நூலகத்திற்குள் நுழைந்த கோவிந்தசாமியின் கண்களில் பட்டுவிடக்கூடாது என சாகரிகா பதறுகிறாள். அதற்கு வழி சொல்லும் ஷில்பா நூலக அடுக்கில் புத்தகம் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடி ஒன்றின் முகத்தை திருகி சாகரிகாவுக்கு பொருத்தி விட்டு அவளின் முகத்தை தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள்.
கோவிந்தசாமியை அடையாளம் கண்டு கொண்ட நூலகர் மூலம் வெண்பலகையில் தன் சல்லாப வீடியோ வெளியானதையும், நூலகத்திற்கு சாகரிகா வந்திருப்பதையும், அவளும் அந்த வீடியோவை பார்த்து விட்டதையும் அறிந்து கொள்கிறான்.காரியம் கெட்டதே என பதறிப்போகிறான்.
நூலகத்தில் நின்றிருந்த ஷில்பாவிடம் சாகரிகாவை பற்றி அவன் விசாரிக்க அவளோ அவள் போய் விட்டதாய் பொய் சொல்கிறாள். கரடி முகத்தோடு நடப்பவைகளைப் பார்த்த படி சாகரிகா அங்கிருந்து வெளியேறுகிறாள். ”கண்ணா லட்டு திங்க ஆசையா” என சந்தானம் ஸ்டைலில் தன்னை நக்கலடிக்கும் நரகேசரியிடம் மட்டித்தனத்தால் அவவப்போது கோவிந்தசாமி வாங்கி கட்டிக் கொள்கிறான். ஆனால். எதுவும் அவனை பாதிக்கவில்லை!
ஷில்பாவிடம் உதவி கேட்டு கிடைக்காததால் அழுது புலம்பி நின்ற கோவிந்தசாமியிடம் வந்த கரடி தன் முகத்தை உன் மனைவி வாங்கிப் போய்விட்டாள். அதை நான் திரும்ப வாங்கி வர அங்கு புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் எருதின் முகத்தை திருகித் தரக் கேட்கிறது. நமக்கே தலை சுற்றுகிறது. கோவிந்தசாமிக்கு எப்படி இருந்திருக்கும்? பாவம்.
கரடிக்கு கோவிந்தசாமி உதவினானா? உதவி செய்வதாய் கூறி கோவிந்தசாமியோடு வந்த நரகேசரி அவனுக்கு எந்த வகையில் உதவுவான்? காத்திருப்போம்.