இஸ்ரேல் – லெபனான்: இன்னொரு யுத்தம்

ஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவரான இமத் ஃபாயஸ் மக்னியா கடந்த 12ம் தேதி சிரியாவில் ஒரு கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். நேற்றைக்கு நடந்த அவரது இறுதிச் சடங்கு சமயம், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸரல்லா இஸ்ரேலுடனான முழுநீள யுத்தத்தை அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய ராணுவமும் காவல் துறையும் உளவு அமைப்பும் தமக்குள் அவசர நிலை பிரகடனப்படுத்திக்கொண்டு தீவிர யுத்த ஏற்பாடுகளில் இறங்கியிருக்கின்றன. 2006 யுத்தம் முடிந்த நினைவுகளே இன்னும் மறையாமலிருக்க, இப்போது இன்னொரு யுத்தம்.

லெபனானில் ஹிஸ்புல்லா தோற்றுவிக்கப்பட்ட தினம் தொடங்கி அதில் உறுப்பினராக இருந்தவர் மக்னியா. அப்பாஸ் அல் மூசாவி, ஹஸன் நஸரல்லாவுக்கு அடுத்தபடி அவர்தான். ஹிஸ்புல்லாவின் பாதுகாப்புத்துறைத் தலைவராகவும் அதன் சர்வதேசத் தொடர்புகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர் அவர்.

டிசம்பர் 7, 1962ல் பிறந்த மக்னியாவின் தலைக்கு அமெரிக்கா ஐந்து மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது. (இது பற்றி மக்னியாவின் கமெண்ட்: ‘சே. இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். என் அருமை அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.’) அதிகம் வெளியே தென்படாதவர். பேட்டிகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில் காண இயலாது. புகைப்படங்கள் கூட அதிகம் வெளியானதில்லை. ஒன்று அல்லது இரண்டு. ஆனால் ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு தாக்குதல் திட்டத்தின் பின்னாலும் மக்னியா அவசியம் இருந்திருக்கிறார். நேரடியாக. அல்லது ப்ளூ ப்ரிண்ட் தயாரிப்பாளராக.

தெற்கு லெபனானில் டாய்ர் டிப்பா (Tayr Dibba) என்கிற குக்கிராமத்தில் பிறந்த ஃபயாஸ், மிக இளம் வயதிலேயே பாலஸ்தீன் போராளி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர். 1976-78 ஆண்டு காலகட்டத்தில் யாசிர் அரஃபாத்தின் Force 17 என்கிற பிரத்தியேகப் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றியிருக்கிறார். Sniper என்று சொல்வார்கள். எதிரிகளை நிலைகுலைய வைத்து, அவர்களது தன்னம்பிக்கையைக் குலைக்கும் பணியைச் செய்யும் பொறுப்பு. இத்தகைய ஸ்னிப்பர்கள், கண்ணுக்குத் தென்படும் எதிரிகள் எல்லாரையும் சுட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள். யார் கமாண்டர், யார் யார் முக்கியஸ்தர்கள் என்று பார்த்துப் பார்த்துப் போட்டுத்தள்ளுவதுதான் இவர்களது உத்தியோகம். முன்னாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் “ஷுஐப் அக்தரை எப்படிப் பயன்படுத்துவார்களோ, அப்படி.

போர்க்கலை நிபுணரான மக்னியா, ஏனைய தெற்கு லெபனான் இளைஞர்களைப் போலவே ஒரு காலகட்டத்தில் மூசாவியால் ஈர்க்கப்பட்டு ஹிஸ்புல்லாவுக்கு வந்தவர். மிகத் தீவிரமான தீவிரவாதி என்கிறபடியால் ஃபாயஸின் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தும் விதமாக மூசாவி அவருக்கு முதலில் வெளியுறவு விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்தார்.

வெளியுறவு என்றால், இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகொள்வது. ஆயுதங்கள் வாங்கிச் சேகரிப்பது. பல்வேறு இஸ்லாமிய தேசங்களின் அரசுகளுடன் நல்லுறவு வளர்ப்பது. உண்மையில் இன்றைக்கு ஹிஸ்புல்லாவுக்கு ஈரானில் இருக்கும் செல்வாக்குக்கு அவரது உழைப்பு மிக முக்கியக் காரணம். மிகவும் டிப்ளமடிக்காகப் பேசி, காரியத்தைச் சாதிக்கும் சாமர்த்தியம் உள்ள மனிதர்.

ஒசாமா பின்லேடனும் அவருடைய அல் காயிதாவும் முதன்முதலில் ஆப்கனிஸ்தானிலிருந்து புறப்பட்டு சூடானுக்குப் போய்ச் சேர்ந்து அங்கிருந்து தங்கள் நெட் ஒர்க்கை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் (1991ம் ஆண்டுத் தொடக்கம்), உலகெங்கும் இருக்கும் பல்வேறு தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சூடானுக்கு வரவழைத்து நல்லுறவு வளர்க்கும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினார்கள்.

ஆயிரம் சொன்னாலும் அல் காயிதா ஒரு சன்னி இயக்கம். அதுவரை எந்த ஒரு ஷியா அமைப்புடனும் அவர்களுக்கு உறவு இருந்ததில்லை. தனிப்பட்ட முறையிலும் ஒசாமாவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அல் காயிதாவின் மூத்த தளபதிகளும் அப்போதைய சூடான் அதிபரான அசன் அல் துராபியும் தொடர்ந்து வற்புறுத்தியதன் பலனாக ஹிஸ்புல்லாவையும் தோழமை அணியில் சேர்த்துக்கொள்ள ஒசாமா முடிவு செய்தார்.

இந்த முயற்சி வெற்றியடைந்ததற்குக் காரணகர்த்தா, இமத் ஃபாயஸ் மக்னியாதான். இதில், இரு தரப்புக்குமான லாபங்கள் என்னவென்று பார்க்கவேண்டும். ஹிஸ்புல்லாவுக்கு அல் காயிதாவின் நட்பு கிடைக்குமானால், அவர்களது ஆயுத பலம் பெருகும். மத்தியக் கிழக்குக்கு வெளியே ஹிஸ்புல்லாவின் நெட் ஒர்க் பலப்படுவதற்கு அல் காயிதா உதவிகள் செய்யும்.

பதிலுக்கு அல் காயிதாவுக்கு ஹிஸ்புல்லா, போர்ப்பயிற்சி அளிக்கும். கெரில்லா யுத்தத்தில் மட்டுமே தாதாக்களாக விளங்கிய அல் காயிதா போராளிகளுக்கு ஹிஸ்புல்லா தரக்கூடிய பல நவீன போர்க்கலைப் பயிற்சிகள், வேறு எந்த இடத்திலும் கிடைக்கமுடியாதவை. தவிரவும் மத்தியக் கிழக்கிலேயே போராளி இயக்கங்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் இடம் என்று வருணிக்கப்படும் இரான் தேசத்தில் இயங்கும் வேறு சில ஷியா இயக்கங்களும் ஹிஸ்புல்லாவின் இந்தப் போர்ப்பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களாகக் கலந்துகொண்டு அல் காயிதா வீரர்களுக்குப் பாடம் எடுக்கும் என்று தீர்மானமானது.

கேள்விப்படுவதற்குச் சற்றே விசித்திரமாக இருந்தாலும் அல் காயிதாவைக் காட்டிலும் ஹிஸ்புல்லாவும் அதன் சிஷ்ய இயக்கங்களும் தோழமை இயக்கங்களும் யுத்தக் கலையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதுதான் உண்மை.

யுத்தம் என்றால் நேரடி யுத்தம் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துவிட்டு, வெடி வைத்தோ, தீ வைத்தோ தகர்ப்பதுகூட யுத்தத்தில் சேர்த்திதான். 1988ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா மற்றும் தான்சானியாவின் தலைநகரங்களில், அமெரிக்க தூதரகங்களின் மீது அல் காயிதா நிகழ்த்திய தாக்குதல் சமயத்தில், சம்பந்தப்பட்ட தற்கொலைப்படைப் போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஒசாமா பின்லேடன் தேர்ந்தெடுத்த நபர் மக்னியாதான்.

வண்டி ரெடி, ஓட்டத்தெரிந்த ஆள் ரெடி, குண்டு ரெடி என்றபின் கொண்டுபோய் மோதிச் சாவதற்கு என்ன சிறப்புப் பயிற்சி?

மரணத்தின் வாசல்படி என்று தெரிந்தும் வலதுகாலை திடமாகவும் சந்தோஷமாகவும் எடுத்து வைப்பதற்கான மனநிலையை வரவழைப்பதுதான் தற்கொலைப் படைப் போராளிகளுக்குப் பயிற்சியளிப்பவர்களின் தலையாய கடமை. சித்தாந்த ரீதியிலும் மதம் மற்றும் அரசியல் ரீதியிலும் பேசிப்பேசி உரமேற்றி, ஒரு நபரை ஆயுதமாக மாற்றும் கலை அறிந்தவர்கள் உலகில் மிகச் சிலர்தான். விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் மக்னியா முன்னணியில் நின்றவர்.

2000ம் ஆண்டு ஏடன் துறைமுகத்துக்கு வந்த யு.எஸ்.எஸ். கோல் என்கிற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தகர்க்க அல் காயிதா தேர்ந்தெடுத்த தற்கொலைப்படைப் போராளிகளுக்கும் ஃபயாஸ்தான் இத்தகைய சிறப்புப் பயிற்சியை அளித்தவர்.

ஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். எப்படி ஹமாஸ் கார் குண்டு ஸ்பெஷலிஸ்டாக விளங்குகிறதோ, அல் காயிதா அதிபயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள். மிக மிக முக்கியமான நபர்களாகத் தேர்ந்தெடுத்துத்தான் கடத்துவதற்குத் தீர்மானிப்பார்கள்.

நெருங்கவே முடியாத பாதுகாப்பு வளையங்களை நொறுக்கித் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து கோழி அமுக்குவது எப்படி என்பதை ஹிஸ்புல்லா போராளிகளுக்குச் சொல்லிக்கொடுத்த ஆதிகுரு மக்னியாதான். வி.ஐ.பிக்களைக் கடத்துவதுடன் கூட அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளை அவ்வப்போது கடத்திவைத்து கதிகலங்க விடுவது என்கிற வழக்கத்தை ஹிஸ்புல்லா போராளிகளின் ‘பயிற்சி’க்குப் பயன்படுத்தியவர் அவர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விஷயத்தில் கருணை என்கிற சொல்லுக்கோ, இரக்கம் என்கிற உணர்வுக்கோ சற்றும் இடமில்லை என்பதுதான் ஃபாயஸின் சித்தாந்தம்.

1983ம் ஆண்டு ஏப்ரலில், லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் குண்டு வைத்தது, அதே ஆண்டு மீண்டும் அக்டோபரில் லெபனானுக்கு வந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றைத் தகர்த்துவிட்டு, ஃப்ரெஞ்சு பாராட்ரூப்பர் ஒருத்தரையும் சுட்டுக் கொன்றது, 1984ம் ஆண்டு மீண்டும் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வேறொரு கட்டடத்தில் குண்டு வைத்தது, 1994ல் ப்யூனர்ஸ் அயர்ஸில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் ஒரு யூத கலாசார மையக் கட்டடத்தையும் தகர்த்தது, எண்பதுகள் முழுவதிலும் ஏராளமான ஆள் கடத்தல் என்று ஃபாயஸின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்கள் அனைத்தும் ரத்தத்தால் எழுதப்பட்டவை.

அவரது இழப்பு கண்டிப்பாக ஹிஸ்புல்லாவைக் கடும்கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. வெளிப்படையான, முழுமையான யுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நஸரல்லா. 2006 யுத்தத்தின் அழிவுகளைக் காட்டிலும் இம்முறை மிகத் தீவிரமாக இருக்கும் என்று லெபனான் அரசு அஞ்சுகிறது. பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றுப் போகிற தருணம். பேசுகிற மனநிலையில் அங்கு யாருமில்லை.

பத்தாண்டு காலத்துக்கும் மேலாக மக்னியாவை மொஸாட் தேடிக்கொண்டிருந்தது. பல கொலை முயற்சிகளிலிருந்து அவர் தப்பித்திருக்கிறார். இம்முறை அப்படித் தப்பிக்க இயலவில்லை.

ஒரு விஷயம். ஹமாஸ் உள்ளிட்ட பெரும்பாலான பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் யுத்தத்திலிருந்து தன்விருப்ப (தாற்காலிக) ஓய்வு பெறுவதில் ஆர்வம் செலுத்தும் காலம் இது. ஹிஸ்புல்லா மட்டும் தொடர்ந்து இஸ்ரேலுடன் யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறது. கடைசி யூதன் உயிருடன் இருக்கும்வரை இந்த யுத்தம் ஓயாது என்று நஸரல்லா அடிக்கடி சொல்லுகிறார்.

மத்தியக் கிழக்குக்கான இந்த ஆண்டுச் செயல்திட்டம் குறித்து அமெரிக்கா இதுகாறும் முடிவெடுக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். மக்னியாவின் மரணமும் அறிவிக்கப்பட்டுள்ள யுத்தமும் அமெரிக்க சிந்தனைச் சிற்பிகளுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter