இம்சைகள் இலவசம்

மாதம் சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவாகிக்கொண்டிருந்த இடத்தில் வெறும் இரண்டாயிரம் செலவுடன் வேலையை முடிக்கிற வழியொன்றைக் கண்டுபிடித்தால் அதன்பெயர் பைத்தியக்காரத்தனமா?

ஆமாம். அப்படித்தான் என்று சொன்னார்கள், சான்றோர்களும்1 வல்லுநர்களும்2 விமரிசகர்களும்3.  (இந்த சான்றோர், விமரிசகர், அறிஞர் போன்ற குறிச்சொற்கள் யாவும் வீட்டாரைக் குறிப்பவை.) நான் செய்தது, ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்றை விற்றுவிட்டு, குட்டியாக, கொழுகொழுவென்று குண்டாக ஒரு ஸ்கூட்டரை வாங்கியது. பிள்ளையாருக்கேற்ற மூஞ்சூறு. போதும். விற்கிற விலைவாசியில் என்னையே எடைக்கு எடை போட்டாலும் எண்ணெய் வாங்கிக் கட்டாது என்பது ஒருபுறமிருக்க, எப்போதும் நெரிசலில் நசுங்கும் நகரச் சாலைகளில் காரை ஓட்டிக்கொண்டு போவதென்பது காருக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

தவிரவும் ஸ்கூட்டர் சௌகரியமானது. சந்து பொந்துகளில் புகுந்து புறப்படும் சாத்தியங்கள் மிக்கது. கியர் பிரச்னைகூடக் கிடையாது. ஏறி உட்கார்ந்ததும் ஏகாந்தக் கனவுகளைக் கொண்டுவந்து சேர்த்துவிட வல்லது.

இவ்வாறாக என் நியாயங்களை வகுத்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன்.  அதைத்தான் எதிர்த்தார்கள்.

எதிர்ப்புக்கெல்லாம் பணிந்துவிடுவதா? கண்ணை விற்றுக் கண்ணாடி வாங்கியாகிவிட்டது.  கொஞ்ச காலத்துக்கு ஸ்கூட்டர் பயணம் சுகமாகத்தான் இருந்தது. திடீரென்று ஒரு கொழுத்த முகூர்த்த நாளில் சென்னை நகரில் நான் அதுநாள் வரை பார்த்தறியாத, ஒரு மாதிரி வினோதமான செவ்வக வடிவ, ஏபிடி பார்சல் சர்வீஸ் பெட்டியைக் கவிழ்த்துப் போட்ட தோற்றத்தில் – ஆனால் நல்ல பால் வெள்ளை நிறத்தில் சில புதிய வாகனாதி விஷயங்கள் முளைத்தன. இதென்ன மாயாஜாலம்! ஒரே நாளில் நகரின் எந்தச் சாலையிலும் அந்த வாகனங்களே ஓடிக்கொண்டிருக்கவும் செய்தன. என்னைத் தவிர உலகம் முழுமைக்கும் அது வரப்போவது முன்பே தெரிந்த மாதிரி அந்த வெள்ளைப் பெட்டிக்குள் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டமும் இருக்கக் கண்டேன்.

கோவிந்தா மஞ்சள் நிறத்தில், சூர்ப்பனகை மாதிரி பருத்த வடிவில், சகிக்கமுடியாத அபசுரம் கூடிய பிரதி மத்தியம சத்தத்தில் அலறிக்கொண்டு ஓடிய பழைய ஷேர் ஆட்டோக்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இந்த நகரும் வெள்ளைப் பெட்டிகள் அதிபயங்கர நவீன எழுத்தாளர்களின் மாய யதார்த்தப் புனைகதையில் வரக்கூடிய திடீர்த் திருப்பம் போல, சாலையின் ஓரங்குலம் விடாமல் வரிசை கட்டி விரைந்துகொண்டிருந்தன. எப்படி ஓரிரவில் இத்தனை வாகனங்கள் முளைத்து நகரை நிறைக்கும்?

புரியவில்லை. சரி, மக்களின் வசதிக்காகத்தானே இதெல்லாம் வருகின்றன என்று மனத்தைத் தேற்றிக்கொள்ளலாம் என்றால் அதுவாவது முடிந்ததா?

புதிய வெள்ளை நிறச் செவ்வக நகரும் பெட்டிகளின் ஜீன்களில் ஒரு குறிப்பிட்ட விஷயம் தயாரிப்பின்போதே செலுத்திவைக்கப்பட்டிருக்கிறது.  மக்கள் என்பவர்கள் யார்? தன்மீது ஏறி அமர்பவர்களும், ஏறி அமர்ந்து பயணம் செய்ததற்குப் பணம் கொடுப்பவர்களும். மற்றபடி தனக்கு வெளியே உள்ள எதுவும் பொருட்படுத்தத்தக்கதல்ல என்னும் சூத்திரமே அது.

என் மூஞ்சூறு ஸ்கூட்டரின்மீது அந்த முதல்நாளில் முதல் இடி  இடித்த  அந்த வெள்ளை நகரும் பெட்டியின் ஓட்டுநர், இந்த உண்மையை எனக்குப் புரியவைத்தார். மேற்கு மாம்பலம் அரங்கநாதன் சுரங்கப் பாதையின் இடது ஓரத்தில் என் அதிகபட்ச வேகமான பத்தரை கிலோ மீட்டரில் நான் அப்போது விரைந்துகொண்டிருந்தேன். பின்புறமாக தடதடதடவென்று நர்த்தனமாடியபடி வந்த அந்தப் பெட்டி பம்ம்மென்று ஒரு மோது மோதியது.

நியாயமாக நான் நாற்பதடி பறந்து சென்று விழுந்திருக்க வேண்டும். ஆனால் என் நல்ல வண்டி, மோதிய இடத்தில் அப்படியே அட்டென்ஷனில் நின்றுவிட்டது. அசகாயக் கோபத்துடன்,  தார்மிகம்,  அறச்சீற்றம்  உள்ளிட்ட என்னென்னவோ சேர்ந்துகொள்ள, நான் உக்கிரமாகத் திரும்பினேன்.

அந்த நகரும் பெட்டியின் ஓட்டுநர் என்னை முந்திக்கொண்டார். ‘யோவ், வண்டி வருதே, நவுற மாட்ட?’

நகருக்குள் எங்கே நகர என்று திரும்பிப் பார்த்தேன். சுரங்கப் பாதையின் பக்கவாட்டுச் சுவருக்கு இரண்டு அல்லது மூன்று இஞ்ச் இடைவெளியில்தான் நான் போய்க்கொண்டிருந்தேன். இந்த பூகோள உண்மை அவர் பார்வையில் ஏன் பட மறுக்கிறது?

‘அப்ப வேகமா போகவேண்டியதுதான?’ என்று அடுத்த பாணம் வந்தது. எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தது மாநகரக் குப்பையள்ளும் வண்டி. அதன் துர்மணத்தைக் கூடச் சகித்துக்கொள்ளலாம், ஆனால் போகும் வழியெங்கும் சரித்திரத்தில் தடம் பதிப்பது மாதிரி ஒழுகிச் செல்லும் சாக்கடைக் குப்பை வரிசைகளைத் தவிர்ப்பதன் பொருட்டே நான் பத்து கிலோ மீட்டர் வேகத்தைத் தேர்ந்தெடுத்திருந்தேன். இதையெல்லாம் ஒரு பாவமன்னிப்புக் கேட்கிறவன் பாவனையில் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கக் காலை எட்டரை மணி என்பது சரியான நேரமல்ல. தவிரவும் ஏழரை ஒன்பது என்பது ராகுவின் காலமே ஒழிய ராகவனின் காலமல்ல.

‘இன்னா முறைக்கற? பொத்திக்கினு போய்க்கினே இரு.’ என்று இறுதி எச்சரிக்கை விடுத்துவிட்டு, திரும்பவும் பக்கவாட்டில் ஒரு இடி இடித்தபடி நகர்ந்தது அந்த வெள்ளைப் பெட்டி.

என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அன்றுதான் முதல் முதலாக நகரச் சாலையில் அந்த ரக வாகனத்தை நான் கண்டேன். அறிமுக நன்னாளிலேயே தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நிறுவுவது எப்படி என்பதை அந்த ஓட்டுநர் தெளிவாக அறிந்துவைத்திருந்தார். என்ன செய்யமுடியும்? பொதுவான சமூகக் கோபங்கள் ஒரு விளம்பர இடைவேளையில் மறந்து போய்விடும் சௌகரியம் இல்லாவிட்டால் மனித குலமே இருக்க முடியாது.

இன்னொரு நாள். இது மாலை வேளை. இடைப்பட்ட பல நாள் காலை, மாலை வேளைகளில் இந்த நவீன வெள்ளை நிற நகரும் பெட்டிகள் நகரச் சாலைகளில் அடிக்கிற லூட்டிகள் பலவற்றை நேரில் கண்டும், பக்கவாட்டில் அனுபவித்தும் இருந்தேன். எனவே, இந்த இன்னொருநாள் மாலை வேளையில் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.

வெளியில் இருந்து பார்க்கும் பார்வைக்கும் உள்ளிருப்போர் பார்வைக்கும் குறைந்தது ஆறு வித்தியாசங்கள் இருக்குமோ என்னவோ? அதையும் பரீட்சித்துப் பார்த்துவிடலாமே? யார் கண்டது? நகரும் வெள்ளைப் பெட்டியின் தரப்பிலும் ஏதாவது நியாயம் இருக்கலாம்.

இவ்வாறு தோன்றியதும் என் மூஞ்சூறு ஸ்கூட்டரை பாண்டி பஜாரில் ஒரு சாதிப் பெயர் கொண்ட பெண்கள் ஆடையகத்தின் வாசலில் நிறுத்திப் பூட்டிவிட்டு வண்டிக்குக் காத்திருப்பவன் போல நின்றேன். என் நோக்கம் எளிது. வெறும் ஒரு கிலோமீட்டர். அங்கிருந்து பனகல் அரசர் பூங்கா வரை அந்தப் பெட்டி வண்டியில் பயணம் செய்வது. திரும்ப அங்கிருந்து நடந்துவந்து என் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது.

இரு நிமிடங்களில் நாலைந்து பெட்டிகள் வரிசையாக அங்கே வந்தன. கம்பம் கண்ட இடத்தில் கால் தூக்கும் ஜீவராசியைப் போல், சாலையில் எங்கு மனிதர்கள் நின்றாலும் – அது நடுச்சாலையே ஆனாலும் சரி – உடனே நிறுத்தி, ஏற்றிக்கொள்கிற நல்ல மனம் இந்த நகரும் பெட்டிகளுக்கு உண்டு என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். அதன் கொள்ளளவைவிட முப்பத்தி மூன்று சதவீதம் அதிகமாகவே மக்கள் தொகை கொண்டதாக இருந்தது அந்தப் பெட்டி.

பெரும்பாலும் பெண்கள். வேலைக்குப் போகிறவர்கள். சற்றே பழுப்பான நைலக்ஸ் புடைவைகளும் காலி டிபன் பாக்ஸ்களும் மறுநாளுக்கான கீரைக் கட்டுகளுமாக இருந்தார்கள். அண்ணா சாலையிலிருந்து அசோக் நகர் வரையிலும், அதற்கு அப்பாலும் பயணம் செய்பவர்கள். ஒரு நூறடி தூரத்துக்குள் இருபது முறை வண்டி நின்று புறப்படுவது பற்றி அவர்களுக்கு விமரிசனம் ஏதுமில்லை. சகாயக் கட்டணம் இதனைச் சகித்துக்கொள்ளச் சொல்லிக்கொடுக்கும். தவிரவும் பயணத் தோழமைகளுடன் உலகு மறந்து உரையாடிக்கொண்டு செல்லலாம். எதையாவது மறந்துவிட்டது நினைவுக்கு வருமானால், எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி இறங்கலாம். ஐயோ வண்டி போய்விடுமே என்ற கவலை இல்லை. நிறம் மாறாத பூக்களாக அதே வண்டியின் இன்னொரு பிரதி அடுத்தக் கணம் வந்து நிற்கும்.

இந்த வண்டிகளுக்குள் வித்தியாசமே கிடையாதா என்றால், ஒரே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னாள் நடிகரும் இந்நாள் அரசியல்வாதியுமான ஒருவரின் பெயர் ஒரு பாதி வண்டிகளின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கும். முன்னாள் தீவிர அரசியல்வாதியும் இந்நாள் தீவிரமற்ற அரசியல்வாதியுமான இன்னொரு பிரமுகரின் பெயர் இன்னொரு பாதி வண்டிகளின் முகப்பில் இருக்கும்.

இந்த வண்டிகளுக்கெல்லாம் உண்மையிலேயே இவர்கள்தாம் முதலாளிகளா? அல்லது, இவர்கள் பெயர் முகப்பில் இருந்தால்தான் போலீஸ்காரர்கள் தொல்லை இருக்காது என்று செய்கிறார்களா? அல்லது இந்தத் தலைவர்களின் விசுவாசிகள் மட்டும்தான் இந்த வெள்ளை நகரும் பெட்டிகளை ஓட்டுகிறார்களா?

குடைந்த சந்தேகத்தை ஓட்டுநரிடம் கேட்டேன். கிடைத்த பதில், ‘எங்க இறங்கணும்?’

பனகல் அரசர் பூங்கா வருவதற்கு முன்பே இறங்கிவிட்டேன். கேள்வியல்ல காரணம். வண்டிக்குள் ஒலித்த நாராசமான பாடலும் சகிக்கவொண்ணாத வியர்வை நாற்றமுமே காரணங்களாகும். ஆனால் ஒன்றைக் கவனித்தேன். அந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவை அந்த வாகனம் கடக்கச் சரியாக ஏழு நிமிடங்கள் பிடித்தன. இடையில் நெஞ்சை உலுக்கும் வண்ணம் சடன் பிரேக்குகள் ஆறும், சரேலென்ற தேய்ப்புகள் இரண்டும் ஒரு வசவுச் சொல்லும் ஓட்டுநர் இருக்கைப் பக்கமிருந்து வந்தன. பயணிகள் அதற்கெல்லாம் பழகியவர்கள் போலும். எதையுமே சட்டை செய்யவில்லை. காலக்கிரமத்தில் அசோக்நகர் போய்ச் சேர்ந்திருப்பார்கள்.  கீரைக்கட்டுகள்தான் வாடியிருக்கும்.

சிக்னல்கள், சாலைக் கோடுகள், குறுக்கே – எதிரே – அருகே – பின்னால் வரும் வாகனங்கள், சாலைகளைக் கடக்கும் மனிதர்கள், நாய்கள், பிற வாகனங்கள், போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்து விதிகள் எது குறித்தும் இந்த வாகன ஓட்டிகள் சற்றும் அலட்டிக்கொள்ளாதது எனக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. ஒரு சைக்கிளை விடவும் லாகவமாக இவர்கள் எத்தனை சிறு இடைவெளியிலும் புகுந்துவிடுகிறார்கள். தவறி அல்லது தவறாமல் எதன் மீதாவது மோத நேரும்பட்சத்தில் அது பற்றிய சிறு அதிர்ச்சியும் அடைவதில்லை. மோதிய பாவத்துக்கு நின்று ஒரு கணம் மன்னிப்பும் கேட்பதில்லை.

இதெல்லாம்கூடப் பரவாயில்லை. வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக இதுநாள் வரை நான் கருதிவந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள்கூட இந்த வெள்ளைநிற நகரும் பெட்டிகளைக் கண்டால் பணிந்தும் நகர்ந்தும் போவதுதான் தாங்கமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் ஒரு இடி இடித்தால் இந்தப் பெட்டிகள் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுமளவு மெலிந்த தகரங்கள்தாம். ஆனாலும் பேருந்தர்கள் அப்படிச் செய்வதில்லை.

இதுவும் குடைச்சல் அளித்தது. என் நண்பரான ஒரு பேருந்து நடத்துநரிடம் ஒருநாள் விசாரித்தேன். ‘ரொம்ப கரெக்டு சார். கொலைவெறி வரத்தாஞ்செய்யுது. ஆனால் வெள்ள கலர் வண்டிய வம்புக்காச்சும் இடிக்க மனசு வராது எங்காளுங்களுக்கு’ என்றார். இதே வண்டிகள் வேறு நிறத்தில் இருந்திருந்தால் நடப்பதே வேறாம்.

பகீரென்றது எனக்கு. ஆண்டவரல்ல; ஆள்பவர்தான் இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும். இல்லாவிட்டால் என் மூஞ்சூறு ஸ்கூட்டரையும் விற்றுவிட்டு நான் ஒரு வெள்ளை நிற நகரும் பெட்டியைப் பிரத்தியேகமாக எனக்கென வாங்கிவிடுவது தவிர வேறு வழியே இல்லை.

O

[புதிய தலைமுறை வார இதழில் இவ்வாரம் ஆரம்பித்திருக்கும் பத்தி. இதழுக்கு நன்றியுடன் இங்கே.]
Share

15 thoughts on “இம்சைகள் இலவசம்”

 1. ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு இம்சை சார்… எங்க ஊர்ல அது மூணு சக்கரமா இருக்கு. 🙁

 2. D. Chandramouli

  Very interesting and humorous description of the traffic in Chennai. The more I wish to return to my home country, such nightmares that I often gather from various blogs do deter me against my wish. Chennai traffic, people used to say, is horrible, but it seems it is sheer madness. With your vast experience, why don’t suggest some solutions? I can think of some – discipline everywhere, enforced by police strictly. Second, infrastructure – widening of roads, improved public transporation, decent bus stops (so people don’t have to wait on the middle of the road), queuing habit. etc.

 3. உங்களுக்கென்று எப்படித்தான் சம்பவங்கள் இவ்வாறு நடந்து தொலைக்கிறதோ. அதையும் சுவாரஸ்யமாக அபாரமாக எழுதி விடுகிறீர்கள்.

  //ஏபிடி பார்சல் சர்வீஸ் பெட்டியைக் கவிழ்த்துப் போட்ட தோற்றத்தில் – ஆனால் நல்ல பால் வெள்ளை நிறத்தில் சில புதிய வாகனாதி விஷயங்கள் முளைத்தன. இதென்ன மாயாஜாலம்!//

  வண்டியின் பெயரை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

  ஆட்டோ அராஜகர்களுக்கு சரியான போட்டி போலும்.

  1. சித்ரன், நீங்கள் எடுத்துப் போட்ட வரியிலேயே கடைசிச் சொல்லாக வாகனத்தின் பெயர் உள்ளதே.

 4. சஹ்ரிதயன்

  ///முன்னாள் நடிகரும் இந்நாள் அரசியல்வாதியுமான ஒருவரின் பெயர் ஒரு பாதி வண்டிகளின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கும். முன்னாள் தீவிர அரசியல்வாதியும் இந்நாள் தீவிரமற்ற அரசியல்வாதியுமான இன்னொரு பிரமுகரின் பெயர் இன்னொரு ////

  தஞ்சாவூர் குசும்பா வாழப்பழத்தில ஊசி!!! 🙂

 5. /காலக்கிரமத்தில்/

  இந்த வார்த்தையை இலங்கை வானொலியில் அப்துல் ஹமீதின் குரலில் கேட்க அருமையாக இருக்கும். போகிற போக்கில் எல்லாவற்றையும் அலசி விவரித்த விதம் அருமை.

 6. இன்தப்பணியை எங்கள் மதுரையில் ஷேர் ஆட்டோக்கள்
  செய்கின்றன.அராஜகம் தாங்க முடியலை.

 7. Sir,
  I doubt,if these vehicles have permits in the first place,leave alone the traffic discipline that they follow.
  We only have to call 100 for reporting them,but we wont,considering the family background of the drivers or for fear of incurring wrath of political bigwigs. hmmm..

 8. ஒரு பேரா ஒழுங்கா எழுதுவதற்குள் நாக்கு தள்ளிபோகிறதே எனக்கு! என்ன ஓர் அனாயாசம்! hats off ragavan!

 9. நாளுக்கு நாள் பெருகிக்கிட்டிருக்கும் ஜனத்தொகை சென்னையில், தமிழ்நாட்டில் என்னென்ன மாற்றங்களை உண்டாகும் என கற்பனையே செய்ய முடியாது. இதெல்லாம் சகஜம். அதுக்கு தகுந்த மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது தான். ஒன்று மட்டும் உறுதி. ஆடம்பர பொருட்கள் சுலபமாகவும் மலிவாகவும் கிடைக்கும். ஆனால் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடும் பெரும் விலை உயர்வும் கிடைக்காத நிலையும் விரைவில் வரும்.

 10. பொதுவான சமூகக் கோபங்கள் ஒரு விளம்பர இடைவேளையில் மறந்து போய்விடும் சௌகரியம் இல்லாவிட்டால் மனித குலமே இருக்க முடியாது.

  Super…!

 11. முதல் மூன்று நான்கு “பாரா”க்களைப் படித்ததும் அடுத்தது சைக்கிளுக்கு மாறிட்டீங்களோன்னு நெனச்சேன். ஆனா ட்விஸ்ட் ஆகிவிட்டது.

  ஆனாலும் பயணக்கட்டுரை நன்று.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *