திரைப்படம்

தசாவதாரம் குருவி-2

உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ ஒரு நாசகார ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். அதில் விஜய்க்கு இம்சையளிக்க த்ரிஷா. இதில் கமலுக்கு இம்சையளிக்க அசின். அதில் விஜய்க்கு வில்லன் கூவத்தில் சமாதி கட்டப்பார்ப்பார். இதில் கமலுக்கு வில்லன் சமுத்திரத்தில். கூவத்தில் மூழ்கிய விஜய், அதே காட்சியில் வீறுகொண்டு எழுந்து மேலே வந்துவிடுவது ஹீரோயிசம். சமுத்திரத்தில் மூழ்கிய கமல் பன்னிரண்டு நூற்றாண்டுகள் கழித்து மேலும் ஒன்பது அவதாரங்களுடன் எழுந்துவருவது கமலிசம்.

விதவிதமான கெட்டப்பில் தோன்றி பிரமிப்பூட்டுவது என்று முடிவு செய்ததைப் பிழைசொல்லமுடியாது. துரதிருஷ்டவசமாக எல்லா கெட்டப்புகளும் ஒரே பாக்கெட் மைதாமாவைப் பிசைந்து பூசியதுபோல் இருக்கிறது. பாட்டி கமல், எட்டடி முஸ்லிம் இளைஞன் கமல், ஜார்ஜ் புஷ் கமல் தலித் இளைஞன் கமல் நான்குமே சுதந்தர தின விழாவில் பள்ளிக்குழந்தைகள் போடும் மாறுவேஷங்கள் போல் உள்ளன. மனத்தில் நிற்கும் ஒரே கேரக்டர், அந்த தெலுங்கு போலீஸ் அதிகாரியாக வருகிற பல்ராம் நாயுடு கமல். நடிகர் ராஜேஷை மாடலாக வைத்துச் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. பொருந்துகிறது. சிறப்பாகவும் இருக்கிறது. பேச்சு, மேனரிசம், குரல் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ் அனைத்தும் கவர்கின்றன. வேஷம் கட்டாமல் நிஜ முகத்துடன் வரும் கமல் முகத்தில் வயதான சாயல் நன்றாகவே தெரிகிறது. ‘அழகிய சிங்கர் தெரியுமா?’ என்ற கேள்விக்கு மடோனா என்று பதில் சொல்வதில் [சொல்வது பல்ராம் நாயுடுவாக இருப்பினும்] இது மேலும் உறுதிப்படுகிறது. மடோனாவுக்குப் பிறகு வேறு அழகிய பாடகிகளேவா வரவில்லை? அட ஒரு ஷ்ரேயா கோஷலைச் சொல்லவேண்டாம், ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கூடவா தென்படவில்லை? தலைமுறை இடைவெளி;-)

கதை என்று படத்தில் பிரமாதமாக ஒன்றும் கிடையாது. அந்த நாசகார உயிர்க்கொல்லி ஆயுதம் கெட்டவர்கள் கையில் போய்விடக்கூடாது, அழித்துவிடவேண்டும் என்பது நல்ல விஞ்ஞானி கமலின் நோக்கம். கமலிடமிருந்து அதைப் பிடுங்குவதற்காகக் கெட்ட விஞ்ஞானிகள் சமூகம் சி.ஐ.ஏ. வில்லன் கமலை அனுப்புகிறது. சைட் டிஷ்ஷாக மொழிபெயர்ப்பாளர் மல்லிகா ஷெராவத். திறந்த புத்தகமாக வந்து, இருந்து, ஆடிப்பாடி, கொன்று, இறந்துபோகிறார். வில்லன் கமலை ஜப்பானிய மார்ஷியல் கலை வல்லுநர் கமல் [இறுதிச் சண்டைக் காட்சி கவிதை.] புரட்டியெடுக்க, நல்ல விஞ்ஞானி கமல் இறுதியில் அந்த உயிர்க்கொல்லி ஆயுதம் குறித்தும் அதற்காகப் பட்ட பாடுகள் குறித்தும் சுனாமியால் அது சுபமானது பற்றியும் அதே சுனாமி பன்னிரண்டாம் நூற்றாண்டில் கடலுக்குள் போடப்பட்ட ரங்கநாதர் சிலையையும் மீட்டுக்கொண்டுவந்தது பற்றியும் சொற்பொழிவாற்றுகிறார்.

உயிர்க்கொல்லி ஆயுதம் பரவாதிருக்க NaCl வேண்டும் என்பதற்காக டிசம்பர் 2004 சுனாமியைக் கதைக்குள் கொண்டுவந்திருப்பது புத்திசாலித்தனம். சுனாமி தாக்கிய இடங்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலிருந்தபடிக்குச் சுற்றிப்பார்க்கும் செய்திப் படக் காட்சியைச் சொருகியிருப்பது அதைவிட புத்திசாலித்தனம். ஆனால் அதற்கு அடுத்தபடியாக, நடந்ததை விஞ்ஞானி கமல் விவரிக்கும் காட்சியில் முதலமைச்சராக கருணாநிதி!

வழக்கு விசாரணைகள் என்று சிலகாலம் ஓடியிருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமெனினும் டைம் லாப்ஸுக்காக ஒரு காட்சி கூடப் படத்தில் இல்லை. குறைந்தது ‘இத்தனை மாதங்களுக்குப் பிறகு’ என்று ஒரு வரி கூட.

B&C ரசிகர்கள் குழம்புவதற்குப் படத்தில் உள்ள அநேக சாத்தியங்களில் இதுவும் ஒன்று.

படத்தின் அடிநாதமான அந்த உயிரியல் ஆயுதம் குறித்துச் சட்டென்று புரிந்துகொள்ள முடியாது. அதைப் பல்லால் கடித்து குரங்கு செத்துப்போகும் தொடக்கக் காட்சிகள் அநேகமாக இன்னும் சில நாள்களில் படத்தின் நீளம் கருதி வெட்டப்படக்கூடும். அப்போது இன்னும் குழப்பும். தவிரவும் முக்கிய உரையாடல்கள் அவசியம் கருதி ஆங்கிலத்தில் இருப்பதும் தமிழ் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய விஷயம். இத்தனைக்கும் காட்சிக்குக் காட்சி படத்தில் சப் டைட்டில் போடுகிறார்கள்.

இந்த ஆங்கிலம் பாதி தமிழ் மீதி படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரப் படைப்பு ஜார்ஜ் புஷ்ஷினுடையது. புஷ்ஷின் பாடி லேங்குவேஜ், அரைவேக்காட்டு புத்தி, அபத்தப் பேச்சு ஸ்டைல் அனைத்தையும் மிகத் தத்ரூபமாகக் கொண்டுவந்திருக்கிறார் கமல். ஒரு காட்சியில் அந்த உயிர்க்கொல்லி ஆயுதம் பரவினால் அது தாக்காதிருக்க எவ்வளவு NaCl வேண்டியிருக்கும் என்பது பற்றிப் பேச்சுவர, புஷ்ஷின் யோசனை: ‘பேசாமல் அணுகுண்டு போட்டு அழித்துவிடலாமா?’

ஆனால் புஷ் வேஷம் நன்றாக இல்லை. குழந்தைகள் ஸ்பைடர்மேன் முகமூடி போட்டுக்கொண்டு திரிவதுபோல் இருக்கிறது.

சைவப் பேட்டையான சிதம்பரத்தில் நடக்கிற கதையில் மருந்துக்குக்கூட தீட்சிதர்களைக் காட்டாதிருப்பது, அதே சமயம் அது ஒரு வைஷ்ணவர்கள் கோட்டை என்பது போல் காட்டியிருப்பது, அழகிய சிங்கர் மடத்தைக் கொண்டுபோய் அங்கே வைத்து அசினைவிட்டு ‘முகுந்தா முகுந்தா’ என்று பாடவைத்திருப்பது, அவ்தார் சிங் என்ற பாடகர் கமலும் எட்டடி உயர முஸ்லிம் இளைஞர் கமலும் எதற்காகப் படத்தில் வந்துபோனார்கள் என்று இறுதிவரை தெரியாதிருப்பது, நாகேஷ் போன்ற உன்னதமான நடிகர்கள் ஒரு காட்சியில் வந்து போனது எதற்கு என்று விளங்காதிருப்பது, தொண்டையில் குண்டடி பட்டால் அங்கிருக்கும் கேன்சர் கட்டி இல்லாமலாகிவிடும் என்று சொல்லியிருப்பது, ஜெயப்பிரதா போன்ற பாட்டிகளை டான்ஸ் ஆடவைத்து இம்சித்திருப்பது – என்று படத்தின் அபத்தங்களைப் பட்டியலிட்டால் சர்வர் தாங்காது.

ஆனாலும் மூன்றேகால் மணிநேரப் படத்தை அசையாமல் உட்கார்ந்து பார்க்க முடிவதற்கு இரண்டு பேர் காரணம். ரவிக்குமாரும் தணிகாசலமும். இயக்கமும் எடிட்டிங்கும் ஒரு சரியான வர்த்தக மசாலாவுக்குத் தேவையான அனைத்தையும் அங்குலம் குறையாமல் அளித்திருக்கின்றன. மற்றபடி ஊரே போற்றும் இந்தப் படத்தின் கேமரா பணி எனக்குத் திருப்தியளிக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியில் நிறைய ஒட்டுவேலைகள் நடந்திருப்பதாகப் பலகாட்சிகளில் தோன்றியது. சுனாமி காட்சியின் பிரம்மாண்டத்தை, ஒரு சில இடங்கள் செட் என்று புலப்பட்டுவிடுவது தகுதி குறைத்துவிடுகிறது. தொடக்கத்தில் அமெரிக்காவில் நடப்பதுபோல் காட்டப்படும் ஒரு சில சேஸிங் காட்சிகளின் ஒளிப்பதிவுத் தரம், பின்னால் வரும் இந்தியக் காட்சிகளில் அடியோடு இல்லாமல் போவது வேறு சில சந்தேகங்களை எழுப்புகிறது.

டைட்டானிக் போன்ற படங்களில் கடல் நீரைக் கதாபாத்திரமாகப் பார்த்துவிட்டபிறகு இந்த சுனாமி சாதாரணமாகவே இருக்கிறது.

பாடல்களைவிட பின்னணி இசை நன்றாக இருக்கிறது [தேவிஸ்ரீ ப்ரசாத்]. ஹிட் பாடலான ‘கல்லை மட்டும் கண்டால்’ ஒரு மலையாளப் பாடலின் அப்பட்டமான காப்பி என்று தற்செயலாகத் தெரியவர, அதன்மீதிருந்த மதிப்பும் போனது.

பலவேஷம் போடுவது என்பது கிட்டத்தட்ட ஒரு உயிரியல் ஆயுதமாகவே கமலைத் தாக்கியிருப்பது நன்றாகத் தெரிகிறது. அவருக்கு உடனடித் தேவை, ஒரு NaCl.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி