பொலிக! பொலிக! 51

குமுறிக் குமுறிக் கொட்டிக்கொண்டிருந்தது கூட்டம். பதற்றமும் கோபமும் அறிவை மறைக்க, பேசத் தகாத வசை மொழியில் பெரிய நம்பியை மென்று துப்பிக்கொண்டிருந்தார்கள்.

‘பெரிய நம்பிக்கு புத்தி கெட்டுவிட்டது ஓய். ஆன வயதுக்கு அக்கடாவென்று வீட்டில் கிடக்காமல் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்?’

‘ஆளவந்தாரிடம் படித்தால் அறிவு வேண்டுமானால் விருத்தியாகியிருக்குமே தவிர குலம் உயர்ந்துவிடுமா என்ன?’

‘கிழவருக்கு ஆசையைப் பார்த்தீரா? அந்தணர் கையால் இறுதிக் காரியம் செய்யவேண்டுமென்பதைத் தமது இறுதி விருப்பமாகச் சொன்னாராம்.’

‘அது வெறும் திமிர் சுவாமி. நம்மை அவமானப்படுத்துவதற்காகத்தான் அவர் அப்படிக் கேட்டிருக்கிறார்.’

‘அதுசரி, அவர்தான் கேட்டாரென்றால் இவருக்கு எங்கே போயிற்று அறிவு?’

‘இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நாளை அக்ரஹாரத்தில் அரைக்காணி இடம் கிடைக்குமா என்று கேட்டு வருவார்கள்.’

‘அதெப்படி விடுவது? பெரிய நம்பி செய்தது பெரிய தவறு. இதற்கான பலனை அவர் அனுபவித்தே தீரவேண்டும்.’

‘சரியாகச் சொன்னீர். அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்வதுதான் சரி.’

‘அவர் வீட்டு வாசல்முன் முள்ளைக் கொண்டு கொட்டி மூடுங்கள். யார் வீட்டு விசேஷத்துக்கும் அவருக்கு இனி அழைப்பு கூடாது. அவர் வீட்டு நல்லது கெட்டதுக்கும் நமக்கும் இனி சம்மந்தமில்லை.’

திருவரங்கத்து அந்தணர்கள் பெரிய நம்பியை விலக்கி வைப்பதாக அறிவித்தார்கள். நம்பி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா என்று கேட்டுக்கொண்டார். இது அவர்களை மேலும் கோபப்படுத்தியது.

‘இவரை நாம் ஒதுக்குவது போதாது. உடையவர் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் புத்தி வரும்.’

யாரோ சொன்னார்கள். உடனே ஒரு கூட்டம் ராமானுஜரைச் சந்திக்கக் கிளம்பியது.

சேரன் மடத்து வாசலில் ராமானுஜரை அழைத்து நடந்ததை விவரித்தார்கள். காலமான மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பி பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்திருக்கிறார். இறந்த பிராமணருக்கு உயிருடன் இருக்கிற இன்னொரு பிராமணர் மட்டுமே செய்ய வேண்டிய காரியம். இது எப்படித் தகும் உடையவரே? உமது ஆசாரியர் செய்ததால் மட்டும் சரியாகிவிடுமோ?

ராமானுஜர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். சிறிது யோசித்துவிட்டு, ‘சரி, பெரிய நம்பியை விசாரிப்போம், பொறுங்கள்’ என்றார்.

நம்பி வந்து சேர்ந்தபோது கூட்டம் அதிகரித்திருந்தது. என்ன சொல்லப் போகிறார் பெரிய நம்பி? என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்? இப்படியொரு சம்பவம் திருவரங்கத்துக்கு முற்றிலும் புதிது. யாரும் செய்யாதது. எண்ணிக்கூடப் பார்த்திராதது. வெறும் துணிச்சலோ, அலட்சிய உணர்வோ இதனைச் செய்ய வைத்திருக்காது. வேறென்ன காரணம் இருக்கும்?

அவர்கள் காத்திருந்தார்கள்.

ராமானுஜர் பெரிய நம்பியைப் பார்த்துக் கேட்டார், ‘சுவாமி, இவர்கள் சொல்வது சரியா? மாறனேர் நம்பிக்கு நீங்கள் பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்தீர்களா?’

‘ஆம், செய்தேன். அதிலென்ன தவறு?’

‘எப்படிப் பேசுகிறார் பார்த்தீரா சுவாமி? இவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தது சரிதான்.’ என்று ஒரு குரல் உயர, ஆமாம் ஆமாம் என்று கூட்டம் அலறியது.

‘கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நீங்கள் சொல்லுங்கள் சுவாமி’ என்றார் ராமானுஜர்.

‘மாறனேர் நம்பி ஒரு சிறந்த பாகவதர். ஆளவந்தரின் அத்யந்த சீடர். அவரது இறுதி ஆசையை நிறைவேற்றுவது ஒரு திருப்பணியே அல்லாமல் வேறல்ல.’

‘அது சரி, ஆனால்…’

‘ஜடாயு இறந்தபோது ராமபிரான் அந்தப் பறவை அரசனுக்கு பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்ததாக வால்மிகி மகரிஷி எழுதுகிறார். ராமனைவிட நான் பெரியவனா அல்லது மாறனேர் நம்பிதான் ஜடாயுவைவிடத் தாழ்ந்தவரா?’

திடுக்கிட்டுப் போனது கூட்டம். ராமானுஜர் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘பாரதம் படித்திருக்கிறீர்களா? விதுரர் ஒரு பணிப்பெண்ணின் மகன். அவர் இறந்தபோது மாமன்னன் தருமபுத்திரன் அவருக்கு இறுதிச் சடங்கு செய்தான். நான் என்ன தர்ம புத்திரனைவிடப் பெரியவனா அல்லது மாறனேர் நம்பிதான் விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரா?’

‘நிச்சயம் இல்லை சுவாமி.’

‘பிறகெதற்கு விசாரணை? ஆழ்வார்களைப் படித்தவர்கள் இப்படி அபத்தமாக உளறிக்கொட்ட மாட்டார்கள். குலமும் செல்வமும் நலமும் மற்ற அனைத்தும் தருவது நாராயணனின் திருநாமம் மட்டுமே. வாழ்வின் இறுதிக் கணம் வரை அதை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்த ஒருவர் இறந்திருக்கிறார் என்றால் அவருக்குச் செய்வதா பிழைபடும்? அது பிழை என்றால் நான் பிழை புரிந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஜாதிப் பிரஷ்டம்தான் இதற்குத் தண்டனை என்றால் எனக்கு என் ஜாதியே வேண்டாம்.’

பெரிய நம்பி பேசியதைக் கேட்ட கூட்டத்தின் கொதிப்பு அதிகரித்தது. ‘உடையவரே, எப்படிப் பேசுகிறார் கேட்டீரா? இவரை என்ன செய்யலாம் என்று நீங்கள் இப்போது சொல்லுங்கள்!’

‘விழுந்து சேவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போங்கள். அது ஒன்றுதான் செய்யக்கூடியது’ என்று அமைதியாகச் சொன்னார் ராமானுஜர்.

ஆடிப் போனார்கள் அவர்கள்.

‘நீங்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தணன் என்பவன் அறவோன் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒருவர் சொல்லி வைத்திருக்கிறார். அறம் வளர்க்கிற விதம் இதுவா? மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம். மாறனேர் நம்பி அந்த விதத்தில் சந்தேகமின்றி அந்தணர். அதைப் புரிந்துகொண்டு அவருக்கு இறுதிக் காரியம் செய்துவைத்த இந்தப் பெரிய நம்பி அந்தணருக்கும் மேலே. அரங்கனுக்குப் பக்கத்தில் நிற்கிறவர். என்ன தெரியும் உங்களுக்கு? தீண்டாதவர் என்றும் திருக்குலத்தார் என்றும் நீங்கள் ஒதுக்கி வைத்த மாறனேர் நம்பி இல்லாவிட்டால் ஆளவந்தாரின் ராஜ பிளவை நோய் அவரை இன்னும் முன்னதாகவே எடுத்து விழுங்கியிருக்கும். அப்பேர்ப்பட்ட சிறந்த ஆத்மாவின் இறுதி ஆசையை இவராவது நிறைவேற்றாதிருந்திருந்தால் இந்த அரங்கமாநகரையே இந்நேரம் நதி கொண்டு போயிருக்கும்.’

உணர்ச்சி மேலிட்டு அவர் பொழிந்துகொண்டிருந்ததைக் கேட்ட கூட்டம் வாயடைத்து நின்றது. என்ன பேசுவதென்று யாருக்கும் புரியவில்லை.

‘மாறனேர் நம்பியின் உடல் புண்களைக் கழுவித் துடைத்து இவர் மருந்திடுவதை நான் கண்டேன். உங்கள் உள்ளத்தின் புண்ணெல்லாம் சீழ் பிடித்து ஒழுகுவதை உங்களால் உணர முடியவில்லையா? சுத்த வைணவன் என்றால் சாதி பார்க்க மாட்டான். மனித குலம் முழுதும் ஒரே சாதி என எண்ண முடிந்தவனால்தான் பரமாத்மாவின் பாதங்களை எட்டிப் பிடிக்க முடியும். இனி நீங்கள் யார் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நம்பிகளே! நீங்கள் வீட்டுக்குப் போங்கள்’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் போய்விட்டார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி