[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத் தவிர்த்துவிட்டு, அவனது கட்டுரையை இங்கே பிரசுரிக்கிறேன்.]
இரண்டாம் உலகப் போரை பின்னணியாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அருமையான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்தப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நெஞ்சு விம்மும். தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் போன்ற முக்கியமான சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை வைத்து எப்படியெல்லாம் படம் எடுக்கலாம். சே குவேரா எதனால் மனமாற்றம் அடைந்தார் என்று அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ‘மோட்டோர் சைக்கிள் டைரீஸ்’ என்றொரு அற்புதமான ஸ்பானிஷ் படம் ஒன்று உண்டு. லத்தீன் அமெரிக்கக் கவிஞரான பாப்லோ நெரூதாவை முக்கியமான கதாபாத்திரமாகக் கொண்ட ‘போஸ்ட்மேன்’ என்றொரு முக்கியமான இத்தாலியப் படமும் இதே குணத்தைக் கொண்டதுதான்.
ஆனால் ஃபேண்டஸியில் சிக்கிக்கொண்ட தமிழ் சினிமாவுக்கு அவையெல்லாம் முக்கியமில்லை. தங்களுக்கென்று ஒரு ஜிகினா உலகைப் படைத்துகொண்டு அதைப் பார்க்கும்படி நம்மையும் பழக்கப்படுத்திவிட்டார்கள். இதையும் தாண்டி பாரதிராஜாவின் என்னுயிர்த்தோழன், பாலாஜி சக்திவேலின் கல்லூரி என்று தமிழ்சினிமாவில் தமிழ்ச் சமூகத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவே. சுப்ரமணியபுரம் இந்த ஜாதியைச் சேர்ந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் கல்கி இதழில் ஒரு தொடர் வந்தது. அரசியல் தொண்டர்கள் இன்னும் சொல்லப்போனால் அடிமட்டத் தொண்டர்களின் விளிம்புநிலை வாழ்க்கை பற்றிய தொடர் அது. அரசியலையும் அரசியல் தலைவர்களையும் நம்பி வீணாய் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் கதைகளைப் படித்தபோது எல்லோரும் பதறிப்போனார்கள். சுப்ரமணியபுரம், அப்படிப்பட்ட அரசியலால் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்ட மூன்று தொண்டர்களைப் பற்றிய ஒரு அருமையான, மறக்கமுடியாத படம். சினிமாவை தொழில்நுட்பங்கள் வழியே பிரமிக்க வைப்பவர்களுக்கு மத்தியில் அதைக் கலையாகப் பாவித்து எடுக்கப்பட்ட கிளாசிக் தமிழ்ப் படம்.
இயக்குநர் சசிகுமாருக்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் பாருங்கள். தமிழ்சினிமா என்பது குட்டையில் ஊறிய ஒரு மட்டை. ஹவுஸிங் போர்ட் வீடுகளைப் பார்த்திருக்கலாம். நூறு வீடுகளும் ஒன்றுபோல இருக்கும். தமிழ்சினிமாவும் இதுபோலத்தான். அதன் ரெகுலர் டிராக்கிலிருந்து விலகிய படங்கள் பலவற்றுக்கும் தர்ம அடி கிடைத்திருக்கிறது. எ.கா – அன்பே சிவம், கற்றது தமிழ். ஆனால் சசிகுமார் இதையெல்லாம் பொருட்டாக எண்ணவில்லை. அவருக்கு சினிமா என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. முக்கியமாக எது நல்ல சினிமா என்று. தமிழ் சினிமாவின் மூலக்கூறுகளை சட்டை செய்யவில்லை. சிருஷ்டித்தன்மையின் உச்சத்தை முதல் படத்திலேயே தொட நினைத்திருக்கிறார்.
விசுவாசம், காதல் – இவையிரண்டு குணங்களுமே ஹீரோயினின் அழகான இரட்டை ஜடைபோல பின்னிப்பிணைந்து கதையை உருவாக்கியிருக்கிறது. ஜெய், சசிகுமார் (இயக்குநரே இரண்டாவது கதாநாயகனாக), கஞ்சா கருப்பு ஆகிய மூன்று பேரும் ஒரு அரசியல் கட்சியின் எடுபிடிகள். என்ன கட்சி என்று சொல்லவில்லையென்றாலும் அவர்கள் திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் என்பதைச் சூசகமாகச் சொல்கிறார் இயக்குநர்.
ஒருபெரிய சிக்கல் வரும்போது முன்னாள் கவுன்சிலருக்காக ஒரு கொலையைச் செய்துவிடுகிறார்கள் மூவரும். (அரசியல் என்றால் கவிழ்ப்புகள் சகஜம்தானே. இன்றைய நாடாளுமன்றக் கூத்துகள்வரை கவிழ்ப்பு வேலைகளைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.) ஆனால் தங்களுக்காகக் கொலை செய்து சிறை சென்றவர்களை நட்டாற்றில் விட்டு விடுகிறார் அரசியல்வாதியும் அவரது சகோதரர்களும். போதும். இதற்குமேல் கதை சொல்லி படம் பார்க்காதவர்கள் திரையரங்கில் அனுபவிக்கப்போகும் கலாபூர்வமான அனுபவத்தை நான் கெடுக்கவில்லை. (தயவு செய்து சென்னை உதயத்தில் படம் பார்க்காதீர்கள். காலிப்பயல்கள். ஏசியை கால்வாசிப் படத்திலேயே அணைத்துவிட்டார்கள். சத்யம் ,சாந்தமில் புதிதாகப் படம் ஓடுகிறது.)
சமீபத்தில் 2050ல் நடக்கிற கதை என்று இந்தி சினிமா ஒன்று வெளிவந்தது. அது சுலபம். தவறைச் சுட்டிக் காட்ட முடியாது. ஆனால் பின்னோக்கி செல்லும் எந்த ஒரு சினிமாவுக்கும் பல இடர்பாடுகள் ஏற்படும். சுப்ரமணியபுரத்தின் எந்த ஒரு காட்சியிலும் இன்று எல்லா மொட்டை மாடியையும் கடக்கும் கேபிள் ஒயர் கிடையாது. ஒரு சண்டைக்காட்சியில் காண்பிக்கப்படும் கடையின் காலண்டர்கூட 1980ஐக் காட்டுகிறது. 80களில் மெல்ல உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்த ரஜினியின் ‘முரட்டுக் காளை’ படத்தின் முதல் காட்சி அவ்வளவு கொண்டாட்டமாக அமைக்கப்படுள்ளது!(பட ரிலீஸ் பற்றி சில காட்சிகளுக்கு முன்னால் தள்ளுவண்டி விளம்பரம்மூலம் உணர்த்திவிடுகிறார் இயக்குநர்) ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்று ரஜினி ஆடிப்பாடும்போது ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சநிலையை அடைந்து இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஆடுகிறார்கள். ஒருவர் இருவர் அல்ல, மொத்த திரையரங்கமும் எழுந்து பரவசம் கொண்டு ஆடுகிறது ( உட்கார்ந்த நிலையில் அந்த பத்தடி இடைவெளிக்குள் ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் காதல் விளையாட்டு புரிவது கவிதை). இப்படி எல்லாக் காட்சிகளிலும் பழங்காலத்திய பொருள்கள், உடைகள், வாகனங்கள். சுண்ணாம்புக் கட்டடங்கள். 1980ஐ எந்த கிராபிக்ஸ் சித்து விளையாட்டும் இல்லாமல் நம் கண்முன் அச்சுஅசலாகக் கொண்டுவருவது எளிதல்ல.
மனித இயல்பில் உள்ள சூழ்ச்சி, குரோதம், சாகசம், பொய் முதலியவைதான் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணத்தையும் அதன் முடிவையையும் தீர்மானிக்கின்றன. ஒரு காட்சியில் ஹீரோவை வில்லன்கள் துரத்துகிறார்கள். உயிர் பயத்தில் ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறான். அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்மணி கூச்சல்போட்டு அவனை வெளியே தள்ளப் பார்க்கிறாள். அப்போது ஹீரோ என்ன செய்கிறான் தெரியுமா? அந்தப் பெண்ணின் காலில் விழுகிறான். யார் எப்பேர்ப்பட்ட தவறு செய்தாலும் காலில் விழுந்தால் மன்னிப்பு கிடைக்கும். அதை நாயகன் உயிருக்குப் போராடும் காட்சியில் கோக்கப்பட்டுள்ளது. காசுக்காக கஞ்சா கருப்பு என்ன வேண்டுமானாலும் செய்வான் என்று நகைச்சுவையாகவும் இன்னொரு முக்கியமான காட்சியிலும் அடிக்கோடிடப் படுகிறது. ஸ்வாதியைப் பார்க்கும் பெரும்பாலான சமயங்களில் ஜெய் கீழே விழுவதும் தடுமாறுவதும் கடைசிக் காட்சியின் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். ‘அதிகாரம் இல்லாவிட்டால் இந்தப் பயல்கள்கூட நமக்கு உதவமாட்டார்கள்’ என்று வில்லன் அரசியல்வாதி ஜெய், சசிகுமார், கஞ்சா கருப்பு மூவரையும் பார்த்து வசனம் சொல்வார். ஆனால் அவருக்குப் பெரிய பதவி வருகிறபோது அவருக்கு நன்றி விசுவாசம் காட்டிய மூன்று பேரையும் கழற்றி விட்டுவிடுவார். வாழ்க்கையின் முரணையும் அரசியல்வாதிகளிகளின் முறைதவறிய வாழ்க்கையையும் நன்கு பதிவுசெய்யும் காட்சிகள் இவை.
தமிழ்சினிமா இயக்குநர்கள் யோசிப்பதில் எவ்வளவு சோம்பேறிகள் என்பதற்கு அவர்கள் அமைக்கும் கதாபாத்திரங்களே சாட்சி. கவனித்துப் பார்த்தால் ஹீரோவோ ஹீரோயினோ இரண்டு பேரில் ஒருவர் நிச்சயம் அநாதையாக இருப்பார். வீண் செலவு அல்லவா! ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகியின் அப்பா தன் அண்ணன் மற்றும் தம்பியோடு கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார். ஜெய், சசிகுமார் இருவருக்கும் பரிதாபமான குடும்பம் ஒன்று இருக்கிறது. இந்த உறவுகளெல்லாம் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டு காட்சிகளில் திருப்பம் ஏற்படவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இயக்குனராக எதுவும் பெரிதாக சாதிக்காத சமுத்திரக்கனிக்கு அபாரமான ஸ்கிரீன் பிரசன்ஸ் இருக்கிறது. அவரது கண்களில் குரோதம், ஆக்ரோஷம், சூதுவாது, வஞ்சம் எல்லாமே பட்டது. அவர் கொடூரமாகக் கொல்லப்படும் காட்சியில் மொத்தத் திரையரங்கமும் திருப்தியோடு கைத்தட்டுவது அவர் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டு. ஜெய், காதல் காட்சிகளில் தலையாட்டிக்கொண்டே இருப்பது அழகு. அசப்பில் விஜய் போல இருக்கிறார். நடை கூட அவ்வப்போது அப்படியே. ஆனால் விஜய்க்கு இத்தனை படங்களில் ஏற்படாத ஒரு தைரியம் (கதைத்தேர்வில்), ஜெய்க்கு இந்த இளம்வயதில், திரையுலகின் ஆரம்பக்கட்டத்தில் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
தமிழில் வெளிவந்த அனைத்து முக்கியமான படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வருகிற அந்த கதாநாயகியின் நம்பிக்கைத்துரோகக் காட்சியைப் போல ஒரு உக்கிரமான காட்சியை எந்தப் படத்திலும் கண்டதில்லை. இந்த ஒரு காட்சியே ஒட்டுமொத்தப் படத்தையும் தன் கரங்களால் தாங்கிப் பிடிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு படத்தில் அத்தனைக் கொலைகள். ஆனாலும் ஜனம் திரைக்கதையின் மாயாஜாலத்தால் கட்டுண்டு அமைதியாகப் படம் பார்க்கிறது. ‘கண்கள் இரண்டால்’ பாட்டின் ஆரம்பத்தில் மொத்த ரசிகர்களும் உற்சாகத்தில் கரவொலி எழுப்புகிறார்கள். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ரசிகர்கள் அளிக்கும் உச்சபட்ச மரியாதை இது. பாட்டில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு விஷுவலும் அருமை.
கற்றது தமிழ்’ அஞ்சலிக்குப் பிறகு இன்னொரு ஆந்திர வரவு. ஸ்வாதி, 80களில் கண்ணியமான வேடங்களில் நடித்த நடிகை ராசியை ஞாபகப்படுத்துகிறார். அவருக்குக் கண்ணும் பேசுகிறது; உதடும் பேசுகிறது. அந்தக் காதல் பாடலில் ஸ்வாதியின் திருட்டுப் பார்வையும் அடிக்கடி வெடித்துச் சிரிப்பதும் இதுவரை தமிழ்சினிமாவில் பார்க்காத ஒன்று. கைதியாக காவல்நிலையத்தின் முன்பு எடுக்கப்பட்ட காதலனின் போட்டோ தாங்கிய பேப்பர் கட்டிங்கை ஸ்வாதி வைத்துக்கொண்டு அவனை நினைத்து ஏங்குவது உண்மையான காதல் வலி. வன்முறை நிரவிக்கிடக்கும் இப்படத்தில் இசை எங்குமே துருத்திக்கொண்டு இருக்கவில்லை. காதல் காட்சிகளில் சன்னமாக இளையராவின் பாடலை ஒலிக்கவிட்டிருப்பது புத்திசாலித்தனம். கதிர், தமிழ்சினிமாவின் முக்கியமான கேமராமேன்களில் ஒருவராக வளர்ந்துகொண்டிருக்கிறார்.
இயக்குநரின் தேர்ந்த ரச்னையாலும் நெஞ்சுரத்தாலும் மறக்கமுடியாத ஒரு படம் கிடைத்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இந்தப் படத்தை ரசிகர்கள் உடனடியாக வாரித்தழுவிக்கொண்டது உண்மையிலேயே ஆச்சர்யத்தைத் தருகிறது. என்றைக்கு இந்தப் படம் வெளியானதோ அன்றுமுதல் அவர்களும் தசாவதாரத்தின் மீதான மயக்கத்தை விட்டொழித்துவிட்டு சுப்ரமணியபுரத்தின்மீது மையல் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தமிழ்சினிமாவின் வரலாற்றை யார் எப்போது எழுதினாலும் அதில் சுப்ரமணியபுரத்துக்கும் சசிகுமாருக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.
படம் முடிந்து ஜனத்திரளுக்கு மத்தியில் மெல்ல ஊர்ந்து அரங்கை விட்டு நான் வெளியே வரும்போது முன்வரிசையில் இருந்த குப்பைகளை இரு பெண்கள் கூட்டிப் பெருக்கித் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தரையில் செய்த வேலையை திரையில் செய்திருக்கிறார் சசிகுமார்.
-ச.ந. கண்ணன் [kannanthamizh@gmail.com]