நூத்தியாறுப்புள்ளிநாலு

விடிந்து மணி ஏழானால் போதும். என் வீட்டு ரேடியோ தவறாமல் நூத்தியாறுப்புள்ளினாலு பாடத் தொடங்கிவிடுகிறது. மிர்ச்சி காலத்து சுசித்ரா இங்கே இப்போது மானிங் மீட்டர் போடுகிறார். பிட்டுச் செய்தி, நேயர் கருத்து, நெரிசல் தகவல், சினிமாப்பாட்டு என்று எல்லோரும் எப்போதும் கலக்கிற கலவையே எனினும் சுசித்ராவிடம் என்னவோ ஒன்று கூடுதலாக இருக்கிறது.

என் மனைவி மானிங் மீட்டர் ரசிகை. தவறியும் இன்னொரு பண்பலைக்கு அவள் போவதில்லை. இது பற்றிய விமரிசனத்தை என் மகள் அவ்வப்போது வெளிப்படுத்துவதுண்டு. ஆனாலும் பெண்ணாளும் பூமியில் என்னாலானது ஒரு மாநில ஆளுநர்போல் நீட்டுமிடத்தில் கையெழுத்திடுவது மட்டுமே.

அந்த வளவளா, ஆரம்பத்தில் கொஞ்சம் சலித்ததென்றாலும் விதிப்பயனாகப் பழகிவிட்டதில் பிடித்துப் போய்விட்டது. சுசித்ரா, பாடுவதைக் காட்டிலும் நன்றாகப் பேசுகிறார். ஸ்பாண்டேனிடியில் அவரை அடித்துக்கொள்ள இன்னொருவரில்லை. தவிரவும் காலை நேரங்களுக்கான அவரது பாடல் தேர்வுகளில் தென்படுகிற புத்திசாலித்தனம். வேலை பரபரவென்று நடப்பதற்கு உதவக்கூடிய இதமான மெட்டுகளிலான பாடல்களை மட்டுமே ஒலிபரப்புகிறார். தவறியும் காது கிழிக்கும் குத்துகளில்லை.

முன்பெல்லாம் அடிக்கடி அவர் பாடிய பாடல்களையே போடுவார். போக்கிரி வெளியான நாள்கள் நினைவிருக்கின்றன. என் காலைகள் எப்போதும் மான் புலியை வேட்டை ஆடுமிடத்தில் மட்டுமே விடியும். இப்போது பரவாயில்லை. அவர் பாட்டைவிட பேச்சு அருமை என்பது அவருக்கே புரிந்திருக்கிறது.

இன்று காலையும் மானிங் மீட்டரில் எப்போதும்போல் விடிந்தது. கோவை கமிஷனர் சைலேந்திர பாபுவுக்குக் கேள்வி அனுப்பச் சொல்லிக் கேட்டார் சுசித்ரா. ஒரு கொலையாளியை என்கவுண்டர் செய்ததன்மூலம் ஒரு நாளில் மாநில ஹீரோவாகியிருக்கிற போலீஸ்காரர். உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. வன்முறைக்கு பதில் வன்முறையே சரியான தீர்ப்பென்று மக்களனைவரும் முடிவு செய்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நிதானம் எல்லை கடந்துவிட்டதன் விபரீத விளைவு மட்டுமே இது.

சம்பவத்தை விவரிக்கும்போது சுசித்ராவின் குரலில்தான் என்ன குதூகலம். யதார்த்த வாழ்வுக்கும் மசாலா சினிமாவுக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டிருக்கின்றன. அற்புதங்கள் அந்தந்தக் கணமே நிகழ்ந்துவிட வேண்டுமென்ற அவசரம் எங்கும் தெரிகிறது.

நல்லது. இதன் நீட்டல் விகாரமே ஆப்கன் தாலிபானியத் தீர்ப்புகள் என்பதை சுசித்ராவுக்கு எடுத்துச் சொல்ல  மிகவும் விரும்பி அவர் அளித்த எண்ணுக்கு ஏழெட்டு முறை முயற்சி செய்து பார்த்தேன்.

நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருக்கிறார். சிறிது நேரத்துக்குப் பின் டயல் செய்யவும்.

டயல் செய்வதற்கு பதில் இங்கு எழுதி வைக்கிறேன்.

Share

18 comments

  • கவிதா, நன்றி. சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன். ரேடியோவாக இருந்தாலென்ன? இவ்விடமாக இருந்தாலென்ன? சேரவேண்டியவருக்குச் சேர்ந்தும் விட்டது என்கிறபடியால் இதனை இதனோடு விடலாம்.

 • //அவரது பாடல் தேர்வுகளில் தென்படுகிற புத்திசாலித்தனம். வேலை பரபரவென்று நடப்பதற்கு உதவக்கூடிய இதமான மெட்டுகளிலான பாடல்களை மட்டுமே ஒலிபரப்புகிறார். தவறியும் காது கிழிக்கும் குத்துகளில்லை.
  //

  இது அநியாயம் சார்.

  இந்தப் பாராட்டெல்லாம் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு போய் சேரவேண்டியது 🙁

  என்ன செய்யுறது? பின்னணியில் இருக்குறவங்களுக்கு பாராட்டு கூட இதுமாதிரி மறைமுகமாதான் கிடைக்குது!

  • லக்கி: /பாடல் தேர்வு/ உனக்குப் புரியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

 • Excellent writeup sir.

  //நீதிமன்ற நடவடிக்கைகளின் நிதானம் எல்லை கடந்துவிட்டதன் விபரீத விளைவு மட்டுமே இது.//

  மறுக்க முடியாத உண்மை…

 • என்ன செய்ய? குற்றம் என்பதை தெரிந்தே செய்பவர்களை, எல்லாவகையிலும் குற்றவாளி என்று எல்லோருக்கும் தெரிந்தவனை காலதாமதமாக தண்டிப்பதில் யாருக்கு, என்ன பயன். 3 கோவை கல்லூரி மாணவிகளை எரித்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த என்கவுண்டர் சில காலத்திற்காவது, சிலருக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்கும் அல்லவா! தாலிபான்களின் செயலும், இதுவும் ஒருபோதும் ஒன்றாகாது. அவர்களின் சட்ட திட்டங்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முழுமையாய் வெளிப்பட்ட ஒன்றாய் தெரியவில்லையே!! சில தவறுகளையும் போற்றும் நிலையில் இருக்கிறோம்.

  • குட்டிமானு: பெரும்பான்மையினரின் பிரதிநிதியாகப் பேசுகிறீர்கள். இதைத்தான் இன்று ரேடியோவிலும் நேற்று தினமலர் டாட்காமிலும் எல்லோரும் பேசினார்கள். இப்படிப் பேசுகிறார்கள் என்பதை நானும் குறிப்பிட்டிருக்கிறேன். எல்லோரும் ஒப்புக்கொள்வதால் மட்டும் ஒரு பிழை சரியாகிவிடாது.

 • என்னத்த சொல்ல.ஏற சொன்னா எருதுக்கு கஷ்டம்.இறங்க சொன்ன கால் இல்லாதவனுக்கு கஷ்டம்..

 • //வன்முறைக்கு பதில் வன்முறையே சரியான தீர்ப்பென்று மக்களனைவரும் முடிவு செய்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நிதானம் எல்லை கடந்துவிட்டதன் விபரீத விளைவு மட்டுமே இது.

  சம்பவத்தை விவரிக்கும்போது சுசித்ராவின் குரலில்தான் என்ன குதூகலம். யதார்த்த வாழ்வுக்கும் மசாலா சினிமாவுக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டிருக்கின்றன. அற்புதங்கள் அந்தந்தக் கணமே நிகழ்ந்துவிட வேண்டுமென்ற அவசரம் எங்கும் தெரிகிறது.
  //

  ஆழமான வரிகள் பாரா சார்

 • //இதன் நீட்டல் விகாரமே ஆப்கன் தாலிபானியத் தீர்ப்புகள்//
  உண்மை

 • I appreciate your post on this.

  The situation is very dangerous when looking at the appreciation received for this act, even among the educated.

 • எனக்கு தெரிஞ்சு அரவிந்தன் நீலகண்டன் கு அடுத்து உலகின் எல்லா விஷயங்களும் தெரிஞ்சவங்கன்னா அது சுசித்ரா தான்

 • ஒருத்தர பாராட்றதுக்கு ரொம்ப பெரிய மனசு வேணும் பாரா சார்.அது உங்ககிட்ட நெறைய இருக்கு.நான் சுசித்ராவோட நேரடியாக ஸ்டுடியோவில் அவரது கோலிவுட் கில்லாடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன் என்ற முறையில் சொல்லுகிறேன் நிஜமாகவே சுசி FM சூப்பர் ஸ்டார் தான்.

 • இப்போது நடந்த என்கௌண்டர் மிக அவசரமாக நடந்தேரியதாகவே தோற்றமளிக்கிறது. அதனால் இந்த ஆதரவு கொஞ்சம் கவலையும் அளிக்கிறது. அந்த பிஞ்சு குழந்தைகளின் கொடூரமான சாவு அந்த அளவு மக்களை பாதித்து இருக்கிறது.

  கூடவே நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சட்டத்தின் மெத்தனம் அளவுக்கு மீறியதால் மக்கள் பொறுமை இழந்து கோபத்தோடு வெளிப்படுவதன் அறிகுறி தான் இது.

  அடிக்கடி திரையில் பார்க்கும் சினிமா என்கௌண்டேர்கள் எப்போதுமே பார்வையாளனை கவரவே செய்கிறது. அது எப்போதாவது நிஜத்தில் கேள்விப்படும் போது மனம் ஒரு பழக்கப் பட்ட உணர்ச்சிகளையே வெளிப்படுத்துகிறது. திரையில் ஒரு குழந்தையின் கொடூர சாவு ஏற்படுத்தும் அதிர்ச்சியை விட பல மடங்கு அதிர்ச்சி இந்த பிஞ்சுகளின் இறப்பு மக்களிடம் ஏற்படுத்தி இருப்பதால் திரையில் தான் காணும் போலீஸ் நாயகன் செய்வதைப் போன்ற ஒரு செயலை நிஜத்தில் காணக் கிடைத்த போது அது வரவேற்பை பெற்று விட்டது.

 • பா. ரா. சார்,
  இந்த என்கௌண்டரை தலிபான் தண்டனையோடு ஒப்பிட கூடாது…
  எனெனில் அவர்கள் பெண்களை குழந்தை பெறும் மெஷின் ஆகவே நினைத்தார்கள்.
  பர்தா கட்டாயம். டிவி, சினிமா பார்க்க கூடாது. விளையாட்டு கூடவே கூடாது.
  இஸ்லாம் ஒன்றே மதம். அவர்கள் காட்டான்கள். ஆனால் இவர்கள் கொன்றது ஒரு மனித உருவத்தில் இருந்த மிருகத்தை…..

 • //அவர்கள் காட்டான்கள். ஆனால் இவர்கள் கொன்றது ஒரு மனித உருவத்தில் இருந்த மிருகத்தை…// correct

 • ”வன்முறைக்கு பதில் வன்முறையே சரியான தீர்ப்பென்று மக்களனைவரும் முடிவு செய்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது.”

  தவறான புரிதல் சார்..

  ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவன் இறந்தததால் , இனி அவனால் வேறொரு சிறுமிக்கு ஆபத்து இல்லை என்ற அளவில் மகிழ்ந்தனர்.. அவ்வளவே..

  ஒரு வேளை அவர் விபத்தில் இறந்து இருந்தாலும் , கடவுள் தண்டித்து விட்டார் என சொல்லி மகிழ்ந்து இருப்பார்கள்..

  அதற்காக , தமிழக மக்கள் விபத்தை ஆதரிக்கிறர்கள் என்று சொல்வீர்களா?

  ஆனால் , எழுதும் ஆர்வம் உள்ள்வர்களின் போக்குதான் வருத்தம் அளிக்கிற்து…

  ஓர் அப்பாவி தொழிலாளி அம்பிகா இறந்த போது அறிவு ஜீவிகளுக்கு ஏற்படாத ஆவேசம், இந்த விஷ்யத்தில் ஏற்படுவது , தமிழ் நாட்டின் எழுத்து துறை மீது கவலை ஏற்படுத்துகிறது ..

 • ஒரு விதத்தில் இந்த என்கவுண்டர்களின் உள்நோக்கம் குறித்த சந்தேகம் இருந்தாலும், முட்டாள்தனமான, மூர்க்கத்தனமான தாலிபானிய தீர்ப்புகளுடன் இதை ஒப்பீடு செய்ய முடியவில்லை. இரண்டுக்கும் நோக்கம் வெவ்வேறு. வெள்ளை அல்லது கருப்பு என்று ‘பகுத்தறிய’ முயற்சிக்கும் சிறுபிள்ளைத் தனமான முயற்சி. உண்மையை ‘பாரா’ மனோபாவம். அடிப்படைவாத நாட்டாமைகள் என்ன ஆப்கானிஸ்தானில் மட்டுமா இருக்கின்றன? எங்கெங்கு இஸ்லாம் பரவியிருக்கிறதோ அங்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உலகில் எங்குமே இஸ்லாம் சிறுபான்மையினருக்கு உரிமைகள் அளித்ததில்லை(மென்மையான மலேசியா உட்பட).

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter