கல்கியும் நானும்

இந்தாங்க சார். தலையங்கம் ரெடி. படிச்சிப் பாருங்க. சரியா இருந்தா வெச்சிக்கங்க. எதுனா சேக்கணும்னு தோணிச்சின்னா சேருங்க. பெரிசா இருக்குன்னு தோணிச்சின்னா வெட்டிக்கங்க.

நியாயமாக எனக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரே கிளுகிளுப்பாகிவிட்டது. அரிச்சுவடி கற்கக் கல்கிக்குப் போய்ச்சேர்ந்திருந்த காலம். யார் என்ன எழுதி அனுப்பினாலும் நாலு வரியையாவது அடித்துவிட்டு நான் எழுதிச் சேர்ப்பதில் ஒரு கெட்ட சுகம் கண்டுகொண்டிருந்தேன். ஆனால் தலைவர் எழுதிய (ராஜேந்திரன் சாரை அப்படித்தான் அழைப்போம்.) தலையங்கத்திலேயே கைவைக்க ஒரு வாய்ப்பு வரும் என்று எண்ணியதில்லை. அதுவும் அவரே தருகிற வாய்ப்பு.

அந்த புதன்கிழமையை என்னால் மறக்க இயலாது. நாலாக வெட்டிய கேலண்டர் தாளின் பின்புறத்தில் நாநூறு கொசு அடித்துப் போட்ட மாதிரியான கையெழுத்தில் அவர் நுணுக்கி நுணுக்கி எழுதிய தலையங்கம் என்னிடம் வந்தபோது மாலை நாலரை இருக்கும்.

ஆர்வம் பொங்க அவசரமாக ஒருதரம் படித்தேன். அதன்பிறகு பேனாவைத் திறந்துகொண்டு எடிட்செய்ய ஆயத்தமானேன். மணி ஐந்து. ஐந்தரை. ஆறு. பிரதி கம்போஸுக்குப் போகவேண்டும். எத்தனை முறை படித்தபோதும் என்னால் அந்த நாலு கால் பக்க பேப்பர்களில் நாலு எழுத்தைக்கூட மாற்ற முடியவில்லை. ஒரு சொல்லை மாற்றி இன்னொன்றைப் போடலாமென்றால்கூட முடியவில்லை. மகத்தான தோல்வி.

அந்த இதழ் வெளியாகி, ஒருவார இடைவெளியில் மீண்டும் என் பணி ஆரம்பமானது. அதே போன்ற புதன் கிழமை. அதே மாலை வேளை. தலைவரிடமிருந்து தலையங்கம் வந்தது. உடனே இண்டர்காமில் அழைப்பும் வந்தது.

தலையங்கம் அனுப்பிட்டேன் சார். படிச்சிப் பாருங்க. சரியா இருந்தா வெச்சிக்கங்க. எதுனா சேக்கணும்னு தோணிச்சின்னா சேருங்க. பெரிசா இருக்குன்னு தோணிச்சின்னா வெட்டிக்கங்க.

மீண்டும் தோல்வி. அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு சிறந்த எடிட்டருக்கு இரண்டு தகுதிகள் அடிப்படையில் தேவைப்படுகின்றன. ஒன்று, அடுத்தவன் கைவைக்க முடியாத தரத்தில் எழுதுவது. இரண்டாவது, தன்னகங்காரம் என்ற ஒன்று அறவே இல்லாதிருப்பது.

நான் வம்புக்காக அல்லது வீம்புக்காக அவரது தலையங்கத்தில் ஓரிரு மாற்றங்கள் செய்திருந்தாலும் அவர் கோபித்துக்கொள்ளப் போவதில்லை. அவரது சுபாவம் நானறிவேன். ஆனால் ஒரு பயிற்சி நிலைப் பத்திரிகையாளன் பாடம் பயிலத் தனது தலையங்கத்தையே பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை எத்தனை பேருக்கு வரும்?

படித்த காலத்தில் என் பள்ளி ஆசிரியர்கள் தராத பிரமிப்பையும் வியப்பையும் கல்கியில் தலைவர் எனக்கு அளித்தார். உண்மையில், என் அகங்காரம் சரணடைந்த இடம் அது ஒன்றே.

கல்கி எத்தனையோ பேரை வளர்த்திருக்கிறது. எத்தனையோ பேரை வாழவைத்திருக்கிறது. ஆனால் என்னளவுக்கு இந்தப் பத்திரிகையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் உண்டா என்று தெரியவில்லை. குறிப்பாக, சீதா ரவி ஆசிரியர் பொறுப்புக்கு வந்தபிறகு அலுவலகத்தில் நான் அனுபவித்த பூரண சுதந்தரத்தைச் சொற்களால் விவரிக்க முடியாது. இஷ்டத்துக்கு எழுதித் தீர்த்தேன். பரீட்சை என்று எண்ணி நிறைய விஷப்பரீட்சைகள் செய்து பார்த்தேன். ஆசிரியர் ஒருபோதும் முகம் சுளித்ததில்லை. கண்டித்ததில்லை. கூடாதென்று சொன்னதில்லை.

பின்னாளில் நான் ஆசிரியரானபோது என்னிடம் பணியாற்றியவர்களுக்கு நான் அப்படிப்பட்ட சுதந்தரத்தை அளித்தேனா என்று எண்ணிப் பார்க்கிறேன். கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.

சிறந்த மாணவன் என்று பேரெடுப்பது சுலபம். சிறந்த ஆசிரியராக இருப்பது ரொம்பக் கஷ்டம். கல்கி எனக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்களை அளித்த இடம்.

வணங்குகிறேன்.

(கல்கி நவம்பர் 1, 2015 இதழ்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter