எனக்குச் சில இங்கிலீஷ் மருந்து டாக்டர்களைத் தெரியும். அவர்கள் நாடி பிடித்துப் பார்க்க மாட்டார்கள். ஊசி குத்த மாட்டார்கள். நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடிக்கமாட்டார்கள். ஆப்பரேஷன், அனஸ்தீஷியா என்று அச்சுறுத்துகிறவர்களும் இல்லை. பிரதி ஞாயிறுகூட விடுமுறை அறிவிக்காமல், வீடு பெண்டாட்டி வகையறாக்களை சாமிக்கு நேர்ந்துவிட்டதுபோல் கவனிக்காமல் விட்டுவிட்டு, எப்போதும் கிளினிக்கில் நோயாளிகளுடன் துவந்த யுத்தம் நடத்துகிற டாக்டர்கள் இல்லை இவர்கள். ஆனால் பட்டப்படிப்பை முடித்தவர்கள். அதில் சந்தேகமில்லை. ஒருத்தர் ரஷ்யாவுக்குப் போய் பட்ட மேல் படிப்பெல்லாம்கூட முடித்துவிட்டு வந்தவர். ஒரு கடை போட்டால் கண்மூடித் திறக்கும் நேரத்தில் கல்லா நிரம்பித் ததும்பிவிடும். ஆனாலும் இவர்கள் ஏனோ அதைச் செய்வதில்லை.
என்னால் முதலில் நம்ப முடியவில்லை. ஆனால் தினசரி வாழ்க்கையில் அடிக்கடி இந்த இடாக்குடர்களை எதிர்கொள்ள நேரிட்டுவிடுகிறது. ஒவ்வொரு முறை காணும்போதும் முதல்முறை தாக்கிய அதிர்ச்சியின் சதவீதம் சற்றும் குறைவதில்லை. இவ்விசித்திர வீரியர்கள், சினிமா டாக்டர்கள். டாக்டராக நடிப்பவர்கள் என்று தப்பர்த்தம் கொள்ளக்கூடாது. டாக்டருக்குப் படித்துவிட்டு, ஏனோ மனசு மாறி சினிமாவுக்கு வந்தவர்கள். வேறு சிலர், பகுதி நேரம் மட்டும் மனசு மாறியவர்கள்.
ஒன்றும் பிழையில்லை. கலை மனத்துக்கும் காலேஜ் படிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று எடுத்த எடுப்பில் தோன்றலாம்தான். ஆனால் டாக்டருக்குப் படிப்பது என்பது பணக்காரச் செயல் அல்லவா? சொத்தை விற்று அல்லது கடனை வாங்கி அல்லது ஒரு முதலீடாக, இருக்கிற பணத்தைப் போட்டு எப்படியோ அடித்துப் பிடித்து மெடிக்கல் சீட் வாங்குவோரின் முதல் இலக்கு, போட்ட பணத்தை எப்படியாவது எடுத்துவிடுவது என்று இருப்பதை, நவீன தார்மிகம் பிழை என்று சொல்லாது. அஞ்சு பத்து என்றால்கூடப் பரவாயில்லை. இன்றைய விலைவாசியில் ஒரு மெடிக்கல் சீட்டின் காத்திர மதிப்பு ஐம்பது இலட்சங்களுக்குக் குறையாது என்று இந்த டாக்டர்களே சொல்லுவார்கள். ஆனாலும் பரவாயில்லை என்று நினைக்க எத்தனை உயர்ந்த கலை மனம் வேண்டும்!
எனக்குத்தான் நெஞ்செல்லாம் அடித்துக்கொள்ளும். அவர்களுக்கு அதெல்லாம் கிடையாது. ‘இப்ப பாத்திங்கன்னா சார், ஈரோயினியோட அப்பா, ஈரோவ பாத்து சவால் விட்டிருக்காரு. எண்ணி நாப்பத்தெட்டு மணி நேரத்துக்குள்ள எம்பொண்ணுக்கு நான் பாத்த மாப்ளைய கட்டி வெச்சிடறேன் அப்புடின்னு. ஈரோ ஜெயில்ல இருக்காரு. சோ, இந்த பாயிண்டுலேருந்து கதை ரெண்டு நாளுக்குள்ள முடியறதா இருக்கணும். இல்லிங்களா? நடுவுல சாங் வர்றது பொருத்தமா இருக்காதே சார். டென்சன் ஏத்தினாத்தானே சரியா இருக்கும்?’
ஒரு கதை விவாதத்தில் முதல் முதலில் எனக்கு அறிமுகமான மனிதர் இந்த லா பாயிண்டைப் பிடித்தபோது அவர் எத்தனை காலமாக உதவி இயக்குநராக இருக்கிறார் என்று கேட்டேன். எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, பயிற்சிக் காலத்தைக் கடந்த பிறகு, நேரடியாக உதவி இயக்குநராக வந்துவிட்டவர் என்று இயக்குநர் சொன்னார். அந்த நந்நாள் அன்றுதானாம். ‘நம்ம பக்கத்து வீட்லதான் சார் இருக்காரு. சினிமால ரொம்ப இண்ட்ரஸ்டு’ என்று இயக்குநர் சொன்னார். நியாயமாக, ‘எப்படிங்க’ என்றுதான் நான் கேட்டிருக்கவேண்டும். ஆனால் ‘ஏங்க?’ என்று கேட்டுவிட்டேன்.
‘சினிமாதான் சார் இந்த காலக்கட்டத்தோட வெளிப்பாட்டு முகம். வேற எந்த ஊடகத்துலயும் நம்மால சரியா பதிவு பண்ணமுடியாது’ என்றார். இந்த சொற்பிரயோகங்கள், அவர் உலக சினிமா ஆசாமியாக இருப்பாரோ என்னும் பீதியைக் கிளப்பியது. மறைத்துக்கொண்டு, ‘உங்க கவுன்சில்ல பதிவு பண்ணியிருக்கிங்களா?’ என்று கேட்டேன். அவருக்கு அந்தக் கேள்வி அவ்வளவாகப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இருப்பினும், ‘அதெல்லாம் ஆச்சு சார். எப்பம் வேணா ப்ராக்டிஸ் பண்ணிக்கிடலாம். இப்பம் விட்டா சினிமா கத்துக்க முடியாது சார்.’ என்று சொன்னார்.
அதற்குமேல் எனக்குப் பேச்சு வரவில்லை. அன்றைய கதை விவாதத்தில் நான் ஒரு மௌன சாட்சியாக மட்டுமே அமர்ந்திருந்தேன். என்னை காலை முதல் மாலை விவாதம் முடியும்வரை கவனித்துக்கொண்டே இருந்த அந்த Dr. உதவி இயக்குநர், ‘சீன் சரியா இல்லன்னாக்கூட பரவால்ல சார்! தோணறத சொல்லிருங்க. பேசிப் பேசித்தான் சீன் பண்ணமுடியும். ஒரு ரைட்டர், நீங்க பேசவே மாட்டேங்கறிங்களே, நல்லா கதை எழுதறிங்கன்னுதானே டைரக்டர் கூப்ட்டிருக்காரு?’ என்றார். பகீரென்றது எனக்கு. கார்ப்பரேட் சாமியாராக இல்லாவிட்டாலும் ஒரு கார்ப்பரேஷன் சாமியாராகவாவது ஆகிவிடலாம் என்று தோன்றியது.
இன்னொரு சமயம் வேறொரு இயக்குநர் வீட்டுக்கு வந்தார். என் கதையொன்றைத் திரைக்கதையாக்க விரும்பினார். ‘ஒரு நாலுநாள் டிஸ்கஷனுக்கு வந்திங்கன்னா போதும் சார். ஸ்கெலடின் ரெடி பண்ணிரலாம்’ என்றார். அவரது உதவி இயக்குநர்களாக இருந்தவர்களுள் ஒரு பெண்ணும் அடக்கம். நல்ல நாகரிக நாரீமணி. ஜீன்ஸ் பேண்ட்டும் டி ஷர்ட்டும் பின்னல் காணாத கூந்தலும் சூயிங்கம் அசைபோடும் வாயும் இரண்டு மொபைல் போன்களும் அடிக்கடி ‘எக்ஸ்க்யூஸ் மீ’க்களுமாக இருந்தார். விஷுவல் அல்லது மாஸ் கம்யூனிகேஷன் படித்திருப்பார், அல்லது புனா திரைப்படக் கல்லூரியில் பயின்றிருப்பார் என்றுதான் முதலில் நினைத்தேன்.
இல்லை. அவர் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்தவர் என்று சொன்னபோது உண்மையில் வெலவெலத்துப் போய்விட்டேன். அப்படியா? அப்படியா? என்று இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு, ‘ஆமாம் சார். படிப்பு முடித்து பாம்பே வந்தேன். ஹிந்தி சினிமாவில் இரண்டு வருஷம் அசிஸ்டெண்டாக இருந்தேன். பிறகு இங்கே வந்து ஒரு படம் முடித்தேன். அந்த இயக்குநர் டேஸ்ட் எனக்கு ஒத்து வரலை. இவரோட இந்தப் படத்துக்கு ஒர்க் பண்ண வந்துட்டேன்’ என்று சொன்னார்.
ஒருவேளை மருத்துவப் படிப்பில் சினிமா என்பது துணைப்பாடமாக போதிக்கப்படுகிறதோ என்று ஒரு சந்தேகம் வந்தது. ஏனென்றால் இந்த நாரீமணியைச் சந்திப்பதற்கும், இயக்குநரின் பக்கத்துவீட்டு எம்பிபிஎஸ் உதவி இயக்குநரைச் சந்தித்ததற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் வேறு மூன்று சினிமா டாக்டர்களைச் சந்தித்துவிட்டிருந்தேன். ஒருத்தர் கலை இயக்குநர் ஒருவரின் உதவியாளராக இருக்கிறார். கையில் சுருட்டிய சார்ட்டும் தலையில் திருப்பிப் போட்ட தொப்பியுமாக ஏவிஎம்மில் அவரை நான் பார்த்த கோலத்தில் அவரைப் படிக்க வைத்தவர்கள் பார்த்திருந்தால், விக்கு விக்கென்று விக்கி நெக்குருகி நின்றிருப்பார்கள். அவர் பரவாயில்லை. இரவு ஏழு மணி சுமாருக்கு க்ளினிக்குக்குப் போய்விடுவேன் என்று சொன்னார். இந்த நாரீமணி, கல்லூரி நாள்களுக்குப் பிறகு ஸ்டெதஸ்கோப்பைத் தொட்டதேயில்லை என்றபோது வியக்கத்தான் முடிந்தது.
மேலும் ஒரு டாக்டரை ஒரு தொலைக்காட்சி சானலில் சந்திக்க நேர்ந்தது. இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் டாக்டர் அவர். கோவையில் மருத்துவம் படித்துவிட்டு, திருநெல்வேலிக்குப் போய் சுந்தரனாரிடம் சரணாகதி அடைந்து ஊடகவியல் படித்திருக்கிறார். அதன்பின் ஓரிரு உப்புமா பத்திரிகைகளில் கடைசி வரித் திருப்பத்துடன் ஒரு பக்கக் கதைகளெல்லாம் எழுதிவிட்டு அந்த சானலில் தயாரிப்பாளராகச் சேர்ந்தவர். அதுகூடச் சில மாதங்கள்தாம். வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஏன் சார் என்று கேட்டால், ‘என் நோக்கம் வேற சார். டிவி சீரியல் டைரக்டர் ஆறதுதான் என் ஆம்பிஷன்’ என்று சொன்னார். அடக்கடவுளே, அதை ஆப்பரேஷன் தியேட்டரிலேயே செய்துகொண்டிருக்கலாமே என்றேன். அவருக்குப் புரியவில்லை அல்லது புரிந்துகொள்ள அவர் விரும்பவில்லை.
மேற்படி உதவி இயக்குநர் பெண்மணி விஷயத்துக்கு வருகிறேன். கதை விவாதத்துக்கு நாங்கள் ஒரு மலை வாசஸ்தலத்துக்குப் போனபோது அவரும் இயக்குநருடன்கூட வந்தார். ‘இன்னும் ஆறே மாசம் சார்! நீங்க வேணா பாத்துக்கிட்டே இருங்க’ என்று அடிக்கடி சொல்லுவார். அவர் தாம் சாதிக்கவிருப்பதைத்தான் அந்த ‘ஆறு மாதக் கெடு’வாகச் சொன்னார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆறு மாதங்களில் அவர் மீண்டும் டாக்டராகிவிடுவார் என்று ஏனோ எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.
கடைசியில் நடந்தது ஒரு சினிமாவின் திடுக்கிடும் திருப்பத்துக்கு நிகரானது. சொன்னதுபோல் ஆறு மாதங்களில் அவர் சாதித்துக் காட்டிவிட்டார். இயக்குநராக அல்ல. இயக்குநரை இயக்குபவராக.
இன்னும் ஒரு டாக்டரைப் பற்றியும் சொன்னால்தான் இது தீரும். இவர், சென்னையில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் பணியாற்றுபவர். காது மூக்கு தொண்டை அறுவைச் சிகிச்சையில் விற்பன்னர். பணி நேரம் போக எஞ்சிய நேரத்தைத் தனது வீட்டு மாடியிலேயே வைத்திருக்கும் க்ளினிக்கில் செலவழிப்பவர். கொஞ்சம் நெருங்கிப் பழகிவிட்டால் தமாஷாகப் பேசுவார். ‘நான் பாட்ஷா ரஜினி மாதிரி. எம்பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு..’ என்று சிரிப்பார்.
இவரையும் நான் கதை விவாதங்களில் அடிக்கடி சந்திக்கிறேன். சினிமாவில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற அடங்காத அவா கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்னவாக சாதிக்கப்போகிறார்? அதைத் தெரிந்துகொள்ளத்தான் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனென்றால், இந்த டாக்டர் விவாதங்களுக்கு வருவார். ஷூட்டிங் என்றால் க்ளாப் போர்ட் அடிப்பார். சட்டென்று வக்கீலாக, போலீசாக, பிச்சைக்காரனாக கெட்டப் மாற்றி சிறு சிறு வேடங்களில் நடிக்கவும் செய்வார். ஒரு படம் ப்ரொட்யூஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றும் அவ்வப்போது திகில் கிளப்புவார். பல இயக்குநர்கள் ஆஸ்பத்திரி காட்சிகளில் சந்தேகம் ஏற்பட்டால் உடனே இவருக்குத்தான் போன் செய்வார்கள். ‘நோ நோ.. பிறந்த குழந்தை உயிரோடு இருக்குமா இருக்காதான்னு இப்ப சொல்ல முடியாது; இருவத்தி நாலு மணி நேரம் கழிச்சித்தான் சொல்லமுடியும்னு எல்லாம் டயலாக் வெக்காதிங்க சார். ரொம்ப அவசியம்னா, மூணு மணிநேரம் சொல்லுங்க. இதுக்கெல்லாம் டாக்டர்ஸ் பொதுவா கெடு வெக்கறதில்லை’ என்று லாஜிக் மீறாமல் அபத்தங்களைப் படம்பிடிக்கக் கற்றுத்தருவார். சுவாரசியமான மனிதர்.
எனக்கு நெருக்கமான எழுத்தாள நண்பர் ஒருவர் ஒரு சமயம் இத்தகு டாக்டர் கலைஞர் ஒருவரிடம் [ தப்பர்த்தம் வருமானால் கலைஞர் டாக்டர் என மாற்றி வாசிக்கவும்.] மானசீகமாக உருகி ஒரு கோரிக்கை வைத்தார்.
‘மனசாட்சியோட பதில் சொல்லுங்க டாக்டர்! உங்களை நாங்க டிஸ்கஷனுக்கு அனுமதிக்கறோம். ஷூட்டிங்ல அனுமதிக்கறோம். உங்க கருத்துகளுக்கு மதிப்பு குடுக்கறோம். நீங்க என்னிக்காவது எங்களை மதிச்சி இப்படி ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள கத்திய குடுத்து அனுப்பியிருக்கிங்களா?’
‘அதுக்கென்ன? வாங்களேன். ஒரு ஆப்பரேஷன பக்கத்துல இருந்து பாத்து கத்துக்கங்களேன்’ என்றார் அந்த டாக்டர்.
தீர்ந்தது என் சந்தேகம். அவர் நிச்சயமாக சினிமா டாக்டர்தான்!
[நன்றி: புதிய தலைமுறை]
டாக்குடர்கள் பலவிதம்
“கார்ப்பரேட் சாமியாராக இல்லாவிட்டாலும் ஒரு கார்ப்பரேஷன் சாமியாராகவாவது ஆகிவிடலாம் என்று தோன்றியது.” – Suuuupeeer
மருத்துவம் படித்தவர்களுக்கு கலை தாகம் எடுத்ததைப் படித்த பின்பு, எழுதவதற்கு உங்களிடம் பாடம் படிக்கவேண்டும் என்ற என் எண்ணம் உறுதியாகி விட்டது. சீக்கிரம் வந்து விடுகிறேன்.
//கையில் சுருட்டிய சார்ட்டும் தலையில் திருப்பிப் போட்ட தொப்பியுமாக ஏவிஎம்மில் அவரை நான் பார்த்த கோலத்தில் அவரைப் படிக்க வைத்தவர்கள் பார்த்திருந்தால், விக்கு விக்கென்று விக்கி நெக்குருகி நின்றிருப்பார்கள். அவர் பரவாயில்லை. இரவு ஏழு மணி சுமாருக்கு க்ளினிக்குக்குப் போய்விடுவேன் என்று சொன்னார். இந்த நாரீமணி, கல்லூரி நாள்களுக்குப் பிறகு ஸ்டெதஸ்கோப்பைத் தொட்டதேயில்லை என்றபோது வியக்கத்தான் முடிந்தது.// சிரிப்ப அடக்க முடியல தெய்வமே !!
இனிமே நீலக் காகத்தைப் பத்திக் கேட்டா என்ன என்னான்னு கேளுங்க!..
mgr, started writing it again. will post from next week onwards.
விரைவில் உங்களுக்கு சினிமாவில் ’டாக்டர்’ வேஷமும், பத்திரிகையுலக சேவைக்காக ’டாக்டர்’ பட்டமும் கிடைப்பதாக!
//என் நோக்கம் வேற சார். டிவி சீரியல் டைரக்டர் ஆறதுதான் என் ஆம்பிஷன்’ என்று சொன்னார். அடக்கடவுளே, அதை ஆப்பரேஷன் தியேட்டரிலேயே செய்துகொண்டிருக்கலாமே என்றேன்//
//எனக்கு நெருக்கமான எழுத்தாள நண்பர் ஒருவர் ஒரு சமயம் இத்தகு டாக்டர் கலைஞர் ஒருவரிடம் [ தப்பர்த்தம் வருமானால் கலைஞர் டாக்டர் என மாற்றி வாசிக்கவும்.] மானசீகமாக உருகி ஒரு கோரிக்கை வைத்தார்.//
கலக்கிட்டீங்க தல. உங்கள் எழுத்து உருண்டு, புரண்டு சிரிக்க வைக்கிறது. அலுவலகத் தோழன் ஒரு மாதிரி பார்க்கிறான். அவனுக்கு உங்கள் எழுத்தை அறிமுகப்படுத்த பல முறை முயன்று தோற்றேன்.
பவர் ஸ்டார் டாக்டர் லத்திகா சீனிவாசனை இன்னும் நீங்கள் சந்திக்க வில்லையா?
இதுதாண்டா போலிஸ் டாக்டர் ராஜசேகர்
அதனாலதான் சில டாக்டர்கள் ஆப்பரேஷன் தியேட்டர்குள்ள இருந்து வரும் போது மசாலா வாசனை அடிக்கிறதா.
Fantastic. You are rocking again and again.
Para,
I got a sense of watching comedy movie after reading this. You have got a unique style of humor sense and able to get it on writing
ஜீன்ஸ் படத்தின் எக்சிக்யூடிவ் ப்ரொட்யூசராக இருந்த டாக்டர் முரளி மனோகர் ஒரு ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்ட். அடுத்து ரஜினிகாந்த நடிக்கவிருக்கும் ‘ராணா’வுக்கும் அன்னாரே ஈ.பி.
Genes படத்துக்கு எப்படிங்க ‘Jeans’னு தலைப்பு போடறீங்க என்று நான் அவரிடம் வாதாடி இருக்கிறேன், மாற்றச்சொல்லி மன்றாடி இருக்கிறேன்.
இயக்குனர் சங்கர் பக்கம் கைகாட்டி ஒரு புன்சிரிப்புடன் வேறு டாபிக் மாற்றிவிடுவார், பிழைக்கத்தெரிந்த டாக்டர்!
//mgr, started writing it again. will post from next week onwards//
MGR வந்து கேட்டா தான் நீ.கா பற்றி reply போடறீங்க !!!! ஹ்ம்ம்ம் !!!!
எப்படியோ நாங்க விரும்பும் காகம் பறந்தால் சரி !!!!
இந்த போஸ்ட் கொடூர காமடியா இருக்கு சார் !!!!
எப்படி இத்தனை ரசமாய் எழுதமுடிகிறது உங்களால்? உரக்க சிரிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு வரியும் சிறு புன்னகையாவது வரவழைத்துவிடுகின்றது. படித்து முடித்த பின்பும் வெகுநேரத்திற்கு மனதிற்குள் அந்த புன்னகை நீடிக்கிறது. இந்த எழுத்து ஒரு வரம் ஐயா.
வாவ்! விழுந்து விழுந்து சிரித்தேன். என் உறவுப் பையன் ஒருவன் அழகப்பா கல்லூரியில் கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு சினிமாவில்தான் சேருவேன் என்று போயிருக்கிறான். அவனுக்கு இந்த கட்டுரையினை ப்ரிண்ட் எடுத்து அனுப்புகிறேன் 😉
sir , in case u didn know , i am also a once mbbs student , but quit in first year to do visual communication , and i was the other assistant with u on that story discussion over the hill, the number seems on the rise and am happy that i am not alone in this 🙂
கலைத் துறையில் சில நடிகர் மருத்துவர்களும் இருக்காக சார்…….
மருத்துவ தொழிலை விட்டுவிட்டு ‘ஐயா’ ஏன் அரசியலுக்கு வந்தார், என்று நீங்கள் கட்டுரை எழுதினால் தான் எனக்கு சிரிப்பு வரும்.ஆனால் ‘நடிகர்(கை)கள் அரசியலுக்கு வரக்கூடாது’என்ற ‘அவரின்’ கருத்தை போல பின்னூட்டம் அமைத்திருப்பது வியப்பளிக்கிறது..! உங்கள் கருத்தில் எனக்கு மாற்று இருந்தாலும்,உங்கள் வரிகளை ரசிக்காமல் இருக்க முடிய வில்லை..! பாமரனும் ரசிக கூடிய வகையில் உள்ளதே உங்கள் வெற்றியின் ரசசியம். அருமை.
நன்றி..நன்றி…அனந்தகோடி நமஸ்காரம்..!
வெள்ளை கோட்டு போட்டு ஒரு ஸ்டெத்தை மாட்டிகிட்டு ஒரு ஆஸ்பத்திரிகுள்ள நடந்தீங்கன்னா உங்களையும் எல்லாம் டாக்டரைய்யான்னு தான் சொல்லுவாங்க (என்னவோ என் மனசுக்கு தோணுது சொன்னேன்)