பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைப் போலவே வந்துகொண்டிருக்கிறது.
ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ), தான் முன்பு பெற்றிருந்த இடங்களில் மூன்றில் இரு பங்கினைக் காட்டிலும் அதிகம் இழந்துள்ளது. முஷரஃப் சந்தேகத்துக்கு இடமின்றி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான்.
அதே சமயம் மறைந்த பேனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சரி, நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)கும் சரி. அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. எனவே கூட்டணி பேரங்கள் தொடங்கும் நேரம் இது.
முஷரஃபின் வீழ்ச்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும் பேனசிருக்கான அனுதாப அலை என்று தனியே எதுவும் அங்கு இல்லை என்பது வியப்பு கலந்த நிம்மதியளிக்கிறது. ஒருவர் அகாலமாக இறந்துவிடுவதனாலேயே அவர் புனிதராகிவிட மாட்டார். பாகிஸ்தான் சரித்திரத்தில் நிறையவும் நிறைவாகவும் ஊழல் புரிந்தவர்கள் யாரும் அவ்விஷயத்தில் பேனசிரை நெருங்க முடிந்ததில்லை. அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரிக்கு பத்து பர்சண்ட் சர்தாரி என்றே அங்கு பெயர்.
தவிரவும் பேனசிருக்குப் பிறகான பாக். மக்கள் கட்சியில் குறிப்பிடும்படியான நட்சத்திரம் யாருமில்லை. என்னதான் ஒண்ணரை ரூபா ஸ்டாம்பு பேப்பரில் அவர் தனக்குப் பின் தன் மகன் என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றிருந்தாலும் ஹார்லிக்ஸ் குழந்தைகளை ஆளவைத்து (அல்லது அழவைத்து) அழகுபார்க்க மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது.
தி.மு.கவும் அ.தி.மு.கவும் கூட்டணி கொள்வது தமிழகத்தில் வேண்டுமானால் சாத்தியமில்லாமல் இருக்கலாம். பாகிஸ்தானில் பிபிபியும் பி.எம்.எல். என்னும் கூட்டு வைக்க இயலும். அடிதடிகள், வெட்டு குத்துகள், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், ஊழல் அனைத்தும் இருக்கவே போகிறது.
அதனாலென்ன? இப்போதைக்கு முஷரஃப் போகிறார். போதும். பட்டாசு வெடித்தால் தப்பில்லை.