தான் ஒரு சூனியன். தனக்கு மனம் என்ற ஒன்று இல்லை. அதனால்தான் சலனம் என்ற ஒன்று தனக்கு இல்லையென்றும் தன்னுடைய படைப்புகள் சலனமற்று தெளிவாக இருப்பதற்கும் அதுதான் காரணம் என்றும் சூனியன் கூறுவதாகத் தொடங்குகிறது அத்தியாயம்.
தன்னுடைய படைப்பில் இருக்கும் கலைநேர்த்தி கடவுளின் படைப்பில் இல்லை என்றும், கடவுளின் படைப்புகள் தங்களது படைப்பின் நோக்கம் இன்னதெனத் தெரியாமல், வாழத் தெரியாமல் அலைக்கழிவதைக் கண்டு பரிதாபப்படுவதாகவும் சொல்கிறான் அவன்.
ஆனால் அதே கடவுள் தன்னுடைய படைப்பை புறநேர்த்தியுடன் படைப்பதாகவும் அத்தகைய நேர்த்தியுடைய படைப்பில் ஒன்றாக ஷில்பாவையும் சொல்கிறான்.
இவையெல்லாம் எதற்கு? அவளுக்குள் நுழைந்து அவளது நினைவுகளை வேவு பார்ப்பதற்கு. அப்படி வேவு பார்த்ததில் அவளுக்கும் பாராவுக்கும் என்ன தொடர்பு என்பதைக் கண்டறிகிறான். அதை வைத்து அவளுக்கும் சாகரிகாவுக்கும் இடையில் அவன் எதையோ மூட்டிவிடப்போகிறான் என்கிற கணிப்பை உருவாக்கி முடிகிறது அத்தியாயம்.