சென்னை சோதிடக் கண்காட்சி

புத்தகக் காட்சி 2010

பொதுவாக வாரப்பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களுக்குப் பல விஷயங்களின்மீது நம்பிக்கை போய்விடும். சோதிடம் அவற்றுள் ஒன்று. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற பிரபல சோதிடர்கள் எவ்வாறு வாரபலன் கணிக்கிறார்கள், ஆண்டு, மாத, குரு, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்ப் பெயர்ச்சிப் பலன்களை எழுதுகிறார்கள் என்று மிக நெருக்கமாகப் பார்த்து அறிகிற வாய்ப்பு அளிக்கும் ஞானம் அது.

ஆனால் ஒரு கலையாக சோதிடத்தைப் பழகுபவர்கள் சிலரையும் நான் அறிவேன். என் தனிப்பட்ட நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை அவர்களுக்கு வருத்தம் தராதபடி பார்த்துக்கொள்வது வழக்கம். என்னுடைய இந்த நல்ல குணத்துக்கும் சவால் விடும்படியான சந்தர்ப்பங்கள் அரிதாக அமைந்துவிடுகின்றன. நேற்றைக்கு அப்படியான ஒரு தினம்.

புத்தகக் கண்காட்சியில் இனி தினசரி மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை கிழக்கு அரங்கை ஒட்டிய நடைபாதை ஓரத்தில் என்னைச் சந்திக்கலாம் என்று நேற்று முன் தினம் ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தேன் அல்லவா? நேற்றைக்கு மாலை நண்பர்கள் படையெடுத்துவிட்டார்கள்.

முதலில் நர்சிம் வந்தார். அவரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது வரிசையாகப் பல வாசகர்கள் வரத்தொடங்கினார்கள். என்னுடைய புத்தகங்களை வாங்கி, அதில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு அன்புடன் ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள். அப்போலோவில் பணிபுரியும் டாக்டர் ராமகிருஷ்ணன், எனது மாயவலையை வாங்கி, ஆட்டோகிராஃப் கேட்டார். சாது டாக்டருக்குள் இப்படியொரு தீவிர(வாத) ரசிகனா என்று வியப்பதற்குள் எழுபது வயதுக்கு மேல் ஆனவரான அவரது மாமனார் என்னுடைய மிகத் தீவிர ரசிகர் என்று சொன்னார். டாலர் தேசத்தை மூன்றாவது ரவுண்ட் வாசித்துக்கொண்டிருக்கிறாராம்.

பிறகு ஸ்ரீகாந்த் மீனாட்சி வந்தார். அவருக்கு உவேசா நூலக ஸ்டாலை அடையாளம் காட்டிவிட்டு அப்படியே போய் ஒரு லிச்சி ஜூஸ் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து உட்கார்ந்தபோது அது ஆரம்பித்தது.

வலைப்பதிவு உலகைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுள் க.ர. அதியமானும் இருந்தார்.

அதியமானை அவருடைய மிக நீண்ட வலதுசாரி மின்னஞ்சல்கள் மூலம் நான் அறிவேன். அவ்வண்ணமே, சென்ற ஆண்டோ அதற்கு முன்னாண்டோ ஒரு பிரபல எழுத்தாளருக்கு சோதிடம் சொல்லி பெரிய தகராறு ஆகி, தெய்வாதீனமாக ரத்தக்களறி தவிர்க்கப்பட்ட வரலாறு மூலமும்.

ஓரிருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அதிகம் பேசியதில்லை. நேற்றைக்கு எங்கள் இருவரையும் விதி ஒன்று சேர்த்து உட்காரவைத்தது.

‘உங்க டேட் ஆஃப் பர்த் சொல்லுங்க.’ என்று அதியமான் ஆரம்பித்தார்.

சொன்னேன். உடனே, ‘என்ன இப்படி சொல்றிங்க? உண்மையான வயச சொல்லுங்க சார்’ என்றார். நான் என்ன நடிகையா, நர்சிம்மா? சொன்னது உண்மைதான் என்று திரும்பச் சொன்னேன். அவர் நம்புகிறபடியாக இல்லை. வேறு வழியில்லாமல் என்னுடைய PAN கார்டை எடுத்துக் காட்டினேன். அப்புறம் நம்பினார்.

‘உங்க நம்பர் எட்டு. நீங்க சின்ன வயசுல நிறைய லவ் பண்ணியிருப்பிங்க’ என்று தொடங்கினார்.

சென்ற வருடம் அந்த மூத்த எழுத்தாளருக்கு நேர்ந்தது போல எனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே எம்பெருமானே என்று அந்தக் கணமே வேண்டிக்கொள்ளத் தொடங்கினேன். ஆனால் அதியமான் விடவில்லை. ‘நிச்சயமா நீங்க லவ் பண்ணியிருப்பிங்க. உண்மையா இல்லியா?’

இல்லை என்று சொன்னேன். வாழ்வில் கொடுப்பினை இல்லாத விஷயங்கள் என்று எல்லோருக்கும் சிலது இருக்குமல்லவா? எனக்கு இது அவற்றிலொன்று. ஆனால் இதையெல்லாம் PAN கார்டின்மூலம் நிரூபிக்க முடியாது என்பதால் மேலே சொல்லுங்கள் என்றேன்.

‘சின்ன வயசுல நிறைய கஷ்டப்பட்டிருப்பிங்க. இப்ப கஷ்டம் எதும் இருக்காது’ என்றார்.

நான் என்ன கஷ்டம் பட்டேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு நடுத்தர வர்க்கத்துப் பையனாக வளர்ந்தேன். வீட்டில் மூன்று வேளையும் சோறு இருந்தது. காப்பி இருந்தது. போட்டுக்கொள்ளத் துணிமணிகள் இருந்தன. ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான என் அப்பா, தனது வாழ்நாள் சேமிப்பான எழுபதாயிரத்தை வைத்து வத்திப்பெட்டி சைஸில் ஒரு வீடுகட்டி எங்களையெல்லாம் குடிவைத்தார். அன்பான, அமைதியான,  ஆரோக்கியமான சூழலில் நானும் என் தம்பிகளும் வளர்ந்தோம், படித்தோம், நல்ல உத்தியோகங்களைத் தேடிக்கொண்டோம்.

சொல்லிக்கொள்ளும்படி எந்தக் கஷ்டமும் பட்டதாகத் தோன்றவில்லை. மாறாக நான்தான் என் பெற்றோருக்கு நிறையக் கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறேன்.

இதைச் சொன்னபோதும் நண்பர் ஒப்புக்கொள்ளவில்லை. ‘அதெல்லாம் இல்லை. கண்டிப்பா கஷ்டப்பட்டிருப்பிங்க’ என்றார். சரி, விடுங்கள் அடுத்ததுக்குப் போவோம் என்று அவரைச் சமாதானப்படுத்தியபோது டாக்டர் ப்ரூனோ வந்து சேர்ந்தார்.

என் விதிதான் காரணம் என்று நினைக்கிறேன். ப்ரூனோவுக்கும் சோதிடம் தெரியும் என்று அதியமான் சொன்னார். உடனே அருகே அமர்ந்திருந்த யுவ கிருஷ்ணா சடாரென்று பிச்சுவாக்கத்தியை வயிற்றில் சொருகுவது மாதிரி புரூனோவை நோக்கி வேகமாகத் தன் கையை நீட்டினார்.

என்னவோ ஏதோ என்று அஞ்சி நடுங்கினால், அது ரேகை பார்க்க. உடனே முழு நேர டாக்டர், பகுதிநேர சோதிடராக மாறி, யுவ கிருஷ்ணாவுக்கு சோதிடம் சொல்ல ஆரம்பித்தார்.

‘உன் அப்பாவுக்காவது, அம்மாவுக்காவது டயாபடீஸ் இருந்திருக்கா?’

‘ஆமா. என் அப்பா அதுல தான் செத்துப்போனார்.’

டாக்டர் தீவிரமாக யுவாவின் ரேகைகளை ஆராய்ந்தார். பிறகு, ‘நாற்பது வயசுக்குமேல உனக்கும் டயாபடீஸ் வரும். கணையம் கண்டிப்பா பாதிக்கப்படும்.’ என்று சொன்னார்.

அடக்கடவுளே! நீரிழிவு பரம்பரை வியாதி என்பது பாமரனுக்கும் தெரியுமே? இதை ப்ரூனோ ஒரு டாக்டராகவே சொல்லியிருக்கலாமே? எதற்கு சோதிடராகச் சொல்கிறார் என்று யுவ கிருஷ்ணா யோசித்திருக்கலாம். மாறாக, ‘என் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்னு பாருங்க’ என்று அடுத்த குண்டைப் போட்டார்.

டாக்டர் மேலும் ஆராய்ந்தார். ‘உன்னால அமைச்சராகவெல்லாம் ஆகமுடியாது. வேணும்னா அமைச்சரோட பி.ஏவா ஆகலாம்’ என்று திருவாய் மலர்ந்தார்.

இதான் சாக்கு என்று சடாரென்று நர்சிம் தன் கையை டாக்டரிடம் நீட்டினார். வேறு சில நண்பர்களும் டாக்டர் முகத்துக்கு நேரே தமது வலக்கரங்களை நீட்ட, என் மனத்துக்குள் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற ஆத்தா போற்றி என்று பெங்களூர் ரமணியம்மாள் பாடத் தொடங்கினார்.

ஒரு சில நிமிடங்களில் பிராந்தியமே புத்தகம் வாங்குவதை நிறுத்திவிட்டு சோதிடம் பார்க்கக் குழுமிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும் போலிருந்தது. டாக்டரும் அதியமானும் சளைக்காமல் நீட்டியவர்களுக்கெல்லாம் சோதிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அதியமானால் எனக்குத் தரமுடியாத நெல்லிக்கனியை எப்படியாவது தான் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்த ப்ரூனோ, என் கையைப் பார்த்துவிட்டு, ‘நீங்கள் அரசியலில் நுழைந்தால் நிச்சயம் அமைச்சராக முடியும்’ என்று சொன்னார். ‘ஏன்னா உங்க ரேகைப்படி உங்களுக்கு லீடர்ஷிப் குவாலிடீஸ் நிறைய இருக்கு.’

உடனே யுவ கிருஷ்ணா, ‘நம்ம கட்சி இலக்கிய அணில இப்பவே சொல்லிவெச்சிரவா?’ என்று கேட்டார். என்னை ஒழித்துக்கட்ட ஒரு பெரும் படையே தயாராக இருப்பது அப்போது தெரியவந்தது.

சூழ்நிலை சூடாகிக்கொண்டிருந்தது. நிமிர்ந்துபார்த்தால், நாங்கள் அமர்ந்திருந்த இடமே ஒரு சோதிட ஸ்டால் மாதிரி ஆகிவிட்டிருந்தது. நிறையப்பேர் சோதிடம் பார்க்கவும், பார்க்கிறவர்களைப் பார்க்கவுமாக நடைபாதை ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருந்தது.

யாரோ ஒருவர், கொஞ்சம் நகர்ந்து ஓரமா உக்காருங்க சார் என்று வேறு வந்து முதல் எச்சரிக்கை செய்துவிட்டுப் போனார். உத்தியோக ரேகை, தன ரேகை, ஆயுள் ரேகை, சூரிய மேடு, சந்திரப்பள்ளம் என்று என்னென்னவோ இனான்ய மொழிச் சொற்கள் அந்தப் பிராந்தியத்தையே அதகளப்படுத்திக்கொண்டிருந்தன.

ஒரு டாக்டராகவும் உள்ளபடியால் நிலவரத்தின் தீவிரம் உணர்ந்த ப்ரூனோ தானே எழுந்து சென்று அனைவருக்கும் நல்ல குடிநீர் வாங்கி வந்து கொடுத்துக் கொஞ்சம் அமைதிப்படுத்தினார்.

என்னாலான காரியம், நேற்று அதியமானுக்கு நிறைய எதிர் சோதிடம் சொல்லி, அதிகபட்சம் அவரைக் கலவரப்படுத்தி சந்தோஷப்பட்டேன். நாலு அப்பாவிகளைக் கூப்பிட்டு உட்காரவைத்துக்கொண்டு கையை இழுத்துப் பிடித்து, வாய்க்கு வந்தபடி என்னத்தையாவது சொல்லிக்கொண்டிருந்தால் மிக நன்றாகப் பொழுதுபோகும் என்பது நேற்றைக்கு நிரூபணமானது.

சோதிடத்தைக் கலை என்றும் அறிவியல் என்றும் தீவிரமாக நம்புகிறவர்களை நான் குறை சொல்லமாட்டேன். அதியமான் உள்பட. ஆனால் அதை எதிராளியின்மீது பிரயோகிக்கும்போது அவர் வருத்தம் கொள்ளாதிருக்கும்படியாகச் சொல்வதே மனித நேயம். இவ்வகையில் தினத்தந்தியில் வெளியாகும் சோதிடப்பகுதியை நான் மிகவும் மதிக்கிறேன். கலவரமூட்டக்கூடிய பலன்களை ஒருபோதும் அவர்கள் யாருக்கும் சொல்வதில்லை.

நாளை நடக்கப்போகிறவை அனைத்தும் இன்றைக்கே முழுமையாகத் தெரிந்துவிடுவதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? வாழ்க்கையை அதன் புதிர்களுடன் எதிர்கொள்வதே என்னைப் பொருத்தவரை சுவாரசியமானது. தவிரவும் இந்த சோதிடர்கள் யாரும் அப்படியொன்றும் ஹண்ட்ரட் பர்சண்ட் தீர்க்கதரிசனம் தருவதில்லை. சும்மா குத்து மதிப்பாக என்னத்தையாவது சொல்லிவிடுகிறார்கள். அவற்றில் சில நடந்தும் விடுகின்றன. அந்தக் குத்து மதிப்பை நல்ல மதிப்பாகவே சொல்லித் தொலைத்தால்தான் என்ன?

என்னுடைய அம்மாவழிப் பாட்டி தனது இறுதி நாள்களில் மரண பயத்தால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஒரு முடிவு செய்து நான் தீவிரமாக அவரிடம் நிறையப் பொய்கள் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றுள் தலையாய பொய், நான் சோதிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது.

ஆர்வமுடன் என்னிடம் தன் உடல் உபாதைகள் பற்றியும் இறுதிநாள் பற்றியும் அடிக்கடி விசாரிப்பார். வலது, இடது கைகளை நீட்டி பார்க்கச் சொல்வார்.

ஆண்டவன் சாட்சியாக எனக்கு சோதிடத்தில் ஒன்றுமே தெரியாது. ஆனாலும் சற்றும் சங்கடமில்லாமல் அவர் கையைப் பிடித்துப் பார்த்து, ‘உனக்கு இப்போதைக்கு சாவு இல்ல பாட்டி. நீ எப்படியும் எண்பத்தியெட்டு வயசு வரைக்கும் பூமிக்கு பாரமா இருந்துதான் தொலைப்பே. என்ன கொஞ்சம் கால் வலிதான் ரொம்பப் படுத்தும். அடிக்கடி தலைசுத்தல் வரும். நீ அனுபவிச்சித்தான் தீரணும்’ என்பேன்.

பாட்டியின் கால் வலியும் தலைசுற்றலும் பல்லாண்டுகாலமாக இருப்பவை. அதை அவர் மறந்துவிடுவார். தனது உபாதைகளைச் சரியாகச் சொல்கிறானே என்பதுடன் இப்போதைக்கு மரணமில்லை என்றும் சொல்கிறானே என்கிற சந்தோஷத்துடன் நிம்மதியாகத் தூங்குவார்.

அவர் இறப்பதற்கு முந்தைய தினம் வரை நான் ஆத்ம சுத்தியுடன் அவருக்குப் பொய் சோதிடம் சொல்லிவந்திருக்கிறேன். அது பற்றிய குற்ற உணர்ச்சி எனக்குச் சற்றும் கிடையாது. மாறாக மிகுந்த மன நிறைவும் சந்தோஷமும்தான் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

சோதிடம் என்றல்ல. எந்தக் கலையுமே மனித குலத்தின் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

22 comments

 • நல்ல நகைச்சுவையான பதிவு, அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது. நமது வாழ்க்கை நம் கையில் (உழைப்பு) என்ற உங்கள் எண்ணம் உயர்வானது.

 • அப்படியே வடக்கே சூலம்ன்னா என்னன்னு கேட்டிருக்கலாம் ::))

 • ஸார்,  துள்ளல் நடையில் ஒரு அற்புத பகடி. எல்லாமே சிக்ஸர்கள் என்றால் அதில் அவுட் ஆஃப் த ஸ்டேடியம் நான் என்ன நடிகையா நர்சிம் ஆ வும், யுவகிருஷ்ணாவின் பட்டாக்கத்தி சொருகலும்..
  மிகப் பிடித்திருந்தது.

 • //நான் என்ன நடிகையா, நர்சிம்மா? //
  வயசு முப்பது தான் ஆகுதுன்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணிருப்பாரே? நம்பாதிங்க 😉
  இந்தக் கட்டுரை நகைச்சுவையாக எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், அவசியமான ஒன்று

 •  

  ""எந்தக் கலையுமே மனித குலத்தின் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு""".

  Well said sir,
  S.Ravi ,Kuwait

 • நீங்க 71 ன்னு சொன்னத இப்ப வரைக்கும் நம்ப முடியல
  அப்படியே வலம் வரும்போது நக்கீரன் கோபாலுக்கு 50 ன்னு கேள்விப்பட்டு அதையும் நம்ப முடியல.
  அன்புடன்,
  அன்பு

 • நல்ல நண்பர்கள் உங்களுக்கு. ஒருவர் தீவிர வலதுசாரி, அதியமான். மற்றொருவர் தீவிர இடதுசாரி….காரைக்குடி பிரகாஷ். உரலுக்கு ஒருபுறம் இடியென்றால், நீங்கள் மத்தளம். இரு சாரிகளும் இடிக்கின்றனர்.

 •  
  ///நல்ல நண்பர்கள் உங்களுக்கு. ஒருவர் தீவிர வலதுசாரி, அதியமான். மற்றொருவர் தீவிர இடதுசாரி….காரைக்குடி பிரகாஷ். உரலுக்கு ஒருபுறம் இடியென்றால், நீங்கள் மத்தளம். இரு சாரிகளும் இடிக்கின்றனர்.////
  வலதுசாரி என்றால் ஃபாசிசவாதி / மதவெறியர் என்று அர்த்தமல்ல.  ஜனனாயகத்திலும், அடிப்படை சுதந்திரங்களிலும், சந்தை பொருளாதார அமைப்பிலும் நம்பிக்கை கொண்டவர் என்றும் அர்த்தம்.
  இதை பற்றிய எமது பழைய பதிவு :
  http://nellikkani.blogspot.com/2009/09/blog-post.html
  இடதுசாரிகளும், வலதுசாரிகளும் 
   

 •  
  ஒரு முழு நீள நகைச்சுவை நூல் அடுத்த எதிர்பார்ப்பு.ஒம் ஷின்ரிக்கியொ கிட்ட தட்ட அப்படிதான் , சில தீவிரங்களை தவிர.

 • புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை விட நண்பர்களின் சந்திப்பு இனிக்கிறது..

 • வலதுசாரி என்றால் ஃபாசிசவாதி / மதவெறியர் என்று அர்த்தமல்ல.//
   
  நான் அப்படி சொல்லவே இல்ல சார். அப்படின்னா பிரகாஷ் என்ன நக்ஸலைட்டுன்னு அர்த்தமா? பாவம் சார் அவரு. நீங்க நான் சொல்லாததுக்கெல்லாம் வியாக்யானம் குடுக்கறீங்க.

 • படிக்கும்போது வாய் விட்டு சிரித்துக் கொண்டேதான் படித்தேன்.  ஒரு சந்தேகம், நீங்க எப்படி கொஞ்சம் கூட சிரிக்காம அந்த இடத்துல அமைதியா இருந்தீங்க?
  அன்புடன்
  மதுரை சுப்பு

 • //என்னுடைய அம்மாவழிப் பாட்டி தனது இறுதி நாள்களில் மரண பயத்தால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஒரு முடிவு செய்து நான் தீவிரமாக அவரிடம் நிறையப் பொய்கள் சொல்ல ஆரம்பித்தேன்.//
  The movie 'The Invention of Lying' has an almost identical premise. In a world where everyone always tells the truth, the first lie begins with the protoganist consoling his terminally ill mother at her retirement home (actually called "A Sad Place Where Homeless Old People Come to Die") that death does not lead to oblivion, but to a wonderful afterlife. One of the best satires on religion I have seen recently.

 • இங்கே ஏகப்பட்ட மொக்கை பின்னூட்டங்கள். எப்படித்தான் அனுமதிக்கிறீர்களோ?
  மொக்கையிலும் மொக்கையாக தோழர் அதியமான் அவர்கள் தன் பதிவுக்கு லிங்க் கொடுத்து போட்டிருக்கும் பின்னூட்டம் 🙂

 • ROTFL.
  பாரா,முழு நீள நகைச்சுவைத் தொடர் ஒன்று முயற்சி செய்யுங்களேன்..பை தி வே ஜோதிடம்,எண் கணிதம் முழுக்க தவறு என்று சொல்ல இயலவில்லை.
  அவற்றை முழுதும் அறிந்து கொள்ள ஆகும் கால அவகாசம் அதிகம்;அவ்வளவு பொறுமையாக படித்து,சோதித்து அறிந்தவர்கள் குறைவு.
  ப்ரெடிக்ஷனுக்கு என்று ஒரு தனி அறிவு,ஆய்வு மதி தைவை..பல சோதிடர்கள் குழப்புவது அங்கேதான்.வாரபலன் எழுத்தாளர்களை வைத்து சோதிடத்தை எடை போடக் கூடாது.என்னைப் பொறுத்த வரை ப்ரெடிக்ஷன் அறிவு சுமார் 4 ஆண்டு படிப்பு & அனுபவத்திற்குப் பிறகே வரும் என்று தோன்றுகிறது.
  எண் கணிதம் பெரும்பாலும் மனிதர்களின் பொதுவான குண இயல்புகளை அறியும் டூல் ஆக உதவுகிறது;ஆண்டுகள் பழக்கத்தில் தெரியவரும்தான்,என்ன கொஞ்சம் நாளாகும் இல்லையா?

  எண் கணிதத்தில் பெருமளவு ஆய்ந்திருந்தாலும் ஏன ஆங்கில எழுத்துக்களை வைத்து ஆராய வேண்டும் என்பதில் எனக்கும் கேள்வி இருக்கிறது;இருப்பினும் எனது அனுபவத்தில் மனிதர்களை புரிந்து கொள்ள எண் கணிதம் பெருமளவு உதவுகிறது என்பதுதான் என் கணிப்பும் அனுபவமும்..
   
  but excellent write up..

 • கமெண்ட்களைப் படித்து அப்ரூவ் செய்ய நேரமில்லாத காரணத்தால் அப்படி அப்படியே பிரசுரித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் வடை போச்சே போன்ற அபத்தமான பின்னூட்டங்கள் சில இடம்பெற்றுவிடுகின்றன. நண்பர்கள் தயவுசெய்து வலைப்பதிவுலகக் குப்பைப் பின்னூட்ட மாதிரிகளை இங்கே பிரசுரிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply