சூரியக்கதிர் பத்தி

இட்லி உப்புமா 1

எனக்கு இட்லி உப்புமா ரொம்பப் பிடிக்கும். வெறும் இட்லி, வெறும் உப்புமாவில் ரசிக்கத்தக்க நூதனங்கள் ஏதும் கிடையாது. தொட்டுக்கொள்ளும் ஐட்டம் சரியாக இல்லாவிட்டால் எந்த மனுஷகுமாரனும் தின்னமாட்டான். ஒரு புதினா சட்னியோ, தக்காளி சட்னியோ, சாம்பாரோ, வேறு ஏதாவதோ இல்லாமல் இரண்டு வஸ்துக்களையும் வாயில் வைக்க முடியாது.

இதுவே இட்லியை உதிர்த்துப் போட்டு உப்புமாவாக்கிப் பாருங்கள். வெந்த சமாசாரத்தை வாணலியில் இட்டு மிதமான சூட்டில் வதக்கும்போதே அதிலொரு நிறமும் மணமும் சேரத் தொடங்கும். பச்சை மிளகாய், கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உளுத்தம்பருப்பு, கால் ஸ்பூன் பெருங்காயம் – போதும். நாலு ஸ்பூன் எண்ணெய். மேலும் கலையுள்ளம் மிச்சமிருந்தால் வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பைக் கூட வறுத்துச் சேர்க்கலாம்.

இந்த அபாரமான சிற்றுண்டியைக் கண்டுபிடித்த பெண்மணி யாரென்று சொல்லாமல் செந்தமிழ்நாட்டுச் சரித்திரப் புஸ்தகங்கள் இருட்டடிப்பு பண்ணிவிட்டன. இந்த சரித்திரமே இப்படித்தான். நியாயமான பெருமையை, உரியவர்களுக்கு எப்போதும் சரியாகக் கொடுக்காது விட்டுவிடும். குறைந்தபட்சம் நாமாவது இட்லி உப்புமா சாப்பிடும்போதெல்லாம் அந்த அடையாளமில்லாத தமிழ்த்தாயை நினைத்துக்கொள்ளவேண்டும்.

எனக்குப் பாட்டியாக இருந்த ஸ்ரீமதி ரங்கநாயகி அம்மாள் என்பவர் அற்புதமாக அரிசி உப்புமா சமைப்பார். கசகசாவைக் கவிழ்த்த மாதிரி ஒன்றோடொன்று ஒட்டாமல் அது என்ன அப்படியொரு பதம் என்று வியந்து வியந்து தின்று தீர்த்திருக்கிறேன். பாட்டியாக இருந்தவருக்கு சமைக்கத்தான் தெரியுமே தவிர, கலைத்தொழில் நுட்பத்தை எடுத்து விவரிக்கத் தெரியாமல் போய்விட்டது. ஒருவேளை அது தொழில் தருமம் அல்லவென்று அவர் கருதியிருக்கலாம். இருட்டுக்கடை அல்வா ஃபார்முலா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ஃபார்முலா, திருப்பதி லட்டு ஃபார்முலா, தூத்துக்குடி மக்ரூன் ஃபார்முலா மாதிரி சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெரு ரங்கநாயகி அம்மாளின் அரிசி உப்புமா ஃபார்முலாவும் விசேடமானதே.

கி.பி. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் ஒன்றில் அவர் காலமானபிற்பாடு பல்வேறு நாரீமணிகள் சமைத்த பலவித உப்புமாக்களைச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். உப்புமா அல்ல; உணவின்மீதே விரக்தி ஏற்பட்டு துறவு கொண்டோடிவிட வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்று கதிகலங்கும்படியாகவே அவை இருந்திருக்கின்றன.

ஹோட்டல்களில் கிச்சடி என்ற பெயரில் உப்புமாவுக்கும் பொங்கலுக்கும் ஏற்பட்ட கள்ள உறவின் விளைவாகப் பிறந்த குழந்தையாக ஒரு ஐட்டத்தை மிகத் தீவிரமாகப் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்கள். அதையும் முயற்சி செய்து பார்த்ததில், அது புழல் களிக்குப் புடைவை சுற்றிய மாதிரி இருந்தது. மேலுக்கு இரண்டு முந்திரிப் பருப்பைத் தூவிவிட்டால் சரியாப் போச்சா? தமிழன் நாவைத் தவறாக மதிப்பிட்டுவிட்டார்கள். விளைவு, ஒரு சில ஹோட்டல் ஊழியர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டதில், கிச்சடியாகப்பட்டது வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும் பட்ஜெட் தமிழ் சினிமாக்களை விடவுமே படுதோல்வி கண்ட ஐட்டம் எனத் தெரிந்துவிட்டது.

ரங்கநாயகி அம்மாளும் அற்புத அரிசி உப்புமாவும் என் வாழ்விலிருந்து விடைபெற்றுப் பல்லாண்டுகள் கழிந்த பிற்பாடு, தற்செயலாக ஒருநாள் ராஜலட்சுமி அம்மாள் என்கிற இன்னொரு நாரீமணியைச் சந்திக்க நேர்ந்தது. இவர் என் தகப்பனாருடைய சம்மந்தியின் மூன்றாவது மகளுடைய கணவருக்கு மாமியார் ஆவார்.

இவர்தான் சரித்திரத்தின் புதைபொருளான இட்லி உப்புமாவுக்குப் புத்துருவம் கொடுத்து எனக்கு அடையாளம் காட்டியவர். இட்லி உப்புமா என்பது, இட்லி மீந்தால் செய்வது என்னும் மூட நம்பிக்கையைத் தகர்த்து, இட்லி உப்புமாவுக்காகவே ஒரு குறிப்பிட்ட பதத்தில் மாவு அரைத்து, இட்லியாக்கி, ஆறவைத்து, உதிர்த்து, சிலபல சாமக்கிரியைகள் சேர்த்து, அதை ஒரு நட்சத்திர அந்தஸ்து சிற்றுண்டியாக எனக்கு மீள் அறிமுகப்படுத்தியவர்.

முன்பும் இட்லி உப்புமா சாப்பிட்டதுண்டு. என்றும் எங்கும் எப்போதும் கிடைக்கக்கூடிய எளிய சிற்றுண்டிதான். ஆனாலும் அதன் ஒரிஜினல் மணமும் குணமும் ருசியும் எல்லார் சமைப்பிலும் கூடாது. அதற்காக உங்கள் அத்தனை பேரையும் என் தகப்பனாருடைய சம்மந்தியின் மூன்றாவது மகளுடைய கணவரின் மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்வது இயலாத காரியம்.

ஒன்று செய்யலாம். நீங்களாகவே செய்யக்கூடியது. மதராசப்பட்டிணம் படத்துக்குப் போகலாம். அது ஒரு நல்ல இட்லி உப்புமா திரைப்படம். டைட்டானிக்கை இட்லியாகவும் காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பழம்படங்களை இதர சாமக்கிரியைகளாகவும் கொண்டு, ராஜலட்சுமி அம்மாளின் தொழில்நுட்பத் திறத்துக்குச் சற்றும் சளைக்காத திறமை கொண்ட இயக்குநரால் சமைக்கப்பட்டது. ஒரே ஒரு கூவக்கரை செட்டை வைத்துக்கொண்டு முழுப் பழைய சென்னையைச் சுற்றிக்காட்டிவிட்டது மாதிரி ஒரு தோற்ற மயக்கத்தைக் கொடுத்துவிடுகிறார் பாருங்கள், அதிலிருக்கிறது திறமை. முத்தையாவும் அசோகமித்திரனும் நல்லி செட்டியாரும் இதன்பொருட்டே சரித்திரத்தால் மறக்கடிக்கப்படப் போகிறார்கள். பின்னே? மேற்குறிப்பிட்ட பழஞ்சென்னை ஆய்வாளர்கள் வசம், துரதிருஷ்டவசமாக மேலே சொன்ன முந்திரிப்பருப்பு இல்லையே? மதராசப்பட்டிணத்தில் அது இருக்கிறது. எமி ஜாக்சன்!

படம் கிடக்கட்டும். எமி பற்றி உமி அளவாவது சொல்லவேண்டும். படம் பார்த்த நாளாக, இப்படியொரு லட்டுப் பெண்ணை எங்கிருந்து பிடித்து வந்தார்கள் என்று ஆச்சர்யம் தாங்கமாட்டாமல் இணையத்தில் அவரைப் பற்றிப் பிரதிதினம் மூன்றுவேளை தகவல் தேடிக்கொண்டிருந்தேன். கையிலே அவர் தாலியை வைத்துக்கொண்டு திரியாது இருந்தாலுமேகூட, இங்கிலாந்தில் உதித்த தமிழ் நிலவு போலத்தான் என் கண்களுக்குப் புலப்படுகிறார். பார்க்கிற, பேசுகிற, பழகுகிற அத்தனை பேரிடமும் எமி புராணம் பாடிக்கொண்டிருந்தேன்.

வெளிநாட்டுக்காரியாக இருந்தாலும் தமிழ்ப்பண்பாடு தலையுச்சியிலிருந்து கார்ப்பரேஷன் லாரித் தண்ணீர்போலக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று வியந்துகொண்டிருந்தேன். குஷ்புவுக்கு அடுத்து எமிக்கு இங்கே தேவாலயம் எழுப்ப எந்த இடம் சரியாக இருக்கும் என்று யாராவது ஆராயத் தொடங்கினால் தன்னார்வலனாகப் போய் உதவி செய்யவும் சித்தமாக இருந்தேன்.

விதி. எனக்கொரு சிநேகிதர் இருக்கிறார். ப்ரூனோ என்று பேர். அரசாங்க ஆசுபத்திரியில் டாக்டராக உத்தியோகம் பார்ப்பவர். என் எமி இம்சை பொறுக்காமல் ஒரு சுப தினத்தில் அவரது இணைய இல்லப் பக்கத்தின் சுட்டியைத் தேடிப்பிடித்து, ராட்சசனின் உயிரைப்போல் எனதுயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் ட்விட்டரில் போட்டு, பார் பார் பயாஸ்கோப் பார் என்றார்.

ஐயகோ! இதற்குமேல் என்ன எழுதுவேன்? எமி எமி எமி என்று நாமஜபம் செய்துகொண்டிருந்த்தற்குப் பரிகாரமாக இப்போது எமி எமி லாமா சபக்தானி என்று புலம்பும்படியாகிவிட்டது.

இட்லி உப்புமாவைக் கூட அதிகம் சாப்பிட்டால் சிலபல நூதன அவஸ்தைகள் உண்டென்று அறிவோமாக.

பிகு 1: தேசநலன் கருதி எமியின் இணையப்பக்கத்தின் சுட்டியைத் தராது இருந்துவிடலாம் என்று தோன்றினாலும், தமிழர்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் என்கிற பேருண்மையும் தெரிந்தபடியால் அது இங்கே.

பிகு 2: ஏலி ஏலி லாமா சபக்தானி என்பது ஒரிஜினல் வசனம். என் தேவனே, என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று பொருள். எம்பெருமான் இயேசுவின் சொற்கள் இவை.

[நன்றி: சூரியக்கதிர், ஆக 1-15]

Share

15 Comments

 • //இந்த அபாரமான சிற்றுண்டியைக் கண்டுபிடித்த பெண்மணி யாரென்று சொல்லாமல்/
  அது கண்டிப்பா சோழமண்டலம்தான் எங்க ஏரியாவுலதான் நிறைய செய்வாங்களே:))

  காந்தல் ருசி – இட்லி உப்புமாவில்தான் ருசித்திருக்கிறேன் பிரமாதம் போங்க! 🙂

  //இவர் என் தகப்பனாருடைய சம்மந்தியின் மூன்றாவது மகளுடைய கணவருக்கு மாமியார் ஆவார்./
  மாமியாரை மாமியார்ன்னு சொல்லாம எம்புட்டு சுத்தி வளைச்சு ஸ்ஸ்ஸ்ப்பா ஃபேமிலி டீரி போட்டுல்ல கண்டுபுடிக்கவேண்டியதாப்போச்சு!

 • எனக்கு சூர்யவம்சம் படம் பார்த்துத்தான் இட்லி உப்புமாவே தெரியும்.

 • இட்லி உப்பமவோட கொஞ்சம் ஊருகாய் வைத்து சாப்பிட்டு பாருங்க..இதே மாறி சேவையும் சூப்ப்ரா இருக்கும் try…

 • கட்டுரையை படிக்கும் போது அவ்வப்போது வந்த சிரிப்பை விட அந்த லிங்கைப் போய்ப் பார்த்த போது வந்த சிரிப்பு ஆனந்தம் அட அட! அதுவும் குறிப்பா British Lingeire Model Amy Jackson அப்படினு படிச்சப்ப தெரியாத்தனமா தமிழ்ப்பண்பாடு நிலவு அப்படி இப்படினு எல்லாம் நீங்க எழுதினது ஞாபகத்துக்கு வந்து போச்சு!

 • உப்புமாவில் ஆரம்பித்து சினிமாவில் முடிக்க உங்களால் மட்டுமே முடியும்.அது சரி உப்புமா சினிமா கம்பெனிகளை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே !

 • […] This post was mentioned on Twitter by Boomi, siththar. siththar said: இட்லஉப்புமா கட்டுரை பார்த்தேன். நல்லக் கட்டுரை. கண்ணை மூடிக்கொண்டுப் படிக்கலாம். பரிந்துரைக்கிறேன். http://writerpara.com/paper/?p=1309 […]

 • //இட்லி உப்புமா என்பது, இட்லி மீந்தால் செய்வது என்னும் மூட நம்பிக்கையைத் தகர்த்து//
  இவையெல்லாம் இல்லாமல் இட்லியை கண்டாலே ஜன்ம விரோதி போல பார்த்து தொலைக்கும் கணவரைப் பெற்ற என் போன்ற அபாக்யவதிகள், கால் கடுக்க நின்று தோசை வார்க்க முடியாத உடல் நிலை வாய்க்கும் போதும் செய்து சமாளிப்போம்… :)))

 • திரு ப ராகவன் அவர்களுக்கு வணக்கம் தற்போது ப்ளாக் ல் எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன் அதனை பார்த்து தங்களது ஆலோசனையை தெரியபடுத்தவும் பிளாக்ஸ்பாட் முகவரி http://ujiladevi.blogspot.com/ நன்றி

 • // இந்த அபாரமான சிற்றுண்டியைக் கண்டுபிடித்த பெண்மணி யாரென்று சொல்லாமல் செந்தமிழ்நாட்டுச் சரித்திரப் புஸ்தகங்கள் இருட்டடிப்பு பண்ணிவிட்டன. //

  மேகா சீரியல் பார்க்கும் பெண்கள், கணவனுக்கு ஏதையாவது போட வேண்டுமே என்று காலையில் போட்ட இட்லியை உப்புமாவாக்கி கொடுக்கிறார்கள். தலைவீதியை நொந்துக் கொண்டு ஆண்களும் சாப்பிடுகிறார்கள்.

  சரித்திரம் பெண்மணியின் பெயரை இருட்டடிப்பு செய்தது போல் செய்முறையையும் செய்திருக்கலாம்.

 • இட்லி உப்புமாவின் ரிஷிமூலம் இப்படியும் இருக்கலாம்: முந்திய இரவில் விருந்தினர்களுக்கு ‘ராத்திரி பலகாரத்துக்காக’ குத்துப்போணி நிறைய இட்லி பண்ணி வைத்திருந்து அவர்கள் யாரும் வராததால், உங்கள் கொள்ளுப்பாட்டியின் கொள்ளுப்பாட்டியோ, என் கொள்ளுப்பாட்டியின் பாட்டியோ, அடுத்தநாள் காலையில் அது ‘பழம்பத்து’ என்பதால், அதை உதிர்த்துப்போட்டு, வீடு நிறைய இருந்த பேரன் பேத்திகளுக்கு இட்லி உப்புமாவை காலை உணவாக கொடுத்திருப்பார்.

  உங்கள் ரசிப்பியில் ஒரு அடிஷன்: தாளித்துக்கொட்டும்போது, அதனுடன் இரண்டு மூன்று ஸ்பூன் தோசை மிளகாய்ப்பொடியையும் சேர்த்தால், அது அமிர்தம் தான்!

  பாரதி மணி

 • எந்த ஒரு உணவனாலும் அன்பு, பாசம், அக்கறையுடன் செய்தாள் அது அமிர்தம் தான். இதில் இந்த உப்புமா ஒண்றும் விதிவிலக்கல்ல. அமிர்தமே ஆனாலும் இது இல்லையென்றால் கஷ்டம் தான் சாப்பிட. உண்மை தானே?

 • அமெரிக்க வரட்டு ரொட்டியையும், ஜிலீர் சீரியலையும் பார்த்தால் வரும் கோபத்தில், இந்த ஞாயிறு காலையில் இட்லி உப்புமா கனவுக்கன்னி ஏமியாய் ஜொலிக்கிறது.

  இட்லி உப்புமாவுக்காக இப்படி மசக்கைப்படவைத்த உம்மை என்ன செய்யலாமென்று கோபத்தில் ‘நறநற’வென்று பல்லைக்கடிக்க நினைத்தாலும் அந்த ஏஞ்சலேமியின் லிங்கைக் கொடுத்து கூல் செய்துவிட்டதால், ‘ஹிஹி’யென்று மன்னிக்கிறேன்!

 • நானும் சமீபத்தில் தான் அந்த அம்மணியின் நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் உள்ள படங்களை பார்த்தேன். நம்ம தமிழ்நாட்டு (சில)இயக்குனர்கள் மட்டும் தான் பெண்ணுங்கள அழகா காட்டுறாங்கனு நினைக்கேன். இந்த படத்துல எமி, சமீரா ரெட்டி (வாரனம் ஆயிரம்),த்ரிஷா (விண்ணைத்தாண்டி வருவாயா),.. அடடா அவசரத்துக்கு லிஸ்ட் வரமாட்டேங்குது.

 • லக்கி மட்டுமல்ல நிறைய பேருக்கு உப்புமா பிடிக்காது. 50 வருடமாக நல்ல உப்புமா சாப்பிடும் பேரு கிடைத்தவன். ஆனால் இட்லி உப்புமாவில் மிளகாய் பொடி முக்கியமான ஐடம். அம்மா லஞ்ச் பாக்ஸில் வைப்பதை நண்பர்களே காலி செய்து விடுவார்கள் .

 • இப்போதுதான் இந்த லின்க் கிடைத்துப் படித்தேன், சுவைத்தேன்! அம்மாவிடம் பகிர்ந்து கொண்டபோது, ஸ்ரீரங்கத்தில் அவள் அம்மாவும் மிளகாய்ப்பொடி போடமாட்டாளாம், ஆனால் வறட்டு மிளகாய் சேர்ப்பாளாம்! எனக்கு மிளகாய்ப் பொடி கலந்த இட்லி உப்புமா தான் பிடித்தம். ரொம்ப இட்லி மிஞ்ஜாதததால் எப்பவும் நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கைப்பிடி தான் சாப்பிடுவது வழக்கம்! அதனாலேயே அதற்கு சுவை கூடும்! – ஜெ.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி