அடுத்தது யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. சாத்திரங்கள் பிணம் தின்ன எட்டு ஆண்டுகள் ஆண்டு முடித்துவிட்டு ஜார்ஜ் புஷ் விடைபெறும் தருணம். அடுத்தது எந்தக் கட்சி? ஆளப்போவது யார்? திருவிழாவை எதிர்கொள்ள அமெரிக்காவும் உலகமும் தயாராகிவிட்டது.

அடுத்த வாய்ப்பு குடியரசுக் கட்சிக்கு அமைவது கஷ்டம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எட்டாண்டு அனுபவம் போதும் என்றே அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள். மாற்றம் நல்லது. தவிரவும் வாக்குச் சீட்டை மாற்றிப்போடுவது ஒரு நல்ல பொழுதுபோக்கும் கூட. மீண்டும் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வாய்ப்பு.

தரலாம். தப்பில்லை. மோனிகா லெவின்ஸ்கியைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பழைய பில் க்ளிண்டன்கூட அத்தனை ஒன்றும் மோசமாகத் தோன்றவில்லை.

திருமதி க்ளிண்டன் இம்முறை வேட்பாளர் தேர்தலில் களத்தில் நிற்பது ஒரு கவர்ச்சி அம்சம். அவருக்குப் போட்டியாக பாரக் ஒபாமா. விரைவில் ஒபாமா VS ஒசாமா என்று கவர் ஸ்டோரி எழுத வாய்ப்புக் கிடைக்குமா என்று இப்போதே அமெரிக்க மீடியாக்கள் அட்டை வரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. நடக்கலாம். அவருக்கும் ஆதரவு அலை இருக்கிறது.

ஹிலாரியின் சிறப்பு அல்லது பெருமை என்று பட்டியலிடப் பிரமாதமாக ஏதுமில்லை. ஆனாலும் அவருக்கொரு அலை இருப்பதாகவே தெரிகிறது. முதல் பெண் வேட்பாளர். தவிரவும் செனட்டராக இருந்து எலுமிச்சை வெளிச்சத்தில் சற்றே செயல்பட்டிருக்கிறார். மோனிகா விவகாரம் விசுவரூபம் எடுத்த காலத்தில் ஓர் இந்தியப் பதிவிரதை மனோபாவத்துடன் அவர் நடந்துகொண்ட விதம் அமெரிக்கப் பெண்மணிகளை அப்போது மிகவும் கவர்ந்தது நினைவுக்கு வருகிறது.

வேறென்ன சொல்லலாம்? சர்வதேச அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரை வெகுஜன அபிப்பிராயங்களுக்கு முற்றிலும் எதிரான, முழுதும் அபத்தமான கொள்கைகளையும் அபிப்பிராயங்களையும் கொண்டவராக இருப்பாரோ என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது. இராக் யுத்தம் பற்றிய அவரது திருவாய்மொழிகள் ஓர் உதாரணம். புஷ் சிந்திப்பது போலவே சிந்திக்கும் யாரையும் அமெரிக்கர்கள் இப்போது அவ்வளவாக விரும்புவதில்லை. தவிரவும் தீவிர மதவாதி. பழமைவாதி. தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் இப்போதெல்லாம் ஒரு குறையாக எடுத்துக்கொள்வதில்லை போலிருக்கிறது. குஜராத்தை மறப்போமா? கால தேசம் மாறினாலும் காவிநேசம் அப்படியேதான் இருக்கும். இங்கே காவி. அங்கே (பரிசுத்த) ஆவி.

ஒபாமா விஷயத்தில் இப்படியான அபாயங்கள் ஏதும் தெரியவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவுக்குத் தெற்கு மாகாணங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. சிறப்பாகப் பேசுகிறார். மக்களைக் கவரத் தெரிந்தவராக உள்ளார். உலக அளவில் அமெரிக்கா மீது உருவாகியிருக்கும் கசப்புணர்வுகளை உள்வாங்கிய பேச்சாகவே அவருடையது தெரிகிறது. ஆனால், அரசியல் அனுபவம் அதிகமில்லாதவர் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது.

அது ஒரு பிரச்னையா? ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்தபோது என்ன அனுபவம் அவருக்கு இருந்தது? எட்டு வருடங்கள் ஆண்டு தீர்க்கவில்லையா? ஆயினும் ஒன்று. ஒபாமாவை புஷ்ஷுடன் ஒப்பிடுவது அத்தனை சரியில்லை. சிந்தனைப் போக்கு அளவில் இருவரும் இரு துருவங்கள்.

ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்த கறுப்பினத்தவர். தாயார் அமெரிக்கப் பெண்மணி. தனது இளமைப் பொழுதுகளை ஹவாயில் கழித்துவிட்டு பள்ளிப்படிப்புக்கு ஜகார்தாவுக்குச் சென்றார். அப்போது அவரது தாயார், தனது கென்யக் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, புதிதாக ஓர் இந்தோனேஷியரைத் திருமணம் செய்துகொண்டிருந்தார்.

கல்லூரிக் காலத்துக்கு முந்தைய தினம் வரை ஜகார்தாவில் கழித்துவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி கொலம்பியா பல்கலையிலும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலும் படித்தார். பேராசிரியராகவும் மனித உரிமைச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். 1997ல் இல்லியனாய்ஸ் மாகாண செனட்டராகப் பொதுவாழ்வில் நுழைந்தது முதல் இன்றுவரை ஒபாமாமேல் குற்றச்சாட்டுகள் என்று ஏதுமில்லை. தன்னளவில் ஒரு சமத்து செனட்டராக அவர் உத்தியோகம் பார்த்திருக்கிறார்.

பிப்ரவரி 2007ல் அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பி அவர் அறிவித்ததிலிருந்து சில விஷயங்களில் மிக உறுதியாக இருக்கிறார். இராக்கில் யுத்தத்தை நிறுத்திவிட்டு அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப் பெறுவது. உலக அளவிலான உடல் ஆரோக்கியத் திட்டங்கள். க்ளோபல் வார்மிங்கைச் சமாளிப்பதற்கான ஆராய்ச்சிகள் ஆகியவை அவற்றுள் சில. இலவச கலர் டிவி, ரூபாய்க்கு நாலு படி அரிசி எல்லாம் அமெரிக்காவில் வேகாது. அங்கத்திய தேர்தல் வாக்குறுதிகள் வேறுவிதமாகத்தான் இருக்கும்.

ஒரு சுமாரான எழுத்தாளருமான ஒபாமா (இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். Dreams from My Father, The Audacity of Hope) ஜனநாயகக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு பேரில் சிறந்தவர் என்றே பெரும்பாலான உலக மக்கள் கருதுகிறார்கள். தவிரவும் ஒரு கறுப்பினத்தவரை அமெரிக்கா தனது அதிபராக ஏற்கும் தருணம் வருமானால், அது முந்தைய சரித்திர மோசடிகளுக்குச் சரியானதொரு பரிகாரமாகவும் அமையும்.

கொஞ்சம் அந்தப் பக்கமும் பார்க்கலாம். புஷ்ஷின் வழித்தோன்றலாகக் குடியரசுக் கட்சி யாரை நிறுத்தும்? நிறுத்தப்படுபவர் யாரானாலும் தீவிர வலது சாரியாகவும் தீவிர யுத்தவெறியராகவும்தான் இருப்பார் என்பது ஒருபுறமிருக்க, இம்முறை உருவாகியிருக்கும் மிகக்கடுமையான ‘பெயர் ரிப்பேர்’ இமேஜை மாற்றக்கூடியவராக அவர் இருந்தாகவேண்டும்.

ஆனால் ஜனநாயகக் கட்சியில் இருப்பதுபோல அங்கே போட்டிக்கு வாய்ப்பில்லை. ஒரே ஆள். ஒரே தேர்வு. அநேகமாக ஜான் சிட்னி மெக்கெய்ன் (John Sidney McCain) வருவார் என்று தெரிகிறது. சற்றே மிதவாதி என்றும், உருப்படியான சிந்தனையாளர் என்றும் கணிசமான மக்கள் செல்வாக்கு கொண்டவர் என்றும் மீடியா கணித்திருக்கும் நபர்.

ஜனநாயகக் கட்சியைப் போல ‘பெண் வேட்பாளர் அல்லது கறுப்பின வேட்பாளர்’ என்கிற கவர்ச்சி கோஷமெல்லாம் குடியரசில் கிடையாது. கொள்கையில் மாற்றமில்லை. செய்தவை எதுவும் பிழையுமில்லை. இயேசுபிரானுக்கு அடுத்தபடி ஜார்ஜ் புஷ் உலக அமைதிக்கு ரத்தம் அல்லாது போனாலும் சித்தம் சிந்தியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வருபவரும் அதையேதான் சிந்தப்போகிறார். அமெரிக்கா தொடர்ந்து வல்லரசாக, உலகின் கணக்கு வாத்தியாராகக் கையில் பிரம்புடன் உலாவர எங்களுக்கே வோட்டளியுங்கள்.

இதுதான். இவ்வளவுதான் குடியரசுக் கட்சி. ஆயினும் ஜான் மெக்கெயின்மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கிறதாகவே தெரிகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி நிறுத்தப்படுவது உறுதி என்றால் கண்டிப்பாக வெற்றி மெக்கெயினுக்காகத்தான் இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் அமெரிக்க வலதுசாரிகள். ஆனால் மெக்கெயின், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அது நடந்துவிடும்.

அதே சமயம் எதிர்த்தரப்பில் பாரக் ஒபாமாதான் என்பது உறுதியாகிவிட்டால் இத்தனை உறுதியாக வெற்றி வாய்ப்பு பற்றிப் பேசமுடியாது. போட்டி கடுமையாகவே இருக்கும்.

ஒபாமாவோ, ஹிலரியோ, மெக்கெயினோ இன்னும் சொல்லிக்கொள்ளும் விதத்தில் மாபெரும் கவன ஈர்ப்புச் சாதனை ஏதும் நிகழ்த்திவிடவில்லை. தேர்தல்களம் சூடுபிடித்துவிட்டபடியால் இவர்களைத் தவிர அமெரிக்க மீடியாவுக்கு இப்போது வேறு அவல் கிடையாது.

லேட்டஸ்ட் கொளுத்திப் போடல்: பாரக் ஒபாமாவின் நடுப்பெயர் (Middle Name) தெரியுமா உங்களுக்கு? ஹுஸைன்.

அமெரிக்காவில் காந்தல் வாசனையைக் கிளப்ப இது போதாதா?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி