அடுத்தது…

எங்கள் தொலைக்காட்சி உலகில் ஒரு வழக்கமுண்டு. மதியம் சாப்பாடு ஆனதும் புரொடக்‌ஷன் ஆள் ஒருவர் சாப்பிட்ட அனைவருக்கும் ஒரு துண்டு கடலை பர்பி கொடுத்துக்கொண்டே போவார். இது அனைத்து யூனிட்டுகளிலும் நடக்கும். சினிமா உலகிலும் இவ்வழக்கம் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் கண்டதில்லை. உண்ட வாய்க்கு வெற்றிலை பாக்குக்கு பதில் வேர்க்கடலை பர்பி. அந்த இனிப்பு வாயெங்கும் பரவி, அடித்தொண்டையை நனைத்து உள்ளே சென்று அடங்கினால்தான் உண்டு முடித்த திருப்தி.

எழுத்திலும் இப்படியொரு சடங்கு எனக்கு வெகு காலமாக இருந்து வருகிறது. ஏதேனுமொரு பெரிய பணியை முடிக்கிறபோது, மிகுந்த அக்கறையும் தீவிரமும் கொண்டு இன்னொரு சிறு எழுத்து வேலையைக் கையோடு எடுத்துக்கொள்வேன். முன்னதை முடிக்கும்போது அடுத்ததைத் தொடங்காவிட்டால், திருப்தி இராது.

அப்பாடா, முடித்துவிட்டோம் என்ற நிறைவு வந்துவிடக்கூடாது என்பதே இதன் உளவியல். அப்படியொரு எண்ணம் வந்தால் எல்லாமே போரடித்துவிடுமோ என்கிற பயம். யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் அபத்தம்தான். என்ன செய்ய? அபத்தங்களிலும் ஒரு சிறு அழகு இருப்பது போலில்லை?

பொலிக பொலிக இறுதி அத்தியாயங்களை எழுதி முடித்து அனுப்பிவிட்டேன். ஜனவரி 12ம் தேதி தொடங்கி இடைவெளியின்றி 108 தினங்கள் இது தினமலரில் தொடராக வந்து, நாளை நிறைவடையவிருக்கிறது. இதைவிடப் பெரிய தொடர்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தளவுக்கு வேறெந்தத் தொடரும் என்னை வருத்திப் பிழிந்ததில்லை. ஒரு நாளில் சரி பாதி நேரம் இதுவே எடுத்துக்கொண்டது. தினமும் பத்து மணி நேரம் படிப்பு, முக்கால் அல்லது ஒரு மணி நேர எழுத்து. சரி பார்த்து அனுப்ப மேலும் ஒரு மணி நேரம்.

கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கிவிட்டு எழுந்து ஒரு கை நீர் அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டு வழக்கமான மற்ற வேலைகளைப் பார்க்க உட்காருவேன். இரவு மீண்டும் படுக்கப் போக எப்படியும் ஒன்றரை இரண்டு மணியாகிவிடுகிறது.

இந்நாள்களில் எழுதுவது, படிப்பது, உண்பது, உறங்குவது தவிர வேறெதையுமே செய்யவில்லை. படுத்துக் கண்ணை மூடினால் முதலியாண்டானோ, உறங்காவில்லியோ வந்து மிரட்ட ஆரம்பித்துவிடுவார்கள். எத்தனை பராக்கிரமம் மிகுந்த ஆளுமைகள்! பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, கூரேசர், மாறனேர் நம்பி, அத்துழாய், அவளது மாமனார்வரை என்னை ஆண்டு தீர்த்துவிட்டு விடைபெறுகிறார்கள்.

இத்தொடரின் மொழி வேறெதையும் பாதித்துவிடக் கூடாதென்பதற்காக இந்நாள்களில் வாணி ராணி தவிர வேறெதையும் எழுதவில்லை. ஐந்து வருடம் பழகிய மொழி என்பதால் அதனை இது பாதிக்காது. புதிதாக வேறொன்றை ஒப்புக்கொண்டால்தான் சிக்கல். எனவே இடையில் வந்த ஒரு பத்திரிகைத் தொடர் மற்றும் ஒரு தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகளை அன்புடன் தவிர்த்துவிட்டேன். ஆறு மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்துக்கான எழுத்துப் பணியை அடுத்த வாரம் கண்டிப்பாக ஆரம்பித்துவிடுவேன் என்று சம்பந்தப்பட்டவருக்கு வாக்களித்திருக்கிறேன்.

அதற்கு முன்னால் ஒரு நாவலுக்கான திட்டமும் வேகமும் கூடி வந்திருக்கின்றன. நாவல் எழுதி வெகுகாலமாகிவிட்டது. எழுதலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இது சற்றுப் பெரிது. பல வருடங்களாக ஒரு வரியாக மட்டும் உள்ளே ஓடிக்கொண்டிருந்த கரு, சட்டென்று என்றோ ஒருநாள் விரிவு கொண்டு தன் முகம் காட்டத் தொடங்கியது. ராமானுஜர் சரிதத்தை எழுதி முடிக்கிற இவ்வேளையில் நாவலுக்கான மொழி திரண்டு வந்துவிட்டதாகப் படுகிறது. வெகு விரைவில் ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

யார் நாவல் படிக்கிறார்கள், யாருக்குப் பிடிக்கும் என்பதல்ல. நான் இருப்பதை எனக்குச் சொல்லிக்கொள்ள இப்படி ஏதேனும் எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எழுதிக்கொண்டிருக்கிறவரை பாதுகாப்பாக உணர்கிறேன். சொற்களற்றுப் போகிறபோது இசையாகிவிட வேண்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter