சூனியன் கோவிந்தசாமியின் நிழலை தூங்கப் போட்டு விட்டு சென்று விட நிழல் தனியே செயல்படத் துவங்குகிறது. கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியாக நாமம் சூட்டிக் கொள்ள நினைக்கும் நேரத்தில் ஒரு திருப்பமாய் கோவிந்தசாமியை சந்திக்கிறது. அப்போதும் கூட சாப்பாடு பற்றி தான் கோவிந்தசாமி பேசுகிறான்!
சூனியனை மோசக்காரன் எனக் கூறி எகிறும் கோவிந்தசாமியிடம் நிகழ்ந்தவைகளையும், செய்தவைகளையும் கூறி சூனியனுக்காக நிழல் வாதாடுகிறது. அந்த விவாதம் முற்றிப் போய் சூனியனோடு சேர்ந்து நீயும் எனக்கு எதிராக சதி செய்கிறாய் என நிழல் மீதும் குற்றம் சுமத்த நிழல் பொங்கி எழுகிறது.
முட்டாள். உனக்கான குழியை நாங்கள் வெட்டவில்லை. நீ எழுதிய கவிதை தான் இதற்கெல்லாம் காரணம் எனச் சொல்லிவிட்டு நிழல் கிளம்பி விடுகிறது. கோவிந்தசாமியோடு நிழல் இணைந்து விடும் என்று எதிர்பார்த்தேன். நினைப்பு பொய்த்து விட்டது.
நிழல் கோவிந்தசாமியாக நாமம் சூட்டிக் கொண்டு குழப்பத்தை உருவாக்கினால் வெண்பலகை அட்ராசிட்டிகளை இனி வரும் அத்தியாயங்களில் இரசிக்கலாம். சாகரிகா இன்னும் இவர்களுக்கிடையேயான சீனில் வரவில்லை. அவள் இவர்களின் பதிவுக்கு எப்படியான பதில் அளிப்பாள்? அல்லது வேறு ஏதும் நிகழுமா? எதுவானாலும் சாகரிகாவை தன் வயப்படுத்தும் போட்டி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.