இறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]

கம்பன் ஒரு சரஸ்வதி சிலையினை வழிபட்டானாம், மகனின் சம்பவத்துக்கு பின் சோழநாடு வேண்டாமென சேர நாட்டுக்கு செல்லும்பொழுது அந்த சிலையினை கொண்டு சென்றானாம் இன்றும் அச்சிலை பத்மநாபபுரத்தில் உண்டாம், வருடத்திற்கொரு முறை யானையில் பவனி கொண்டு வருவார்களாம்

எனக்கென்னமோ அச்சிலை பா.ராகவன் வீட்டில் இருக்கலாம் போல தோன்றுகின்றது, ஆம் “இறவான்” எனும் அவரின் நாவலை படித்தபின் அப்படித்தான் தோன்றுகின்றது, சாதாரண எழுத்தாளனுக்கு அது சாத்தியமில்லை

அது அங்கீகாரம் தேடி அலைந்து சாகும் ஒரு இசை கலைஞனின் வலியினை சொல்லும் நாவல்

குயிலின் கீதம் எப்பொழுதும் சோகமானது, பறவைகளில் குயில் கூட்டமாக வாழாது, அதன் வாழ்வு தனிமையே. காரணம் அதன் பிறப்பே காக்கையின் கூட்டில் தொடங்கும் ஒரு கட்டத்தில் தான் காகமில்லை என உணரும் குயில் தன் இனம் தேடி அலையும், அப்படி தன் இனம் தெரியா நிலையில் தனியாக இருந்து பாடும், குயினின் குரல் இனிமைதான் ஆனால் சோகம் இழையோடும்

அப்படித்தான் இறவானின் நாயகனும் தன் திறமையினை நிரூபிக்க போராடுகின்றான், அந்த சிங்கம் வெறும் கச்சேரி சினிமா என தன்னை அடக்க நினைக்கமுடியவில்லை அது முடியவும் முடியாது

சிங்கம் யானையினை கொன்று தன்னை நிரூபிக்க விரும்பும் பொழுது சில எலிகளும் பிராய்லர் கோழிகளும் அதன் பசியினை தீர்க்க முடியாது

ஆனால் செம்மறி கூட்டத்தில் குட்டியில் சிக்கிய சிங்கமது, இதனால் சக சிங்கங்கள் அதை சிங்கமென ஒப்புகொள்ளமுடியாமல் விரட்டுகின்றன, அது தன் பலத்தை காட்டுகின்றது, தன் கர்ஜனையினை காட்டுகின்றது, அது தன் பலமான கால்களால் பாறையினை நொறுக்கி நானும் சிங்கம் என கதறுகின்றது

எந்நிலையிலும் ஏன் யானையினையே அது ஒரே அடியில் வீழ்த்தி காட்டியும், பாறை விழுந்தாலும் யானை சாகும் அதனால் நீ சிங்கமல்ல ஆட்டுகுட்டி என சக சிங்கம் விரட்டும் நிலையில் அச்சிங்கத்தின் கதறல் எப்படி இருக்கும்?

அதுதான் இறவானின் கதை

அங்கீகாரத்துக்கு ஏங்கும் இசை அமைப்பாளனின் கதை அது, அவனின் வலியும் வேதனையும் அவனுக்கே தெரியும். ஒரு மாபெரும் இசை கடவுளுக்கு உண்டாகும் நிராகரிப்பு அவனின் சாவுக்கு சமம்

அந்த வலியினை உணர்வது கூட கஷ்டமில்லை, அவன் ஆன்மாவினை படித்தால் உணரலாம் ஆனால் அதை சொல்லும் மொழி?

அதில்தான் ராகவன் தனித்து நிற்கின்றார், அந்த மொழி ஒரு இசை கடவுளின் ஆன்மாவின் வலி. அந்த வலி அழகான சோக வலி மொழியினை ஆசானுக்கு கொடுக்கின்றது

பொதுவாக எழுத்தாளனோ கவிஞனோ அவன் எழுதும் படைப்பை பொறுத்து மொழி கொட்டும். கடலில் மாலுமி கடல் கொந்தளிப்புகு ஏற்ப கப்பலை செலுத்துவது போல அவனுக்கு மொழி லாகவம் வரவேண்டும்

சிறு மன்னர்களிடம் அசால்ட்டாகவும், டாரியசிடம் முழு பலத்துடன் மோதிய அலெக்ஸாண்டரின் வாள் போல வார்த்தைகள் கொட்ட வேண்டும்

ராகவனுக்கு அது வாய்த்திருக்கின்றது, அட்டகாசமான ஒரு மயக்க மொழியில் அதை சொல்லியிருக்கின்றார்

இது இசை கடவுளின் நாவல் , ஆசான் சங்கீதமோ இசை கருவியோ படித்திருந்தாலன்றி இதை எழுத முடியாது, அதைவிட முக்கியம் ஒரு யூதனாக வாழ்ந்தால் அன்றி இந்த நாவலை அவர் படைத்திருக்க்க முடியாது

அப்படி யூத கடலில் குளித்து யூத உணவினை உண்டு யூதனாகவே வாழ்ந்துவிட்டு எழுதியிருகின்றார்

அவர் போனபிறவியில் யூதனாயிருந்திருகலாம் அதன் முந்தைய பிறவியில் கம்பனாய் இருந்திருக்கலாம்,, அதுவன்றி வேறல்ல‌

அந்த நாவல் அப்படியே மயக்க நிலைக்கு இழுத்து சென்று நாவல் முடியும் பொழுது அந்த எட்வின் பிணத்தை மடியில் போட்டு கதறி அழ தோன்றி அவனை தேடும் பொழுது அய்யோ இது வெறும் கதையா என நினைவுக்கு வரும்பொழுதுதான் நாம் நினைவுக்கே திரும்புகின்றொம்

இசை தெரிந்த ஒவ்வொருவனையும் இந்நாவல் உலுக்கும்

இசை கலைஞனின் தேடல் நாவலாக விரிந்து அவன் நிராகரிக்கபடும் இடத்தில் மொத்தமும் உச்ச புள்ளியாக நம்மை நிறுத்துகின்றது

உறுதியாக சொல்லலாம் தமிழ்ந்நாடு இசை அமைப்பாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு வலி இருக்கின்றது, ஒவ்வொருவருக்கும் ஒரு அவமான பின்னணி இருக்கின்றது. ஒவ்வொரு மேடை இசையாளனோ இல்லை சினிமா இசையாளியோ அந்த வலியோடே தான் வாழ்கின்றான்

குயிலின் வலி இன்னொரு குயிலுக்கு அதன் மொழியில்தான் இன்னொரு குயிலுக்கு தெரியும், விவசாயியின் வலி இன்னொரு விவசாயிக்குத்தான் தெரியும்

அப்படி இந்த நாவல் உலகின் ஒவ்வொரு இசை அமைப்பாளனையும் வெடித்து அழவைக்கும் நாவல் இது

இதை வாசிக்கும் ஒவ்வொரு இசையாளியும் ஏன் இசை கருவி வித்வான் கூட கடைசியில் வெம்பி அழுது, சில‌ சொட்டு கண்ணீர் விடுவான்

நிச்சயம் விடுவான், கலைக்கான அங்கீகாரம் தேடி வலிபட்ட அனுபவம் எல்லோரிலும் உண்டு

அந்த கண்ணீர்தான் ராகவனின் திறமைக்கும் எழுத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரம்

இந்த மனிதர் மகா சிறந்த எழுத்தாளர், அந்த கதையில் நாயகன் எட்வின்” என்ன பெரிய சிம்பொனி , என் இசை சிம்பொனிவிட உயந்தது அதை புரிந்துகொள்ள ஒருவனும் பிறக்கா நிலையில் நான் என்ன செய்யமுடியும்?” எனகதறி அழுவதை போல..

இம்மனிதருக்கு உலகின் மிகசிறந்த விருதுகளை விட பெரும் விருது கொடுக்க ஒருவனும் இல்லையே என அழுது கொண்டே நாவலை கடந்து செல்கின்றோம்

மிக வலிகொண்ட ஒரு சினிமாவினை பார்ப்பதைவிட நல்ல நாவல் பெரும் வலிகொடுக்கும் , இந்நாவல் அதை கொடுத்தது இரவெல்லாம் அதன் வலியில் இருந்து அழுதுவிட்டு இப்பொழுதுதான் வெளிவந்தேன்

ஆசானுக்கு நன்றிகள், ஏழு லோகத்திலும் இல்லா விருது ஒன்ரே அவருக்கான அங்கீகாரம்…

ஒவ்வொரு இசை அமைப்பாளனும் , இசை கலைஞனும் ரகசியமாக நிச்சயமாக படித்து அழவேண்டிய நாவல் இது

அவர்களுக்க்கான வார்த்தையும் வலியும் ஆறுதலும் அங்குதான் இருக்கின்றது.

ஸ்டான்லி ராஜன்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter