மாமனாரின் துன்ப வெறி

இந்தக் கதை என்னுடையதல்ல. பீதாம்பர நாதனுடையது. யார் இந்தப் பீதாம்பர நாதன் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அவர் என் கெழுதகை நண்பர்களுள் ஒருவர் என்பதில் ஆரம்பித்து, இந்திய திருமணச் சட்டத்தின் பிரகாரம் மாமனாரை மட்டும் டைவர்ஸ் பண்ண வழியிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பவர் என்பது ஈறாகச் சுமார் தொள்ளாயிரம் பக்கத்துக்கு இந்த வியாசம் நீளக்கூடிய அபாயம் உண்டாகிவிடும். என் நோக்கம், இங்கே ஒரே ஒரு குறிப்பை அளிப்பது. அதுவும் சிறு குறிப்பு. நண்பர் பீதாம்பர நாதனின் பெருவாழ்வுப் பெருங்கடலில் இருந்து ஒரு துளி. இதுகூட நானாக எழுதவில்லை. நண்பர், தானாக விரும்பி இதை எழுதச் சொன்னபடியால் எழுதுகிறேன்.

எப்போதும் உங்களைப் பற்றி மட்டும் எழுதுகிறீர்களே, ஒரு மாறுதலுக்கு என் மாமனாரைப் பற்றி நீங்கள் ஏன் எழுதக்கூடாது? – என்று ஆரம்பித்தார் பீதாம்பர நாதன்.

இது எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஏனென்றால் நானறிந்தது ஒரே ஒரு மாமனார். அப்பழுக்கு சொல்ல முடியாத உத்தம ஜீவாத்மா. உயிரோடு இருந்த நாள்வரை எனக்கு ஓர் இம்சையும் தராத நற்குணவாதி. அவரைப் பார்த்து நான் பயின்ற நீதி என்னவென்றால், பெண்ணைப் பெற்று வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கும் தந்தையரெல்லோரும் தத்தமது மாப்பிள்ளையிடம் உசிராக இருப்பார்கள் என்பதுதான். பெண்மீது வைத்த பாசத்தில் பத்திருபது சதம் கூட்டி மாப்பிள்ளையின்மீது வைத்துவிடுவதே மாமனார்குல வழக்கம் என்பதாக எனக்குள்ளே ஒரு இது.

ஆனால் பீதாம்பர நாதன் சொல்லும் கதை முற்றிலும் வேறாகவல்லவா இருக்கிறது?

‘என் பெண்டாட்டி ஒரு கொடுக்காப்புளி. மாமனார் ஒரு வெடுக்காப்புளி.’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு பாதி குரலில் சொன்னார் பீதாம்பர நாதன்.

பிறகு எதிலாவது இந்தச் சொற்களுக்கு அர்த்தம் தேடிக்கொள்ளலாம், சப்ஜெக்டை மாற்றவேண்டாம் என்று பேசாதிருந்தேன்.

பீதாம்பர நாதனின் பிரச்னை சற்று வினோதமானது. அவரது மாமனாருக்கு, பீதாம்பர நாதனையும் சேர்த்து நான்கு மாப்பிள்ளைகள். எனவே, அவருக்கு நான்கு பெண்கள். மூத்த மகளும் மூத்த மாப்பிள்ளையும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அடுத்த மகளும் அடுத்த மாப்பிள்ளையும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். நான்காவது மகளும் நான்காவது மாப்பிள்ளையும் தாவூத் இப்ராஹிம் உட்கார்ந்து மேட்ச் பார்க்கும் கிரிக்கெட் புகழ் ஷார்ஜாவில் இருக்கிறார்கள். நமது நண்பர் மூன்றாவதும் முக்கியமானதுமான கதாபாத்திரம். இவர் தம் மனைவி மற்றும் ஒரே ஒரு மாமனாருடன் சென்னையில் இருப்பவர்.

‘பிரச்னையே அதுதான். என்னை பார்சல் பண்றதுலயே என் மாமனார் குறியா இருக்கார். எப்படி தப்பிக்கறதுன்னே தெரியல’ என்று புலம்பினார் பீதாம்பர நாதன்.

‘மாப்ளே, சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க. அப்பா அம்மாவ விட்டுப் போகமாட்டேன். பொறந்த ஊர் முக்கியம், புடலங்கா முக்கியம்னெல்லாம் டயலாக் பேசாதிங்க. அஞ்சு வருஷம் ஃபாரின் போவிங்களா, அஞ்சு தலைமுறைக்கு சம்பாதிச்சிட்டு வந்து நிம்மதியா செட்டில் ஆவிங்களான்னு பாத்தா, இப்பிடி மாச சம்பளம் கட்டலைன்னு ஒரே பிளேடை வெச்சி ஒருவாரம் ஷேவ் பண்றிங்களாமே?’ என்று ஒருநாள் கேட்டிருக்கிறார் பீ.நாதனின் மாமனார்.

நண்பருக்கு ஜிவ்வென்று கோபம் உச்சி மண்டைக்கு ஏறியிருக்கிறது. நான் ஒரு பிளேடில் ஒருவாரம் சிரைத்தால் என்ன, ஒரு முழ நீளத்துக்கு தாடி வளர்த்தால்தான் இவருக்கென்ன?

ஆனாலும் அடக்கிக்கொண்டு தன்மையாகத்தான் அந்தத் தருணத்தைக் கையாண்டிருக்கிறார். ‘மாமா அவர்களே, மாமா அவர்களே! எனக்கு வெளிநாடு போவதில் விருப்பமில்லை. என் குறைந்த சம்பளத்தின் பொருட்டு உங்கள் மகளுக்கு இலவச அரிசியில்தான் சோறு என்று சொன்னதில்லை, உங்கள் வீட்டுக்கு வந்து நின்றதுமில்லை. உங்களுக்கு வேண்டுமானால் செவனோக்ளாக் எட்ஜ்டெக் ஒரு பாக்கெட் வாங்கித் தருகிறேன். அதுகூட வேண்டாம், ஒரு பிளேடுக்கே பிளேடு எதற்கு என்பீர்களானால் அதுவும் சரியே. என்னைச் சற்று நிம்மதியாக இருக்க விடுகிறீர்களா?’

மாமனாராகப்பட்டவர் அதன்பிறகும் விடவில்லை. நேரே பீதாம்பர நாதனின் அலுவலக நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருக்கிறார். [விதியின்படி அவர் பீ. நாதனின் மாமனார் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் வசிப்பவராக உள்ளார்.] ‘உங்கள் நண்பரிடம் நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா? பிழைக்கத் தெரியாத ஆசாமியாக இருக்கிறாரே. இஞ்சினியரிங் படித்துவிட்டு இங்கே வெத்துக்கு வசிப்பது தப்பல்லவா? நாலு இடத்தில் முயற்சி செய்து நல்ல சம்பள உத்தியோகம் எதையாவது பார்த்துக்கொள்ளக்கூடாதா? என் மகள் பாவம், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறாள். அவளது சகோதரிகளெல்லோரும் பெரும் பணக்காரர்களாகிவிட்டார்கள். இவள் மட்டும் தீபாவளிக்கு ஒன்று, பொங்கலுக்கொன்று, பிறந்த நாளுக்கொன்று, திருமண நாளுக்கொன்று என்று வருஷத்துக்கு நாலே நாலு புடைவையுடன் திருப்தியுற வேண்டியிருக்கிறது. எல்லாம் என் விதிப்பயன்’ என்று புலம்பியிருக்கிறார்  திரு. மாமனார்.

‘எனக்குக் கல்யாணமாகி பதினஞ்சு வருஷம் ஆச்சு. வருஷத்துக்கு நாலு புடைவைன்னா, இன் டோட்டல் அறுவதாச்சு. டெய்லி ரெண்டு கட்டினா போதாதா சார்? நல்லி சில்க்ஸ் பொம்மைக்கே வாரத்துக்கு ஒருவாட்டிதான் புடைவை மாத்தறாங்க’ என்று தேம்பினார் பீதாம்பர நாதன்.

எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. இது அத்துமீறல் அல்லவா? மாப்பிள்ளையை அடித்துத் துரத்திய மாமனார் என்று தினத்தந்தியில் செய்தி வரவழைப்பதே அவரது மாமனாரின் ஒரே நோக்கமா? நல்ல மனைவியாகப்பட்ட, குணவதியான பீதாம்பர நாதனின் தர்ம பத்தினி இது விஷயத்தில் தன் தந்தையிடம் பேசலாமே? அவரது எல்லைகளைச் சுட்டிக்காட்டலாம் அல்லவா?

‘கெட்டுது குடி. அவ அடிக்கற கூத்தைக் கேக்காதிங்க சார்! எப்பவாச்சும் பேச்செடுத்தா, டபக்குனு கண்ணு பார்டர்ல ஒரு அக்வாஃபினா பாட்டில் அளவுக்கு தண்ணி வெச்சிக்கிட்டு வெளிய ஊத்திடுறா. எனக்குத்தான் வாய் இல்ல; எங்கப்பா வாயையுமா தைக்கணும்னு கேக்கறா!’

ஓ, இது உள்நாட்டுப் பிரச்னை. என் பஞ்சசீல வழக்கப்படி அதில் தலையிடல் தகாதென்று சட்டென்று திசை மாற்றி, ‘அதுசரி, உங்களுக்கு ஃபாரின் போவதில் என்ன பிரச்னை? பிடிக்கவில்லை என்பது தவிர வேறு காரணம் உண்டா?’ என்று கேட்டேன்.

இருக்கலாம் அல்லவா? வயதான பெற்றோர், திருமணத்துக்குக் காத்திருக்கும் தங்கை, உடம்புக்கு முடியாத அத்தைப் பாட்டி… அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள்.

‘அதெல்லாம் இல்ல சார். இண்ட்ரஸ்ட் இல்ல. அவ்ளோதான். இங்க ஒண்ணும் நான் பிச்சை எடுக்கல. அங்க போய் எடுக்கவும் விரும்பல. அவ்ளோதான்.’

எனக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. ஆனால் பதினைந்து ஆண்டுகளாகவும் தன் மாமனாருக்குப் புரியவில்லை என்றார் பீதாம்பர நாதன்.

ஒரு குடும்ப விசேஷத்துக்கு நான்கு மாப்பிள்ளைகளும் கூடும்படியானது. அல்லது மூன்று வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் சென்னைக்கு வந்த சமயத்தில் ஒரு குடும்ப விசேஷம் ஏற்பாடானது. பெரிய கஷ்டம்தான். ஆனாலும் அனுபவஸ்தர். பீதாம்பரநாதன் எப்படிச் சமாளித்தார்? விசேஷம் முடிந்து வந்தவரை ஆர்வமுடன் விசாரித்தேன்.

அசப்பில் உண்ணாவிரதம் இருந்து, அடித்துத் துரத்தப்பட்ட யோகா மாஸ்டர் முக பாவத்துடன் இருந்த பீதாம்பர நாதன், ‘என் மாமனார் ஒரு கொலவெறி புடிச்ச ஆள்சார்! ஆக்சுவலா அவர் நடத்தின ஹோமமே அவரோட மூணாவது பொண்ணுக்காகத்தானாம். இதை முதல்ல சொன்னா நான் வரமாட்டேன்னு மறைச்சிட்டார் சார்! அவர் பொண்ணு கஷ்டமெல்லாம் தீரணுமாம். அவ 365 புடைவை வாங்கி சந்தோஷப்படணுமாம். எண்பது இஞ்ச்சுக்கு எட்டு செண்டி மீட்டர்கூடக் குறையாத டிவிலதான் சீரியல் பாத்து நாசமா போகணுமாம். கக்கூஸ்ல ஸ்ப்ளிட் ஏசி போட்டு வாழணுமாம். என்ன மனுஷன் சார்! என்னால முடியல.. நிச்சயமா முடியல..’

எனக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பீதாம்பர நாதனை நான் பார்த்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. திடீரென்று நேற்று என் முன் வந்து நின்றவர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜாமீன் கிடைத்த மாதிரி ஒரு பரவசப் புன்னகையை என்மீது வீசினார். ‘என்ன ஆச்சு பீதாம்பர நாதன்? மாமனார் பூட்டாரா?’ என்றேன், அதைத் தவிர வேறு எதற்கும் இம்மனிதர் இத்தனை பரவசப்பட மாட்டார் என்னும் ஆழமான நம்பிக்கையுடன்.

‘இல்லை. நான் என் மாமனாரைப் பழிவாங்கப் போறேன்.’ என்றார் கண்கள் ஜொலிக்க.

‘ஐயய்யோ. கொலை கிலையெல்லாம் வேண்டாம்யா..’

‘சேச்சே. இது அதைவிடப் பெரிசு.’

‘அப்புடின்னா?’

‘நான் ஃபாரின் போறேன்.’

பக்கென்றது எனக்கு. புரியாமல் விழித்தேன்.

‘எங்க கம்பெனிக்கு சியர்ரா லியோன்ல [Sierra Leone] ஒரு ப்ளாண்ட் ஆரம்பிக்கற ப்ராஜக்ட் வந்திருக்கு. மேற்கு ஆப்பிரிக்கா. ஏசி போட்டாலும் வேத்து ஊத்துற நாடு. உலகத்துலயே பரம ஏழை தேசம். நம்ம ஒரு ரூபாய்க்கு அந்த ஊர்ல 96 ரூபா மதிப்பு.  மூணு வருஷ ப்ராஜக்ட். ப்ளாண்ட் ஆரம்பிச்சிக் குடுத்துட்டு வந்துடலாம்! மூணு வருஷம் வேல பாத்தாலும் மூணு ரூபாகூட அதிகமா வரப்போறதில்ல. இதே சம்பளம்தான். அலவன்ஸ் கொஞ்சம் இருக்கும். அவ்ளோதான். எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை, போறேன்னு சொல்லிட்டேன்! செத்தார் என் மாமனார்! பொண்ணு ஃபாரின்ல இருக்கான்னுதான் சொல்லிக்கணும். ஆனா மலச்சிக்கல் வந்தவன் மாதிரி மூஞ்சி  வெச்சிக்கிட்டு சொல்லப்போறார் இனிமே!’

பி.எஸ். வீரப்பாக்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

33 comments

  • இது நிஜமாவே உண்மையா அ புனைக்கதையா ??

    //பொண்ணு ஃபாரின்ல இருக்கான்னுதான் சொல்லிக்கணும். ஆனா மலச்சிக்கல் வந்தவன் மாதிரி மூஞ்சி வெச்சிக்கிட்டு சொல்லப்போறார் இனிமே!’//

    என்ன கொடுமை சரவணன் !!!!????

    • /நிஜமாவே உண்மையா/ ரவியா, மொழியின் அசாத்தியங்களைச் சாத்தியமாக்கும் வித்தையை உங்களது இந்த ஒரு சொற்றொடரில் தரிசனமாகப் பெறுகிறேன்.

  • Wow Para , super-o-super’u
    Short but nachunu irunthathu 🙂
    Naan Kuda , title’a paarthuttu , cha ivar yenn “antha-mathiri” kathai ezhutha poittaarnu oru nimisham thappa nenachuten….sorry.

  • என்ன ஒரு அருமையான எழுத்து நடை!சாதாரண விஷயம் கூட அற்புத நகைச்சுவையாக உருவெடுக்கின்றது உங்களிடம்.அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் இல்லாமல் பட்ட கடினம் சிரித்து சிறிது வயிறு வலித்தது.அடுத்து இந்த பதிவு .//
    //விதியின்படி அவர் பீ. நாதனின் மாமனார் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் வசிப்பவராக உள்ளார்.] ‘///
    ஹா ஹா அருமை வெகுவாக ரசித்தேன் !!!!

  • அடடா என்ன ஒரு லாவகம், நீர் எழுத்தாளர் ! 😀

  • //நான் பயின்ற நீதி என்னவென்றால், பெண்ணைப் பெற்று வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கும் தந்தையரெல்லோரும் தத்தமது மாப்பிள்ளையிடம் உசிராக இருப்பார்கள் என்பதுதான். பெண்மீது வைத்த பாசத்தில் பத்திருபது சதம் கூட்டி மாப்பிள்ளையின்மீது வைத்துவிடுவதே மாமனார்குல வழக்கம் என்பதாக எனக்குள்ளே ஒரு இது.//

    அந்த யோகா ஆசிரியர் மாதிரி
    நம்ம கிழக்கு ஆசிரியருக்கும்
    உண்ணாவிரதம் இருந்து பழக்கமில்லை
    என்பது புரிகிறது. பயபக்தி.:)
    என்பதை

  • ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹா!! நெத்தியடியான முடிவு. பீதாம்பரநாதன் சரியான மூளைக்காரர் 🙂

  • “பெண்மீது வைத்த பாசத்தில் பத்திருபது சதம் கூட்டி மாப்பிள்ளையின்மீது வைத்துவிடுவதே மாமனார்குல வழக்கம்”

    இது மாமனாருக்கு பொருந்தும். ஆனா மாமியாருக்கு ???

  • அருமையான நடை. மிகவும் ரசி(சிரி)க்கும் படியாக இருக்கிறது.

  • வி.சேகர் படம் எடுக்க ஏற்ற கதை.ஆனால் வி.சேகர் அவரே வசனம் எழுதிவிடுவார் என்பதால் பா.ராவிற்கு அப்பாவி மாப்பிள்ளை அல்லது பொல்லாத மாமனார் பாத்திரம் கிடைக்க வாய்ப்புள்ளது :). என்ன கோவை சரளாவிற்கு ஜோடியாக நடிக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா பா.ரா 🙂

  • ஆசானே புவியிலோரிடம் எங்க கிடைக்கும் , கிழக்கில் வெளியிடவில்லையா?

  • சிரிக்காமல் படிக்க முடியவில்லை. நகைசுவை எழுத்தாளர்கள் (பா.ரா) பிறக்கிரார்களா? இல்லை உருவாக்கபடுகிரார்களா ? (மாமனார்களால்)

  • வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சோகங்களே, மோசமான அனுபவங்களே நகைச்சுவை எழுத்தாளர்களை உருவாக்குவதாக ஒரு கருத்து.மேல்விபரமறிய ஜெயமோகன்,எஸ்.ரா போன்றவர்களை கேட்கவும்.

  • தலைப்பை பார்த்தவுடன் மழு என்ற மலையாளத் திரைக்காவியம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பா.ராவின் வசனத்தில் உருவாகிறதோ, ஆனால் தலைப்பில் ஒரு எழுத்து பிழையாகிவிட்டதோ என்று நினைத்தேன்? #& ! 🙁 🙂

  • உயர் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் சிக்கல்களை மிக எளிதாக புரிந்து கொள்ள வைக்கும் நகைச்சுவை பூச்சுடன் கூடிய மிகவும் அழுத்தமான பதிவு.

  • //நிஜமாவே உண்மையா // pleonasm ?? இச் சொற்ச்சுடர் பிரெஞ்சில் (பேச்சில்) பயன்படுத்துவதுண்டு ! la vérité vraie !

    But this one unvaluntary ! 🙂

  • /– ‘என்ன ஆச்சு பீதாம்பர நாதன்? மாமனார் பூட்டாரா?’ என்றேன் –/

    எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் ராகவன்!… எங்கிருந்துதான் உங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கிறதோ தெரியவில்லை.

  • கடந்த புதன் முதலே வீட்டுக்குக்காரருடன் துவந்த யுத்தம். என் முகமே ஆபிரகாம் லிங்கன் போல நீண்டு விட்டதாக மனைவி சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நகைச்சுவை பதிவை கையில் தேநீர் கோப்பையுடன் சிரித்துக்கொண்டே படிக்கவே யோவ் நைன்டீன் இன்செஸ் மானிட்டர்… துப்பிப்பிடாதே என்றார் மனைவி. கூடவே முகமும் மலர்ந்து விட்டதாக சொன்னார். … அதெல்லாம் சர்தான்… நீலக்காகம் நினைவில் இருந்தே நீங்கிவிட்டது.. இனிமேல் உம்மிடம் கேட்டபதே வேஸ்ட்.

  • சேரில் உட்கார்ந்திருந்ததால், விழாமல் தப்பித்தேன். கலக்கியிருக்கீங்க 🙂

    “அனுபவிச்சு” எழுதறதுன்னா இதுதான் போலருக்கு 😉

  • ஆரம்பமே அமர்க்களம்.

    //இந்திய திருமணச் சட்டத்தின் பிரகாரம் மாமனாரை மட்டும் டைவர்ஸ் பண்ண வழியிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பவர்//

    எனது நன்பரை நினைவுப்படுத்தியது.

    உங்களுடைய அருமையான நகைச்சுவை உணர்வுக்கு பாராட்டுக்கள்.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading