழ்கிற பத்திரிகைகள் பல இருக்கும். அவற்றை எடுத்துப் படிப்பார்கள். சிறிது நேரம் மேசையின் மீது சாய்ந்து தூங்குவார்கள். மதிய உணவு நேரத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்டு இரண்டு மணிக்கு மீண்டும் வருவார்கள். இப்போதும் செய்தித் தாள்களைப் படிப்பார்கள். நூலக ஆர்டர் மாத இதழ்களைப் படிப்பார்கள். எளிய குடும்ப நாவல்கள், கைமுறை வைத்தியம், காகபுஜண்டர் நாடி ரகசியம் போன்ற நூல்களை எடுத்துப் புரட்டுவார்கள். மாலை வீட்டுக்குப் போய்விடுவார்கள். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மீண்டும் அவர்களை அங்கே பார்க்கலாம்.

மாதக் கணக்கில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தாலும் நூலகத்தில் நெருங்கிப் பேசுவோர் குறைவு. அப்படிப் பேச்சுக் கொடுத்தால் நாம் என்ன பிரச்னையில் இருந்து தப்பிக்க அங்கு வந்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டி வரும். குறிப்பாக, வயதில் மூத்தவர்களுடன் பேச்சுக் கொடுத்துவிட்டால் அதுவே பெரும் பிரச்னை ஆகிவிடும்.

‘தம்பி, நான் ரிடையர் ஆனவன். வீடு சரியில்லாம, பொண்டாட்டி புள்ளைங்க சரியில்லாம பொழுதப் போக்க இங்க வாரேன். நீ அப்டி இல்ல பாரு. இந்த வயசுல உழைச்சி சம்பாதிக்கணும்ப்பா. இப்பிடி உக்காரக்கூடாது. எந்திரி. போய் வேல தேடு’ என்று ஆரம்பிப்பார்கள். மறுநாளும் அவரைப் பார்த்துவிட்டால், ‘நேத்தே சொன்னனேப்பா? இந்தா இன்னிக்கி இந்த விளம்பரம் வந்திருக்குது பாரு..’ என்பார்கள். அதற்குள் ஏழெட்டுப் பேர் படித்துப் புரட்டி, கசங்கிப் போயிருக்கும் செய்தித் தாளில் குறிப்பிட்ட விளம்பரத்தைத் தேடி எடுத்து பால் பாயிண்ட் பேனாவால் வட்டம் போட்டுக் காட்டுவார்கள்.

இன்னொரு சாரார் இருக்கிறார்கள். அவர்களிடம் தவறிப் போய் பேச்சுக் கொடுத்துவிட்டால், ‘ஆயிரத்து தொள்ளாயிரத்து பத்துல வந்த காசுங்க செலது இருக்குது. பிரெஞ்சு கவர்மெண்டு காசுங்க கொஞ்சம் இருக்குது. பிரிட்டிஷ்காரன் ஸ்டாம்பெல்லாம் எங்கப்பாரு கலெக்ட் பண்ணி வெச்சிருந்தாரு. அதெல்லாம்கூட பத்திரமாத்தான் இருக்குது. இதெல்லாம் வாங்குறவங்க யாரானா தெரியுமா? நீ இத சும்மா செய்ய வேணாம். என்னா அமௌண்ட்டு வாங்கித் தரியோ அதுல பத்து பர்சண்ட் கமிசனா குடுத்துடுறேன்’ என்பார்கள். ஒரு சமயம் முதியவர் ஒருவர், தனது முன்னோர் காலத்துப் பித்தளைப் பாத்திரங்கள் நிறைய இருப்பதாகவும் அவற்றை நல்ல விலைக்கு விற்றுத் தர முடியுமா என்றும் கேட்டார். வீட்டில் புராதனமான பித்தளைப் பாத்திரங்களில் தனது துயரங்களைப் பதப்படுத்தி வைத்துவிட்டு நூலகத்துக்கு வரும் அம்மனிதர், எப்போதும் சரித்திர நாவல்களை மட்டுமே எடுத்துப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வேலை தேடுபவர்கள், மகன் அல்லது மகளுக்கு வரன் தேடுபவர்கள், இலவச உணவுடன் கூடிய இலவசக் காப்பகங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று அறிந்துகொள்வதன் பொருட்டு பத்திரிகைகளைப் படிக்க வருபவர்கள், தூங்குவதற்காக மட்டுமே வருபவர்கள் என்று பல தரப்பினரை அந்நாளில் அங்கே சந்தித்திருக்கிறேன்.

மறக்க முடியாத அனுபவம், பழவேற்காடு மாரிமுத்துவைச் சந்தித்தது.

மாரிமுத்து, சென்னையின் வடகோடி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாயுடு பேட்டையில் இருந்து பழவேற்காடு ஏரி வழியாகப் பலவிதமான பொருள்களைக் கடத்தி வந்து தமிழகத்தில் விற்கும் ஒரு குழுவின் கடைமட்ட உறுப்பினர். சாராயம், போதை மருந்துகள் மட்டுமல்லாமல் பல எலக்டிரானிக் பொருள்களும் இதில் அடக்கம். சென்னையில் இல்லாத எலக்டிரானிக் பொருள்கள் நாயுடுப் பேட்டைக்கு எங்கிருந்து வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. அவருக்குமே அது தெரியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு லோடுக்கு நூற்றைம்பது ரூபாய் அவருக்குக் கூலி கிடைக்கும். ஏரியைக் கடந்து சரக்குகளை எடுத்து வந்து மீஞ்சூரில் இருந்த ஒரு கிடங்கில் சேர்த்துவிட்டால் அவர் வேலை முடிந்துவிடும்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இடையில் எப்போதோ ஒரு சமயம் நண்பர்களுடன் கூடிக் குடித்துக்கொண்டிருந்தபோது சிறிய வாய்த் தகராறு முற்றி, கைகலப்பாகிவிட, ஏழாண்டுக் காலம் அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஒருவர் பகையாளி ஆகிவிட்டார். அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வாட்ச்மேன். மாரிமுத்துவின் தொழிலைப் பற்றி அவர் நாயுடுப்பேட்டை போலிசில் சொல்லிவிட, அன்றிரவே மாரிமுத்து போலிசுக்கு பயந்து கும்மிடிப்பூண்டிக்கு ஓடவேண்டியதாகிவிட்டது. அவர் போலிசில் மாட்டினால் அவரது கூட்டாளிகள் ஆறு பேர் சேர்ந்து மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே காரணம்.

கும்மிடிப்பூண்டியில் ரயில் ஏறி பேசின் பிரிட்ஜில் இறங்கி அங்கிருந்து கால்நடையாகவே ஜெமினி வரை வந்திருக்கிறார். கையில் இருந்த பணம் இரண்டு நாளில் தீர்ந்துவிட, எங்கே போவதென்று தெரியாமல் ஜி.என். செட்டி சாலையில் உள்ள குருத்வாராவுக்குப் போய் உட்கார்ந்திருக்கிறார். அங்கே அவருக்கு சாப்பாடு கிடைக்கவே, உண்ணும் நேரத்துக்கு குருத்வாராவுக்குப் போவதும் இதர பொழுதை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் கழிப்பதும் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தார். ஒரு கிரிமினலை நூலகத்தில் வந்து தேடலாம் என்று போலிசுக்குத் தோன்றவே செய்யாது என்பதில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.

பத்து நாள் தினமும் அருகருகே அமர்ந்து பழகிய நெருக்கத்தில் அவர் தனது சரிதத்தை என்னிடம் சொன்னார். ‘நான் ஒருவேளை போலிசில் உங்களைப் பற்றிச் சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. அதே பத்து நாள்களில் குருத்வாராவில் அவருக்குப் பழக்கமான யாரோ ஒருவர் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாளில் போய்விடுவேன் என்றார்.

நூலகமோ, ஆலயமோ. இந்த நகரத்தில் மனிதனுக்கு மீட்சி தர இன்னொரு மனிதன் கிடைக்காமல் போவதில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி