10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள்

வ்ரைட்டர்பேயோன் தனது தளத்தில் பதினைந்து காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். இந்தரக டெம்ப்ளேட் கவிதைகள் எழுதுவது மிகவும் எளிது. [அவரும் அதை அறிந்தேதான் எழுதியிருக்கிறார்.] ஒரு வேகத்தில் 115 கவிதைகள் எழுதுகிறேன் என்று அவரிடம் சொல்லியிருந்தாலும் இப்போதைய வேலைகளுக்கு இடையில் என்னாலான கவிச்சேவை இந்த பத்தரை கவிதைகள்தான். மிச்சம் எங்கே என்று கேட்கமாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். இது புறமுதுகிடுவதல்ல. எல்லாம் தேசநலன் கருதி செய்யப்படுவதுதான்.

பின் குறிப்பு: இந்த பத்தரை கவிதைகளை எழுத மொத்தமாக எனக்குப் பதினாறு நிமிடங்கள் பிடித்தன.

O

அதிகம் வேண்டாம்
ஒருநாளென்னைக் காதலித்தால்
போதும் நீ.
115 கவிதைகளுக்கு
அதுவே அதிகம்.

0

நீ அழகாயிருக்கிறாய்
நீ அழகாய்ச் சிரிக்கிறாய்
நீ அழகாய் வெட்கப்படுகிறாய்
நீ அழகாய்ச் சிணுங்குகிறாய்
என்றடுக்க
ஒரு வாய்ப்புமின்றி
என்ன வார்ப்பு நீ?

0

காதல் அல்லது கவிதை
இரண்டிலெதையும் தராத
பெண்ணாக நீ
இருப்பதனால்
கவிதையல்லது கவிதை
இரண்டிலொன்றைப் பரீட்சித்துப் பார்க்க
முடிவு செய்துவிட்டேன்.

0

ஒரு மொட்டுக்குள் ஒளித்துவைத்த
அசுரனின் உயிரொத்த என்
காதலை
சட்டெனக் கசக்கிக் கொன்றதுன்
சத்தம் சேர்ந்த கொட்டாவி.

0

உடைகளுக்கு நீ
தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள்
உன்னை எனக்குச் சொல்கின்றன.
அடிக்கும் சிவப்பில் சுடிதார்
அணியாதே
முட்டத்தான் தோன்றுகிறது.

0

கடற்கரையில் உன்
கைகோத்து நடக்க
கஷ்டமாயிருக்கிறது
மறுகைச்
சுண்டல் வீணாகிக்கொண்டிருக்கிறது.

0

படிப்பு வேலை சம்பளம்
இங்கிரிமெண்ட் இன்செண்டிவ்
போனஸ்
பிரமோஷன்
பிஎஃப் கிராஜுவிடி
கல்யாணம் பெண்டாட்டி
பிள்ளைக்குட்டி
பிக்கல் பிடுங்கல்
நடுவில் எங்கோ சிக்கிக்
கிழிந்து தொங்குகிறது
நீயுமுன் காதலும்.

0

காதலிக்க உன்னை
தேர்ந்தெடுத்து
சரித்திரப் பிழை செய்திருக்கிறேன்
படகு மறைவில் பேசுவதற்கு
பாலகுமாரன் கதைகள்தானா
கிடைத்தன உனக்கு?

0

உனக்கு உன்
புருஷனோடும்
எனக்கு என்
பெண்டாட்டியோடும்
நம் காதல்
நிச்சயம் வாழும்.

0

காதல் ஒரு வெட்டிவேலை
என்பது
காதலிக்கும்போது தெரியவில்லை
கவிதையெழுதும்போது
கண்டிப்பாகத்
தெரிகிறது.

0

கேவலம்
பத்து கவிதையைத் தாண்ட
உதவாத உன் காதல்
இருந்தென்ன செத்தென்ன…

O

Share

23 comments

  • இதுவரை உம்மை எந்தப் பெண்ணும் காதலித்திருக்க வாய்ப்பில்லை; இனியும் அதற்கு வாய்ப்பேயில்லை. அடுத்த ஜென்மத்தில் நீர், தபூ சங்கராகப் பிறக்கக் கடவ!

  • அருமை. இப்படி காதலுக்கு எதிரான கவிதைகள் வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இதற்கும் ஒரு மனது வேண்டும்! நீங்கள் காதலித்ததில்லையா இதுவரை?

  • ///படகு மறைவில் பேசுவதற்கு
    பாலகுமாரன் கதைகள்தானா
    கிடைத்தன உனக்கு?//

    ப‌ட‌கு ம‌றைவில் பேசுவ‌த‌ற்கு – இந்த‌
    பாராதான்
    கிடைத்தானா உன‌க்கு?

    இப்ப‌டி போட்டிருக்க‌லாம் த‌ல‌…
    ப‌டா ஷோக்காயிருக்கும்

  • //ஒரு சிறுகதைக்கு இத்தனை அத்தியாயங்களா?// சேச்சே. இவை அத்தியாயத் தலைப்புகள் மட்டுமே.

  • ஏழரை எதிர் கவிதைகள்:

    0
    காதலித்தால்
    கவிதை வருமாம் –
    ஒரே வாக்கியத்தில்
    இரு எச்சரிக்கை

    0

    உன் முக ஒளிமுன்
    பேச்சிழந்து போகிறேன்..
    என்று சொல்லப்போகிறேன்,
    நீ
    ஒரு
    சப்பை ஃபிகரென்று?

    0

    ஏகாந்த மாலை,
    இருள்கிழிக்கும் நிலா,
    சத்தமிடும் அலைகள் –
    நிறுத்தாமல் பேசும் நீ

    0

    அன்பே,
    உன் முகத்துக்கும்
    சந்திரனுக்கும்
    குறைந்தபட்ச வித்தியாசம்
    ஆறுகூட இல்லாததால் –
    அமாவாசையன்று மட்டுமே
    நான்
    ஆனந்தமாய் இருக்கிறேன்

    0

    சந்திப்பிழை சொன்ன
    தமிழாசான் மகளை
    மணந்ததும் அறிந்தேன்:
    சந்திப்பு பிழை

    0

    5 ஸ்டார் ஹோட்டல் – யெஸ் பப்பா,
    செல்ஃபோன் டாப் அப் – யெஸ் பப்பா,
    பல்சார் பைக் – யெஸ் பப்பா –
    ஓப்பன் யுவர் மவுத் – ஐ லவ் யூ

    0

    வார்த்தைகளைக்
    கோர்த்தே எழுதுகிறார்கள்
    காதற்கவிஞர்கள் –
    அதுவாவது
    சேரட்டுமே என்று

    0

    அரைக்கவிதை – நீ!

  • பாராமல் காதலிக்கவும்
    யாருமற்று

    நேராமல் நேர்ந்ததும்
    சொக்காது

    pay-own-ம் இயலாமல்
    வெறுமே

    பகிர்ந்துண்ண பர்சுக்காக
    பிரார்த்தனையுடன்

    என்ன ஃபிகர் நீயென
    என்றுமே சொல்லமாட்டேன்

    கேக்காதே நீயுமதையே,
    காதலிக்கலாமா?

  • நகைச்சுவையின் மூலம் ட்ராஜடியில் இருப்பது உண்மைதான்.

  • இப்படி காதலுக்கு எதிரான கவிதைகள் வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை

    காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள் – <a href="http://ilavanji.blogspot.com/2008/02/blog-post.html&quot;

  • சூப்பர் பாரா.. வாய்விட்டுச் சிரித்தேன்.

    இந்த இன்ஸ்பிரேஷனில் என்னுடைய காதலெதிர்க்கழுதைகள்
    ———————————-
    1.
    உன்னை ஒரு நாள்
    பார்க்காவிடில்
    அன்று அது மோசமான நாள்
    என்றாய்!

    இக்கவிதையின்
    இரண்டாம் வரியை
    மனசுக்குள்
    எதிர்ப்பதமாய் மாற்றிப்போட்டு
    எனக்கும்தான் என்றேன்!!

    2.
    நேற்றென்னை நினைத்தாயா
    என்று கேட்டாய்!
    இல்லை என்றேன் உண்மையாய்!
    ‘பொய்தானே?’
    என்கிறாய்!
    ஆமாம் என்றேன் பொய்யாய்!

    3.
    நம் குழந்தைக்கு
    என்ன பெயர் வைக்கலாம்
    என்று கேட்கிறாய்
    காதலுடன்.
    இரு!
    முதலில் இந்த சுண்டலை
    சாப்பிட்டு முடிக்கிறேன்.
    பிறகுதான் எல்லாம்.

  • பினாத்தல் சுரேஷ் பின்னி எடுத்துவிட்டார்..
    அவருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது
    வாழ்த்துக்கள்.

  • சித்ரன், ஜெய், ஆதம் முஹம்மத் மற்றும் நண்பர்களுக்கு: கழுதையை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் என்பது அச்சமூட்டக்கூடியதாக உள்ளது. இது நிச்சயமாகக் கவிதை இல்லை, சர்வநிச்சயமாக நல்ல கவிதை இல்லை என்பதை முற்றிலும் அறிந்தேதான் எழுதி வெளியிட்டேன். ஆனால் உங்கள் பாராட்டு என்னை மேலும் மேலும் இம்மாதிரி எழுதிப் பார்க்கத் தூண்டுகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்குப் பேரபாயம் சூழவிருப்பதைச் சுட்டுகிறது. அப்புறம் தமிழகத்தை ஜெயலலிதாவாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். வேண்டாம், பாராட்டாதீர்கள். 😉

  • பாரா, இது சும்மா ‘வெண்பாம்’ எழுதுவது மாதிரி ஜாலியாக இருக்கிறது. தொடருங்கள்.

  • ஒரு வாரப்பத்திரிக்கையில் ‘சொல்வனம்” என்ற தலைப்பில் வரும் so called கவிதைகளை விட இது எவ்வளவோ மேல்.

  • பினாத்தல் சுரேஷ், அரைக்க விதை நீ- அட்டகாசம்.

  • Pa Raghavan ஒரு மொட்டுக்குள் ஒளித்துவைத்த
    அசுரனின் உயிரொத்த என்
    காதலை
    சட்டெனக் கசக்கிக் கொன்றதுன்
    சத்தம் சேர்ந்த கொட்டாவி.

    நித்ரா தேவி ஊதி அணைத்திருக்கிறாள்

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!