அரசியல் திரைப்படம்

சுப்ரமணியபுரம்

படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம்.  கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம்.

உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய அதிர்ச்சியையும் நிறைய அலுப்பையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது. எத்தனை பணம் என்பதில் அதிர்ச்சி. எப்போதும் பார்ப்பதுதானே என்பதில் அலுப்பு.

இது தவிர்க்க முடியாதது என்று புத்தி சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் அருவருப்புணர்வு இல்லாமல் ஏற்பதற்கு இன்னும் பக்குவப்படவில்லை. இருபத்தைந்து கோடியில் தொடங்கி நூறு கோடி ரூபாய் வரை எம்.பிக்கள் விலை பேசப்பட்டு, நாடாளுமன்றத்தில் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொட்டிக்காட்டியது  வரை நீண்ட அதிர்ச்சி. நடுநிலைமை காத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தே வெளியேற்றியது மனம் கனக்க வைத்த க்ளைமாக்ஸ் காட்சி.

இனி ஒன்றுமில்லை. ஏற்கெனவே தருமம் மறுபடியும் வெல்லும் என்று பத்தடிக்குப் பத்தடி போஸ்டர் அடித்து ஒட்டத்தொடங்கிவிட்ட காங்கிரசின் அமைச்சரவையில் சிபு சோரன்களும் பப்பு யாதவ்களும் அமைச்சராவார்கள். எதற்காக ஒன்று சேர்ந்தோம் என்று சேர்ந்ததிலிருந்தே குழம்பிக்கொண்டிருக்கும் பா.ஜ.கவும் கம்யூனிஸ்டுகளும் தனித்தனியே விலைவாசி உயர்வையும் பணவீக்கத்தையும் முன்வைத்து அடுத்த அரசியலை ஆரம்பிப்பார்கள். மாயாவதியின் மூன்றாவது அணிக் கனவு தொடரும். ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டிலிருந்தும் கருணாநிதி திரைப்பட ப்ரீவ்யூ தியேட்டர்களில் இருந்தும் இவற்றைக் கண்டு களித்து கருத்து சொல்வார்கள்.

கொட்டப்பட்ட பணம்?

அதுதான் கவலைக்குரியது. இத்தனை கோடிகள் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது என்று கேட்பது அபத்தம். இம்மாதிரியான நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை சார்ந்த வாக்கெடுப்பு வைபவங்கள் எப்போதெல்லாம் நடந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டே இருக்கின்றன. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் சமயம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பிக்களுக்கு சுமார் இரண்டு கோடி வரை பேரம் பேசப்பட்ட விவகாரம் வெடித்தது நினைவிருக்கலாம். காலம் மாறவில்லையா? இரண்டு கோடி இருபத்தைந்து கோடியானது பெரிய விஷயமில்லை.

ஆனால் அப்போது அந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றபோது கிடைத்த தீர்ப்பை இப்போது நினைத்துப் பார்க்கவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் நடக்கிற விஷயங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து தீர்ப்பு பெற இயலாது என்று சுப்ரீம் கோர்ட் அப்போது கருத்து சொன்னது. நாடாளுமன்ற விவகாரக் குழு அல்லது சபாநாயகர் அல்லது ஒழுங்குக்குழுவின் முன் பரிசீலனைக்கு வைத்து அவர்களது வழிகாட்டுதலின்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று சொன்னார்கள்.

அப்படியேதும் அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நினைவில்லை. அதாவது குதிரை பேரம் என்பது உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டு ஏறும் அளவுக்குத் தீவிரமானதில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இரண்டு கோடியானால் என்ன, நூறு கோடியானால் என்ன? ஜனநாயகம் அனுமதிக்கிறது. நீதிமன்றம் அனுமதிக்கிறது. எனவே, பாரம்பரியம் பேசும் கட்சிகள் இதனைத் தழைக்கச் செய்கின்றன.

வழித்துக்கொண்டு சிரிக்கத் தோன்றினாலும் இதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றக்கூடிய ஆதிமூலம் போலிருக்கிறது. சுப்ரமணியபுரத்துக் கதாநாயகி ஸ்வாதி, அரசியல்வாதி குடும்பத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தினால் தனது காதலனையே காட்டிக்கொடுத்துவிட்டுக் கதறியழவில்லையா? அந்த மாதிரி.

ஒரு கணம் யோசித்துப் பார்த்தால் சுப்ரமணியபுரம் படம் முழுவதுமே நடந்து முடிந்த வாக்கெடுப்பு வைபவத்தைக் குறிப்பால் சுட்டுவது போல் இருக்கிறது. பதவிக்கு அலையும் அரசியல்வாதி. விடலைகளை வளைத்துப் போட்டு வேலையை முடிக்கப் பார்க்கிற அந்தக் குணம். அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத் தயங்காத மனோபாவம். காரியம் கைகூடுவதற்காக மகளின் காலில் கூட விழத்தயங்காத அரசியல் பிழைப்புவாதம். காதலனையே காட்டிக்கொடுத்து, காதலைக் கொன்று புதைத்து, அரசியல் தழைக்க வைக்கும் அழகிய காதலி.

இடையே அந்தப் பாட்டு? ஆ.. அத்தனை இனித்ததே? புன்னகை கொப்பளிக்கவைத்ததே? நெஞ்சுருகச் செய்ததே?

அடப்போங்கய்யா, லாலு பிரசாத் யாதவின் பேச்சு.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி