கொசு – ஒரு மதிப்புரை [தர்ஷனா கார்த்திகேயன்]

அரசியலையும் திரைப்படங்களையும் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. கருப்பு வெள்ளை திரைப்படக் காலம் முதல் இணையத் தொடர் காலம் வரை, அறிவியல் தொழில்நுட்பங்கள் அறியாதவர்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் முதல், மெத்தப்படித்தவர்கள், பெருந்தனக்காரர்கள் வரை எல்லா காலத்திலும் எல்லா மக்களிடையேயும் இந்த இரண்டு துறைகளும் நீக்கமற ஊடுருவி இருக்கின்றன.

இதில் திரைத்துறை என்பது கேளிக்கைக்கு உரியது என்பதால் அதிகம் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றாலும் அரசியல் மீதான அதீத ஆர்வம் என்பது சற்றுத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இதைக் கருப்பொருளாக வைத்துத் தான் பா.ராகவனின் “கொசு” நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த அரசியல் மற்றும் அதன் மீது உள்ள மோகம் எத்தனை தூரம் சராசரி மனிதர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்து விடுகின்றது என்பதை நினைக்கையில் வேதனையாகத்தான் இருக்கிறது

இரண்டு தலைமுறைகளாக அரசியலில் தொண்டர்களாகவே இருந்து விட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாம் தலைமுறை இளைஞன் ஒருவன் எப்படியாவது தொண்டன் என்னும் நிலையிலிருந்து மேலே எழுந்துவிடுவது என்று ஒரு வைராக்கியத்தோடு முயல்கிறான். இந்த இலட்சியப்பாதையில் கானல் நீராக வந்து போய்விடுகின்ற மாயங்களும் மாயைகளும், அவற்றுக்குச் சமாந்தரமாக இலை மறை காயாகப் பயணிக்கும் அரசியலுக்குள் அரசியல் என்கின்ற தாய விளையாட்டும் தான் இந்தக் கதை.

வாழ்க்கை விழுமியங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த அழுக்கடைந்த சாகரத்திற்குள் போராடி நீந்தி, வாழத் தக்கனவாய் பிழைத்துக் கொள்வதே குதிரைக் கொம்பாய் இருக்கின்றது. இதில் கரை சேர்வதென்பது ஒரு சராசரி மனிதனுக்கு தன்னளவில் ஒரு மிகப் பெரிய யுத்தம் தான்.

அரசியலில் முகஸ்துதியும் புறம் பேசுதலும் இரண்டாம் நுழைவாயில். எல்லாத் தொண்டனும் இதைத் தான் செய்வான் என்பது எல்லா அரசியல் தலைவனுக்கும் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அப்படி அவன் தெரிந்து தான் இருப்பான் என்னும் பால பாடம் கூடத் தெரியாமல் தொண்டர்கள் இருப்பது தான் வருத்தத்திற்குரியது.

ஓர் அளவுக்கு வழக்கொழிந்து போய்விட்ட மிகவும் பழையதான இதே உத்தியை தான் இந்த கதையின் நாயகனும் பயன்படுத்துகிறான். ஆனால் எதார்த்தம் வேறு என்பதை உணர்ந்த வாசகனையும் நாயகனின் நம்பிக்கையோடும் நப்பாசையோடும் காத்திருக்கத் தூண்டுவது தான் இந்தக் கதையும் பெரும் பலம்.

கோப்புகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட கடிதத்தை கண்டு பிடிக்க முடியாத போதே, நாயகனின் இயலாமை வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடுகிறது. கதையும் முடிவையும் ஊகிக்க முடிகிறது. ஆனாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை, தோல்வி வெற்றிக்கான முதல்படி போன்ற கல்லறை வாசகங்களால் ஆனது தானே மனித வாழ்வு? நாயகனும் தன் அடுத்த அடியை இன்னும் சற்று நிதானமாகவும் கவனமாகவும் எடுத்து வைக்க எத்தனிக்கிறான்.

முதல் அத்தியாயம் மட்டும் ஏன் சம்பந்தமே இல்லாமல் கதையில் செருகப்பட்டது என்று புரியவில்லை. அதில் வரும் கதாபாத்திரங்களோ சம்பவங்களோ எந்த வகையிலும் கதைக்குப் பயன்படவில்லை.

யாரோ ஒரு அரசியல் தலைவர் வீட்டு மருமகளின் பெயரை துர்கா என்பதிலிருந்து சாந்தா என்று மாற்றி வைத்ததாக ஒரு வார இதழில் படித்த ஞாபகம். ( அதாவது எதை மூட நம்பிக்கை என்று சொல்லி அரசியல் செய்கிறார்களோ அதை அடிப்படையாகக் கொண்டு). யாரென்று நினைவில் இல்லை.

அதே போல இந்தக் கதையிலும், மணமகளின் பெயரை சாந்தி என்பதிலிருந்து தூய தமிழ்ப் பெயராக வள்ளி மயில் என்று மாற்றுவதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் இறுதிவரை அவள் சாந்தி என்றே அழைக்கப்படுகிறாள்.🤣

எத்தனை அபத்தம். இப்படித்தான் அரசியல் கட்சிகளும், அவர் தம் கொள்கைகளும் கூட பெரும்பாலும் அபத்தமாக இருக்கின்றன. அரசியல் கோட்பாட்டு நூலின் முதல் விதி “தன்னலம்” தான். மீதமெல்லாம், இசைவாக்கம் அடைதலும், தக்கன பிழைத்தலும் துளியளவு அதிர்ஷ்டமும் தான்.

தர்ஷனா கார்த்திகேயன் 

கொசு – கிண்டிலில் வாசிக்க

 
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter