பொலிக! பொலிக! 52

வண்டவில்லியும் செண்டவில்லியும் மூச்சிறைக்க மடத்துக்கு ஓடி வந்தார்கள். ‘எங்கே உடையவர்? நாங்கள் உடனே அவரைப் பார்க்க வேண்டும்!’

‘பொறுங்கள் பிள்ளைகளே. கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளுங்கள். எதற்கு இந்த அவசரம்?’ என்று கேட்டார் கூரத்தாழ்வான்.

‘ஐயோ சுவாமி உங்களுக்கு விவரம் தெரியாது. பெரிய நம்பி வீட்டு வாசலில் இன்றைக்கு நடந்த களேபரம் ஊரையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவரை ஜாதி விலக்கம் செய்த அந்தணர்கள் அத்தனை பேரும் இப்போது அவர் காலடியில் விழுந்து கதறிக்கொண்டிருக்கிறார்கள். உடையவருக்கு இதைச் சொல்லிவிட்டுத்தான் மறு காரியம். கொஞ்சம் ஒதுங்குங்கள்’ என்று உள்ளே போகப் பார்த்தவர்கள், சட்டென்று நின்றார்கள். முதலியாண்டானும் ராமானுஜரும் அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.

கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். ‘நல்லது பிள்ளைகளே. அதோ அவர் வந்துவிட்டார். போய்ச் சொல்லுங்கள்.’

‘என்னவாம்?’ என்றார் ராமானுஜர்.

‘சுவாமி, இன்றைக்கு நம்பெருமாள் ரதோத்சவம் அல்லவா? ரதம் வீதிவலம் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய சம்பவம் நடந்துவிட்டது.’

‘அப்படியா? அசம்பாவிதம் ஒன்றும் இல்லையே?’

‘அசம்பாவிதம் இல்லை சுவாமி. இது அற்புதம். பெரிய நம்பியின் மகள் அத்துழாய் ஒரு சத்தம் போட்டாள் பாருங்கள், நம்பெருமாளின் தேர் நகராமல் நின்றேவிட்டது.’

திகைத்துவிட்டார் ராமானுஜர். முதலியாண்டான், கூரத்தாழ்வான் தொடங்கி மடத்தில் இருந்த அத்தனை சீடர்களும் அங்கே கூடிவிட நடந்ததை வில்லிதாசரின் மருமகன்கள் இருவரும் மாற்றி மாற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள்.

‘பெரிய நம்பியை அந்தணர்கள் ஜாதி விலக்கம் செய்து வைத்ததில் அத்துழாய்க்குக் கடும் கோபம் சுவாமி.’

‘நியாயமானதுதானே?’

‘அவர்கள் நியாயம் கேட்க நேற்று உம்மிடம் வந்தார்கள். அத்துழாய் இன்று அரங்கனையே வழியில் நிறுத்தி நியாயம் கேட்டுவிட்டாள்.’

‘அவள் செய்யக்கூடியவள்தான்.’

‘வியப்பு அதுவல்ல சுவாமி. அவள் தேரை நிறுத்தி, குமுறிக் கொட்டிய கணத்தில் இருந்து, அந்தணர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டதுவரை தேர் நகரவேயில்லை.’

‘நகர்த்த முடியவில்லை சுவாமி! பெருமான் சித்தமே பெரிய நம்பியின் பக்கம்தான் என்பது அவர்களுக்குப் புரிந்த பிறகுதான் தேர் அசைந்து கொடுத்தது.’

ராமானுஜர் கண்மூடிக் கரம் கூப்பி சில வினாடிகள் அப்படியே நின்றார். இது ஒரு தருணம். திருவரங்கத்து அந்தணர்கள் சிந்தைத் துலக்கம் பெறுவதற்கான தருணம்.  ஜாதியின் கோரப் பிடியில் சிக்கி எத்தனைக் களங்கப்பட்டுவிட்டது இச்சமூகம்! தனி மனிதர்களா இதைச் சரி செய்ய முடியும்? அரங்கனே இறங்கி வந்தால்தான் முடியும்.

‘சுவாமி, திருக்கோயில் கைங்கர்யத்தில் அனைத்து சாதிக்காரர்களையும் நீங்கள் ஈடுபடுத்தியிருக்கிறீர்கள். அதிலேயே திருவரங்கத்து அந்தணர்களுக்குக் கடும் புகைச்சல் கண்டிருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்’ என்றார் முதலியாண்டான்.

‘புகைந்து என்ன ஆகிவிடும்? பரமன் திருமுன் படைப்புகள் அனைத்தும் சமம். பக்தி ஒன்றுதான் அளவுகோல். அந்தணர் என்பதால் அரங்கன் அரவணைத்துவிடுவானா அல்லது பஞ்சமன் என்பதால் பத்தடி தள்ளித்தான் நிற்கச் சொல்லுவானா? இவர்களெல்லாம் யோசிக்க மறுக்கிறார்கள் தாசரதி.’

‘சுவாமி, சில நாள் முன்பு சன்னிதிக்கு நீங்கள் ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்துச் சென்றது பற்றிச் சொன்னீர்களே..’ கூரத்தாழ்வான் தயங்கித் தயங்கி மெல்ல ஆரம்பிக்க, சுற்றியிருந்தவர்கள் ஆர்வமாகிப் போனார்கள்.

‘அது தெரியாதே எங்களுக்கு? என்ன நடந்தது சுவாமி?’

நடந்தது ஓர் அற்புதம்தான். ஆனால் ராமானுஜர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. அன்றைக்கு அவர் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது எதிரே கூரத்தாழ்வான் வந்துகொண்டிருந்ததால் அவரிடம் மட்டும் நடந்ததைச் சொல்லியிருந்தார்.

‘தயவுசெய்து சொல்லுங்கள் சுவாமி. யார் அந்த சலவைத் தொழிலாளி? என்ன நடந்தது அவருக்கு?’

‘இங்கே காலட்சேபம் கேட்க தினமும் வருகிறவர்தாம். பாகவதம் சொல்லிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணர் ஒரு சலவைத் தொழிலாளியை அடித்துவிட்டார் என்று சொன்னேன் அல்லவா?’

‘ஆம் சுவாமி. மதுராவில் கம்சனை வதம் செய்யப் போய்க்கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட சலவைத் தொழிலாளி. நன்றாக நினைவிருக்கிறது. மன்னரின் உடைகளைத் தாம் அணிந்துகொள்ள விரும்பி, கிருஷ்ணர் கேட்கப் போக, அவரை அவமானப்படுத்துகிற விதமாகப் பேசிவிட்டதால்…’

‘அதேதான். இந்த சலவைத் தொழிலாளிக்கு அந்த சலவைத் தொழிலாளியைப் பற்றியே நினைப்பு போலிருக்கிறது. என்னிடம் வந்து பெருமாளுக்கு தினமும் சாற்றுகிற வஸ்திரங்களை நான் வெளுத்துத் தரலாமா என்று கேட்டார். அதற்கென்ன, தாராளமாகச் செய் என்று சொல்லி அனுப்பினேன்.’ ராமானுஜர் சற்றே நிறுத்த, கூரத்தாழ்வான் தொடர்ந்தார்.

‘அந்த சலவைத் தொழிலாளி தினமும் பெருமாள் வஸ்திரங்களைத் துவைத்துக் காயவைத்துக் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தார். உடையவர் அடிக்கடி அவரை அழைத்து, அவரது வேலை சிறப்பாக இருப்பதாகப் பாராட்டிக்கொண்டிருந்தார்.’

‘ஓ, அது தெரியுமே. நானே பார்த்திருக்கிறேனே’ என்றார் வில்லிதாசர்.

‘அதேதானப்பா! அந்தத் தொழிலாளி ஒருநாள் என்னிடம் வினோதமாக ஒரு கேள்வியைக் கேட்டார். சுவாமி, என் வேலை சிறப்பாக இருப்பதாக நீங்கள் பாராட்டுகிறீர்கள். ஆனால் நான் வெளுத்துக் கொடுக்கும் ஆடையை தினமும் அணிந்துகொள்ளும் அரங்கன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே..’

‘அதுசரி. அரங்கன் வாய் திறந்து பாராட்டவேண்டும் போல.’

‘அதேதான்! அவர் ஆசைப்பட்டதில் என்ன தவறு? எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறவருக்கு ஒரு அங்கீகாரம் வேண்டாமா? சரி வா என்னோடு என்று சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினேன்.’

‘நம்பவே முடியவில்லை சுவாமி. சன்னிதியில் ஏதும் அற்புதம் நிகழ்ந்துவிட்டதா?’

‘இல்லையா பின்னே? இவன் வெளுக்கும் ஆடைகள் உனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று நீயே சொல்லு என்று கொண்டு போய் முன்னால் விட்டேன். கோரிக்கை நியாயம் என்பதால் அரங்கன் பேசிவிட்டான்.’

ஆடிப் போனது கூட்டம். அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘அரங்கன் பேசியது பெரிதில்லை. அவனுக்கு ஒரு வரமும் கொடுத்தான் பார், அதுதான் பெரிது!’

திகைத்துவிட்டார்கள் சீடர்கள். ‘வரமா? என்ன வரம்? சீக்கிரம் சொல்லுங்கள் சுவாமி!’

ஆர்வம் தாங்கமாட்டாமல் அத்தனை பேரும் தவித்தார்கள்.

ராமானுஜர் புன்னகை செய்தார்.

எதைச் சொல்லுவது? எப்படிச் சொல்லுவது? நடந்தது அவர் மனத்துக்குள் மீண்டும் ஒருமுறை ஓடத் தொடங்கியது. நம்ப முடியாத சம்பவம்தான். ஆனால் நடந்துவிட்டதே!

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி