நிஜமான 16 சீர் [with penathal]

அரசியல்

காலை காலை வாரிய 16 சீர் விருத்தத்தை ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்ததன் விளைவு கீழ்க்கண்ட பா. இதனை என் ஆருயிர் உபிச பெனாத்தலுடன் இணைந்து எழுதியிருக்கிறேன். யாத்திருக்கிறேன்.

 

அதிரடி தினசரி புதுவித தடியடி மிதியடி தமிழா மிரளா திருநீ
வதைபடு உதைபடு வகையினில் சிறைபடு கதறிடு கண்ணா களிப் பாயிருநீ

இதுஒரு பரவசம் இனியொரு அதிரசம் இதைவிட சுவையாய் கிடைக்கா தப்பா
கதைவிட வருபவர் வதைபடும் விதமாய் புதிதொரு புயலாய் புறப்படு நீ

கொடிகளும் வெடிகளும் பிடிபடு பணங்களும் குடிமகன் நமக்கெனக் குரல்விடுறான் பார்
கோடியில் ஒருநாள் வாடி யிராமல் ஓடவிரட்டிட வந்திடு நீ.

மனதினில் மாசு மடியினில் காசு சிணுங்கிடும் ஓசை கேட்கிற திப்பொ
தனதென உனதுயிர் தமிழ்வளர் தேசம் தறுதலை கைகளில் போவது தப்பு

வினையிது விளைவெது கனவினில் வருவது விரைவினில் நடைபெற துதிப்போம் வா
சனிபலம் தனையழி சடுதியில் முடிவெடு சரித்திரப் பாடம் படைப்போம் வா

 

11 comments

 • http://myneta.info/tamilnadu2011/

  தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
  இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
  நன்றி

 • இதுக்கு விஜயகாந்த் கிட்ட அடி வாங்கறதே தேவலாம் போல இருக்கே 🙂

 • //மனதினில் மாசு மடியினில் காசு சிணுங்கிடும் ஓசை கேட்கிற திப்பொ
  தனதென உனதுயிர் தமிழ்வளர் தேசம் தறுதலை கைகளில் போவது தப்பு//

  மனதினில் மாசு படிந்த, நாம் நம் தலை(வர்)களை தறுதலைகள் என பழிப்பது சரியோ? 🙂

 • எழுத்தின் எல்லா வகையையும், நீங்கள் முயன்று பார்ப்பது , என்னை உற்சாகம் கொள்ளச்செய்கிறது

 • ஜில் ராஜன்: நன்றி. மரபுக் கவிதை எழுதிப் பார்ப்பது ஒரு நல்ல மொழிப்பயிற்சி. நான் வளர்ந்த சூழல் எனக்கு இதை எளிமையாக்கியது. என் தந்தை மரபுப் பயிற்சி உள்ளவர். சைதாப்பேட்டையில் பாரதி கலைக்கழகம் என்னும் அமைப்பை என் பெரியப்பா நடத்திக்கொண்டிருந்தார். சுமார் ஐம்பது மரபுக் கவிஞர்கள் அங்கே மாதம்தோறும் கவிதை வாசிப்பார்கள். இளந்தேவன், மதிவண்ணன், இளையவன், தமிழழகன் [இவர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்.] போன்ற தமிழின் மிக முக்கியமான மரபுக் கவிஞர்கள் அங்கே கவிதை பாடியவர்களே. இதில் மதிவண்ணன் ஓர் எண்சீர்ப் புலி. அவருடய சந்தங்கள் என் மனத்தில் இன்னும் நிற்கின்றன. இளந்தேவன் மிகப்பெரிய கவிஞர். அநியாயத்துக்கு அதிமுக அம்மாவிடம் போய்வீணாய்ப் போய்விட்டார். இணையத்தில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் இலந்தை ராமசாமி, ஹரி கிருஷ்ணன், மதுரபாரதி, கவியோகி வேதம் போன்றவர்கள் [மரபுக் கவிதை கூகுள்-யாஹு குழுக்களில் பார்க்கலாம்] பாரதி கலைக்கழகக் கவிஞர்களே.

  மரபு முதலில் சிரமமாகத் தோன்றலாம். பழகப் பழக அது மிக எளிதானதே. நமது சொல்வங்கியின் அளவை நாமே அளந்துபார்க்க இது மிகவும் உதவும். அடிப்படையில் நான் எழுத்தாளன். கவிஞன் அல்லன். எனக்கு இது மிக நன்றாகத் தெரியும். ஒரு கவிஞனாகும் எண்ணம் எனக்கு சத்தியமாகக் கிடையாது. அதே சமயம் என் மொழியைக் கூர்தீட்டிக்கொள்ள மரபுப் பயிற்சி உதவுவதால் அதைநான் விடாமல் செய்கிறேன். ட்விட்டரில் நான் போடும் வெண்பாம்கள் அனைத்தும் எண்ணி ஏழு வினாடிகளில் எழுதப்படுபவை. சொல்லுக்காகக் காத்திருக்கக்கூடாது என்பதே என் நோக்கம். அதைப் பயிற்சி செய்யவே இத்தகைய காரியங்கள் செய்கிறேன். இலக்கணத்தைப் புறக்கணித்து, வெறும் சந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என் பாக்கள் இலக்கணத்த மதிக்கும் கவிஞர்களுக்கு வருத்தம் தரவே செய்கின்றன. நான் இலக்கணம் அறியாதவன் அல்லன். ஆனால் என் பயிற்சிக்கு இலக்கணக் கட்டு அவசியமில்லை என்பதால் அதைத் தவிர்க்கிறேன், அல்லது பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

  தவிரவும் எனக்குக் கவிஞனாகும் எண்ணம் எல்லை என்பதால் இதைக் கண்டுகொள்வதில்லை. நல்ல கவிதைகளுக்கும் நல்ல கவிஞர்களுக்கும் எப்போதும் என் தலை தாழும். நான் நல்ல கவிஞன் இல்லை; ஒரு கவிஞனேகூட இல்லை என்கிற தெளிவு இருப்பதனால் இது.

 • இந்த எழுத்து எனக்கு புதிதாக உள்ளது ஐயா, எனினும் ரசிக்கும் படி உள்ளது.. நன்றி

Leave a Reply