இறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]

நிசப்தத்தின் இமை திறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெருமெளனம்
– பிரமிள்

இசையின்றி இவ்வுலகில் உயிர்கள் ஏது? இயக்கம் ஏது? இசையே சுவாசமாக வாழும் ஒருவனின் தேடல் தான் “இறவான்”. முற்றிலும் புதியதொரு தளத்தில், ஒற்றை கதாபாத்திரமான எட்வின் ஜோசப் என்ற ஆபிரஹாம் ஹராரியின் சொல்முறையிலேயே நாவல் முழுவதும் அமைந்திருப்பது ஈர்ப்பு. முறையான பயிற்சி இல்லாமலேயே இசைக்கருவிகளை வாசிக்கத் துவங்கும் ஒரு நடுத்தர குடும்பத்துச் சிறுவன், அவனது சிந்தனையின் வேகத்துக்கு சற்றும் பொருந்தாத குடும்பச்சூழலும், சுற்றமும் அவனது தேடலை மேலும் தீவிரப்படுத்துகின்றன. விளையாட்டாய் வாங்கிய புல்லாங்குழலில் பண்டிட் ஜஸ்ராஜின் புகழ்பெற்ற கஸ்தூரி திலகத்தை வாசித்துக் காட்டுபவன், எப்படி வீட்டுச் சிறையினுள் இருக்க முடியும்.

மும்பையில் வாழும் நடுத்தரக் குடும்பத்தில் வாழும் ஒரு சிறுவன் புராதன ஹீப்ரூ மொழியில் பாடத் தொடங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும்?. இஸ்ரேலுக்கு செல்வதும் ராபி ஆவதும் மட்டுமே கனவுகளாக அவன் தேடலை துவக்குகிறான். அவனுள் இருந்து பிரவாகிக்கும் இசையை அவனும் வேறொருவனாய் அனுபவிக்கிறான். எகிப்தில் இருந்து அந்தேரி வழியாக இஸ்ரேல் செல்லும் ஆபிரஹாம் ஹராரியை வாசகரும் வியப்புடன் பின் தொடர தானே வேண்டும். வீட்டில் இருந்து வெளியேறிய காலத்தில் அவன் கேட்ட டீக்கடைக்காரரின் மகளின் குரலை அவன் பல்லாண்டுகளாகத் தேடுகிறான்.” அவள் கிடைக்க வேண்டும். அது அவள் விதியோ என் விதியோ அல்ல. என் இசையின் விதி” என்கிறான். அது பின்னர் ஒருநாளில் நிறைவேறவும் செய்கிறது. எங்கோ கேட்கும் ஆர்கன் ஒலி, நானூறு வருடங்களுக்கு முன் கேட்ட பரிச்சயமான இசையாய் அவனுக்கு தெரிகிறது. சினகாகில் இருக்கும் பழைய பியானோவில் அவன் டேவிட்டின் சங்கீதத்தை வாசிக்கையில், பேருருவமான வெளிர் நீலத் திரைச்சீலை வானில் உயர்ந்து விரிந்து மிதப்பதை வாசகரும் உணரலாம்.

திருமணங்களில் வாசிக்கப்படும் வெட்டிங் மார்ச்சை எழுதிய ஃபெலிக்ஸ் மென் டல் ஷான் முதல் பப்பிலஹரி வரை அநாயாசமாக ஆபிரஹாமின் உலகத்துக்குள் வந்து போகிறார்கள். புதிதாய் ஒரு இசைக்குழு. ட்ரம்ஸ் வாசிக்கும் ஜானவி இசை வடிவானவளாக, அன்பை மட்டுமே மொழியாகக் கொண்டவளாக இருக்கிறாள். இரவு எட்டு மணிக்கு வயலினை வாசிக்கத்துவங்கி, அதிகாலை ஐந்து ஐம்பது வரை வாசித்த புத்தம்புதிய இசையை கேட்க மனம் ஏங்குகிறது. தாளக்கட்டில் அடங்காத ஒரு இசையை இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பெரும் கூட்டத்தின் முன் அரங்கேற்றும் துணிச்சலை ரசிக்கலாம். ஜானவியின் வார்த்தைகளின் வழி, ஆபிரஹாம் ஒரு தெய்வம் அல்லது சாத்தான். வேறெதுவுமாகவும் இருக்க முடியாது.

இசையின் பிரம்மாண்டத்தையும், நுணுக்கத்தையும் ஒரே சமயம் எழுத்தால் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைப்பது முற்றிலும் புதியது. மிக மெலிதாக துவங்கும் ஒரு ஷெனாயின் ஒலி, ஆயிரம் வயலின் களாக உருவெடுப்பதை எப்படி விவரிப்பது?உலகை வெல்லும் ஒரு இசையை உருவாக்கும் பெருங்கனவை சுமப்பவன், அவனே பேசும் வாத்தியமாகும் சுவாரஸ்யம். மரியாவின் குரல் நாவல் வாசித்த பின்பும் ஒலிக்கிறது. சந்தான லட்சுமியின் களங்கமற்ற சிரிப்பு மனதில் என்றும் நிற்கும். சுதா ரகுநாதன், ஜானகி என போகிற போக்கில் வம்பிழுத்துச் செல்வது பா.ரா வின் முத்திரை.

சிம்பொனி இசை என்பதை இளையராஜாவின் வழியாக மட்டுமே அறிந்திருக்கும் தமிழ்ச்சமூகத்திற்கு, அதை தன் வாழ்நாளின் பெரும்பணியாக புனையவிருக்கும் ஆபிரஹாமின் தேடல் புதிது. உலகத்தின் உயிர்த்துடிப்பை இசையாக்கும் அற்புதத்தை நிகழ்த்துவது அத்தனை எளிதானதா என்ன. அது ஒரு வாழ்நாள் அனுபவம்.
முன்னுரை என்று எதுவும் இல்லாததாலும், பாகம் 1 என்பதில் சமர்ப்பணம் எனக்கு என்று மட்டும் குறிப்பிட்டிருந்ததாலும், முதல் முறை வாசிப்பில், எட்வினின் கூற்றுக்களை முழுமையாகப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மற்றொரு முறை வாசித்து அதன் மடிப்புகளுக்குள் உட்புகுந்து வந்த பின்னர் தான் பா.ராகவனின் எழுத்தாளுமை புலப்பட்டது. ஆபிரஹாமின் ரகசிய உலகத்துக்குள் பயணித்த நிறைவும் கிடைத்தது.

ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டும் அல்லாமல், அவனது தேடலை, தவிப்பை வாசகருக்கு அதே துடிப்புடன் கடத்தியிருக்கிறார் ராகவன். “ஒரு மேதையின் வாழ்வில் மிகப்பெரிய அவலம் எது தெரியுமா? நாம் அறிந்ததை, நாம் உணர்ந்ததை, நாம் உள்ளார்ந்த நெகிழ்ச்சியும் பரவசமுமாக அனுபவித்ததை இன்னொருவரிடம் விவரிக்கும் போது எதிர்த்தரப்பு வெளிப்படுத்தும் இளக்காரமான ஒரு சிறு சிரிப்பு இருக்கிறதே, அது, அத்தகைய சிரிப்பு ஒரு விஷம் நிறைந்த கிண்ணம்” என்பது அவரவர் வாழ்வினுள் கடந்த தருணங்களை நினைவுபடுத்துகிறது.

இறவான் இசையின் ஆராதகன் என்று குறிப்பிடப்படுவது மிகவும் பொருத்தமானதே. இசை கேட்டு பழக்கமில்லாதவர்கள் கூட, வாசித்து முடிக்கையில் தங்களுக்குள் ஒலிக்கும் இசையை கண்டடைவார்கள். அழகிய வாசிப்பனுபவம். மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.பா.ராகவன்.

“புரிதலின் விடுதலையைக் காட்டிலும் பூடகங்களின் ரீங்காரம் நிரந்தரமானது. நான் நிரந்தரத்தை எப்போதும் விரும்புகிறேன். என்னை விரும்புவது போல”

ரஞ்சனி பாசு

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி