புத்தகக் காட்சி 2010

கமல் அல்ல, முகில்.

இன்றைக்குச் சொல்லி மாளாத கூட்டம். எல்லா அரங்குகளிலும் நிற்க இடமில்லாத அளவுக்கு. பில் போட்டவர்கள் மிகவும் பாவம். கிழக்கில் பிரசன்னா, விஸ்வா, மணிகண்டன் எல்லோரும் பிசாசாகவே மாறியிருந்ததைக் கண்டேன். ராத்திரி அவர்களுக்கு நல்ல உறக்கம் அமையவேண்டும்.

கிழக்கு அரங்கில் இன்றைக்கு இரண்டு விசேஷங்கள். முதலாவது, ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூலின் ஆசிரியர் கே. ரகோத்தமன் வருகை தந்தது. எந்த ஒரு தொழில்முறை எழுத்தாளரும் சற்றே பொறாமை கொள்ளத்தக்க வகையில் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. சகட்டு மேனிக்குக் கேள்விகளும் பதில்களும் துணைக்கேள்விகளும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் விளக்கங்களுமாக சுமார் இரண்டு மணிநேரம் அவர் ஒண்டியாளாக அடித்து ஆடிக்கொண்டிருந்தார்.

உட்கார்ந்து பேசுங்கள் என்று நாற்காலி போட்டதற்குச் செல்லமாகக் கோபித்துக்கொண்டார். ‘நான் ஒரு போலீஸ்காரன். எனக்கு உக்காந்து பேசிப் பழக்கமில்லை’ என்று சொன்னார். எனவே வாசகர்களும் கூடிநின்றபடியே பேசினார்கள். நண்பர்கள் பலர் தங்களால் நெருங்கி, கேள்வி கேட்கமுடியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார்கள். நான் கொஞ்சம் மாடரேட் செய்யலாமா என்று பார்த்தேன். ஆனால் முடியவில்லை. சரி, முட்டி மோதி அவர்களே ஒரு வழிக்கு வரட்டும் என்று விட்டுவிட்டுப் போய் ஒரு ஓரமாக உட்கார்ந்துவிட்டேன்.

 

 

ரகோத்தமனின் புத்தகம், சந்தேகமில்லாமல் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார். அடுத்த இடத்தை எதற்குக் கொடுக்கலாம் என்பது இன்னும் புரியவில்லை. நேற்று வரை முகலாயர்களும் மாவோயிஸ்டும் பழைய இரண்டாம் உலகப்போரும் அரதப்பழசு நிலமெல்லாம் ரத்தமும் அந்த இடத்துக்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்தன.

இன்று காலை அரங்குக்கு வந்துவிட்ட அகம் புறம் அந்தப்புரம், அதன் பிரம்மாண்டமான தோற்றம், மூச்சடைக்கச் செய்யும் விலை அனைத்தையும் மீறி விற்பனை வேகத்தில் முந்தியிருக்கிறது. இது உண்மையிலேயே எனக்கு வியப்பாக உள்ளது. ஒரு புத்தகம் தனக்குத் தேவை, படித்தே தீரவேண்டும் என்று மக்கள் விரும்பிவிட்டால் விலையைப் பொருட்படுத்துவதே இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர், ஏராளமான வாசகர் வட்டம் உள்ளவர், ஏசி அரங்கில் வெளியீட்டு விழா, நட்சத்திர ஹோட்டலில் தண்ணி பார்ட்டி, தாம்தூம் ஜபர்தஸ்துகள் எதுவும் வேண்டாம். சரக்கு!

முகில் இந்தப் புத்தகத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்தான். இந்திய சமஸ்தானங்கள், சிற்றரசர்கள், அவர்களுடைய உள் அரசியல், பிரிட்டிஷ் அரசுடன் அவர்களுக்கு இருந்த உறவுகள், உரசல்கள் என்று ஒவ்வோர் அம்சத்தையும் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்தான். அந்தப்புரம் தலைப்பில் இருந்தாலும் அத்தியாயங்களில் அவ்வளவாக இருக்காது.

இந்தத் தொடரை அவன் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்தபோது ஜிலுஜிலு ராஜாக்களின் கிளுகிளு வாழ்க்கை வரலாறு போலிருக்கிறது என்றுதான் தலைப்பை முன்னிட்டுப் பெரும்பாலானவர்கள் நினைத்தார்கள். நாங்களே அவனை அப்படித்தான் கிண்டல் செய்தோம். புத்தகமாகும்போது இலவச இணைப்பாகச் சிட்டுக்குருவி லேகியம் கொடுக்கலாமா என்றெல்லாம் வெறுப்பேற்றினோம். ஆனால் சரித்திரத்தின் இண்டு இடுக்குகள் அனைத்திலும் நுழைந்து, ஏராளமான நுணுக்கமான விவரங்களைத் தேடித்தொகுத்து, சுவாரசியமாக அவன் எழுதியதில் இந்தத் தொடரின் வெற்றி, ஆரம்பித்த சில வாரங்களிலேயே நிச்சயமானது.

ஒரு வாரமிருமுறைப் பத்திரிகையில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரணமல்ல. வாசகர்கள் கொஞ்சம் கொட்டாவி விட்டாலும் எழுதுபவருக்கே சொல்லாமல் முற்றும் போட்டுவிட்டு அடுத்ததை ஆரம்பித்துவிடுவார்கள்.

எனக்குத் தெரிந்து பத்திரிகையில் வெளிவந்த கதையல்லாத, மிக நீண்ட தொடர் மாயவலை. அதற்கடுத்து அகம் புறம் அந்தப்புரம்தான்.

அந்த உழைப்புக்கான மிகச் சரியான பலனை இன்றைக்கு முகில் கண்காட்சி அரங்கில் பார்த்தான். தன் கண்ணெதிரே தனது புத்தகத்தை ஏராளமான வாசகர்கள் பாய்ந்து வந்து குதூகலித்துக் கொண்டாடி வாங்கிச் செல்வதைக் காண்பதைக் காட்டிலும் ஓர் எழுத்தாளனுக்குப் பெரிய மகிழ்ச்சி தரத்தக்க விஷயம் வேறொன்றில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்றைக்கு கமல் அல்ல; முகில்தான் நிஜமான ஹீரோ.

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். முகில் கிழக்கில் சேர்ந்த புதிது. ஒருநாள் அவனது அம்மாவும் அப்பாவும் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு எங்கள் அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை இருந்தது. மகனின் எதிர்காலம் குறித்த கவலை.

‘எம்.எஸ்.சி. ஐடி படிச்சிட்டு இப்படி எழுதப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். இதுல பெரிய ஆளா வர முடியுங்களா? சம்பாதிக்க முடியுங்களா?’

உங்கள் மகன் சாதித்துக் காட்டுவான். அவனைத் தொந்தரவு செய்யாமல் சுதந்தரமாகச் செயல்பட மட்டும் அனுமதியுங்கள். மிச்சத்தைக் காலம் உங்களுக்கு வெகு விரைவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தேன்.

இன்றைக்குக் கண்காட்சியில் முகில் இருந்ததைவிட, அவனது பெற்றோர் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

Share

22 Comments

 • அருமையான பதிவு. முயற்சி தன் மெய் வருத்த கூலி தந்திருக்கிறது.  வாழ்த்துக்கள் முகிலுக்கு.

 • அதுல யார் ஸ்பெஷலிஸ்ட்?


  கமல் அல்ல, முகில்.

  • அது அநாவசியம். இதில் முகில்தான்! அதுதான் எனக்குத் தெரியும்.

 • இளம் வயதில் சாதித்துக் காட்டியிருக்கிறார் முகில். வாழ்த்துகள் அவருக்கு..

 • முகில் குண்டாகி விட்டார் என்று ஐகாரஸ் பிரகாஷ் சொன்னாரே ,இது தானா அது? 😀

 • ஒரு எழுத்தாளனுக்கு ஆசிரியர் செய்யவேண்டிய கடமையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட அப்பா ஸ்தானத்திலிருந்து முகிலைப் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.
  கிழக்கின் வளர்ச்சிக்கு இந்த டீம் ஸ்பிரிட் முக்கிய காரணம்.
  முகிலை நான் பர்சனலாக இது வரை அறியாவிட்டாலும், இந்த அறிமுகமே நன்றாக இருக்கிறது.
  வாழ்க, வளர்க -கிழக்கும், முகிலும்!

 • முகிலுக்கும் அவர் எழுதிய புத்தகத்திற்கும் (size) சம்மந்தமே இல்லையே?

 • முகிலுக்கு வாழ்த்துகள்.
  அந்தபுரம்/அந்தப்புரம் – எது சரி?

  • எந்தப்புறம் போனாலும் அந்தப்புரம்தான் சரி.

 • முகிலின் வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்!
  ஸ்ரீகாந்த்

 • முகிலை இப்போதுதான் புகைப்படத்தில் பார்க்கிறேன்..! அப்பாவியா இருக்காரே.. இவர் எப்படி இங்க மாட்டுனாரு..?!!!

   

 • உண்மையில் வியப்பூட்டும் வெற்றிதான்.

  எழுநூற்றுச் சொச்சம் ரூபாய்க்கும் நல்ல புத்தகங்கள் தமிழில் விலை போவது,அதுவும் நன்கு விற்பது என்பது நல்ல அறிகுறி.
   
  முகில் நிச்சயம் மகிழ்ச்சியடையலாம்;நீங்களும் பத்ரியும் கூட..for the impetus with which Kizhakku march on..
   
  {பிரபல எழுத்தாளர், ஏராளமான வாசகர் வட்டம் உள்ளவர், ஏசி அரங்கில் வெளியீட்டு விழா, நட்சத்திர ஹோட்டலில் தண்ணி பார்ட்டி, தாம்தூம் ஜபர்தஸ்துகள் எதுவும் வேண்டாம். சரக்கு!}
  இதுதான் உள்குத்துன்னு சொல்லுவாங்களோ? :))

 • 'அகம் புறம் அந்தபுரம்' வாங்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பட்ஜெட் தான் இடிக்கிறது. மூன்று அல்லது நான்கு தொகுதிகளாக (சமஸ்தானங்கள் வாரியாக) வெளியிட்டால் எங்களை போன்று பட்ஜெட் ஆசாமிகளும் வாங்கி படிக்க ஏதுவாக இருக்குமே !!


 • ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். முகில் கிழக்கில் சேர்ந்த புதிது. ஒருநாள் அவனது அம்மாவும் அப்பாவும் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு எங்கள் அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை இருந்தது. மகனின் எதிர்காலம் குறித்த கவலை.
  ‘எம்.எஸ்.சி. ஐடி படிச்சிட்டு இப்படி எழுதப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். இதுல பெரிய ஆளா வர முடியுங்களா? சம்பாதிக்க முடியுங்களா?’
  உங்கள் மகன் சாதித்துக் காட்டுவான். அவனைத் தொந்தரவு செய்யாமல் சுதந்தரமாகச் செயல்பட மட்டும் அனுமதியுங்கள். மிச்சத்தைக் காலம் உங்களுக்கு வெகு விரைவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தேன்.’
   
  தமிழ் சீரியல்களில் உபதேச அப்பா/மாமா பாத்திரங்களில் நடிக்க தகுந்த நபர்களைத் தேடுபவர்கள்  writerpara@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் :). வசனம் + நடிப்பு கிடைக்கும்; அதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அர்த்தம் அல்ல 🙂

 • புத்தகத்தின் எடிட்டோரியல் வொர்க் நீங்கள் செய்தது என்பது படித்த உடனே தெரிந்தது … "ராஜீவ் கொலை வழக்கு " செவிட்டில் அறையும் உண்மை
  நன்றிகள்.
   
  நாகராஜ்

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி