என்றாவது ஒரு நாள்

வீடு வெதுவெதுப்பாக்கும் விழாக்கள்கூட முக்கியமில்லை. வீட்டைச் சுற்றிக்காட்டும் வீடியோ கலாசாரம் ஒன்று சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நகரியில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டு விடியோ ஒன்றைப் பார்த்தேன். நேற்று என் அட்மின் இத்தகு விடியோக்கள் இன்னும் இரண்டினைச் சுட்டிக்காட்டினார். முதலாவது, தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் வீட்டுச் சுற்றுலா.  அவரது மகள் தயாரித்தது. மற்றது, பாண்டியன் ஸ்டோர் மீனா கட்டிக்கொண்டிருக்கும் வீடு.  அவரே சுற்றிக் காட்டினார்.

மோகன் பாபுவினுடையதை வீடென்று சொல்ல முடியாது. பங்களா, அரண்மனை போன்ற சொற்களும் பொருந்தாது. ஒரு கானகத்தை ஒட்டிய பல ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மரங்கள்,   வயல்வெளி, தோட்டங்களுக்கு (ஆர்கானிக்)  நடுவே கற்களாலான ஒரு சிறிய தீவு போல இருந்தது. தரையடித் தளம், தரைத் தளம், மேலே இரண்டு தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் ஏராளமான அறைகள். என்ன ஒன்று, ஒவ்வோர் அறையும் ஒரு வீடு அளவுக்கு இருக்கிறது.  வீட்டுக்கு வெளியே ஒரு நீச்சல் குளம். அது பிறருக்கு. இரண்டாவது தளத்தில் ஒரு நீச்சல் குளம். அது மோகன் பாபுவுக்கு.  அவர் குளித்துவிட்டு ரத்த நிறப் பட்டு வேட்டி சால்வையில் பூஜை செய்கிறார். பேத்தியுடன் விளையாட்டுச் சண்டை போடுகிறார். பிறகு பார் ரூமுக்குச் சென்றுவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர் மீனா கட்டிக்கொண்டிருக்கும் வீடு சென்னைக்கு வெளியே எங்கோ இருக்க வேண்டும். அநேகமாக நகரியில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டுக்கு அருகிலாக இருக்கும். சுற்றிலும் நிறைய காலி மனைகள் தெரிகின்றன.  இதில் ஆடம்பரம் அதிகமில்லை. கீழே ஒரு ஹால், கிச்சன். மாடியில் சில அறைகள். அப்பா அம்மாவுக்கு என்று சொல்லி ஓர் அறையைக் காட்டினார். அவரது அப்பா அம்மாவா, அவர் கணவருடைய அப்பா அம்மாவா என்று சொல்லவில்லை. ஆனால் ஃபால் சீலிங்கெல்லாம் செய்திருக்கிறார்.

ரோஜா கட்டியிருக்கும் வீட்டு விடியோவும் அமர்க்களமாக இருக்கிறது. அவர் நடிக்க வந்த தினம் முதல் இன்றைய எம்.எல்.ஏ வாழ்க்கையை எட்டும்வரை பட்ட பாடுகள் அனைத்தும் எனக்குத் தெரியும்.  ரோஜாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு போட்டோகிராஃபர் என் நண்பன் என்பதால் நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறான்.

இருக்கட்டும். எனக்குக் கூடப் பன்னெடுங்காலமாக நான் எழுதுவதற்கும் படிப்பதற்கும் வாழ்வதற்குமாக ஒரு ஸ்டுடியோ கட்ட வேண்டும் என்று ஆசை. வீட்டில் எனக்கென்று ஓர் அறை இருக்கிறது. தவிர சின்ன வீடு அளவுக்கே ஓர் அலுவலகமும் வைத்திருக்கிறேன். நான் சொல்வது அதுவல்ல. ஒரு ஸ்டுடியோ. சத்தமில்லாத, தூசற்ற, மாசற்ற, வெள்ளை வெளேரென்ற நிறத்திலமைந்தது. நகர சந்தடியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.  யாருக்கும் அட்ரஸ் தர மாட்டேன். அது என் பிரத்தியேகம். சுற்றிலும் வெட்ட வெளி, புல்தரை முக்கியம். நீச்சல் குளம் இருந்தால் விசேடம். இல்லாவிட்டால் பரவாயில்லை. ஸ்டுடியோவானது, குறைந்தது நாற்பது அடிகள் நீள அகலம் கொண்டிருக்க வேண்டும். வட்ட வடிவில் அமையுமானால் அருமை. என் உடலுக்கு உகந்த  பதமான குளிர் சீதோஷணம் அங்கே நிரந்தரமாக இருக்க வேண்டும்.  உட்கார்ந்து எழுத, நின்றபடி எழுதவெனத் தனித்தனி உயர்தர செட்டப்கள் அவசியம்.  நல்ல ஒலியமைப்பு, உறுத்தாத ஒளியமைப்பு, அனைத்துக்கும் மேலே, கூரையில் பழைய நடிகை அருணாவின் கண்களை என்லார்ஜ் செய்து பொருத்தியது போன்றதொரு கண்ணாடி வெளி. வானம் தெரிய வேண்டும். கையெட்டும் தொலைவில் ஒரு யமஹா கீபோர்ட். கண்ணெட்டும் தொலைவில் என் புத்தகங்களுக்கான ஓர் அறை. உட்கார்ந்தால் புதைத்துக்கொள்ளும் சோபா செட் ஒன்று.  போதும்.

என்றாவது அமைந்தால் நானும் ஒரு விடியோ போடலாமென்று இருக்கிறேன்.

(ஸ்பான்சர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!