வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு உடனேயே செய்யக்கூடாத விஷயம் என்றால் அது, அடுத்த வேளைக்கு சமைக்க ஆரம்பிப்பது. அதே போல பெரும் பசியுடன் இருக்கையில் செய்யக்கூடாத விஷயம் என்றால் அது பல் பொருள் அங்காடிக்கு செல்வது.
ஆனால் நன்றாக உண்ட பின்பு சரி, முழுப் பட்டினியாக இருந்த பின்பும் சரி உணவு சார்ந்து செய்யக்கூடிய ஒரு நல்ல விஷயம் “ருசியியல்” நூலைப் படிப்பது தான்.
வெந்ததும் வேகாததுமாக பல ஆயிரம் சமையல் குறிப்பு நூல்கள் சந்தையில் கிடைக்கின்றன. முதல் முறையாக சாப்பிடுவது எப்படி, சுவைப்பது, அதிலும் ருசித்துச் சுவைப்பது எப்படி என்பதை அனுபவித்து எழுதி இருக்கிறார் எழுத்தாளர் பா.ராகவன்.
அதிலும் முதல் அத்தியாயத்தில் நண்பன் ஒருவன் அசைவ உணவைப் பழக்குகிறேன் என்று கூட்டிச்சென்ற அனுபவத்தை அவர் விவரிக்கும் விதம், மிகச்சுவாரசியமான ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியை நகம் கடித்தபடி இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் பரபரப்புக்கு இணையானது.
சைவ உணவை நியமமாகக் கொண்ட ஒரு மனிதர் அதிலும் அதீத உணவுப் பிரியரான ஒருவர், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியிடங்களுக்குச் செல்ல நேர்கையில் உணவு என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அந்தச் சவால்களோடு காரம், புளிப்பு, உப்பு எனப் பல்வேறு சுவைகளைக் கலந்து நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.
நன்றாக ரசித்து ருசித்து உண்ணக்கூடிய ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் தான், மிகச் சரியான உணவுப் பக்குவத்தை அடையாளம் காண முடியும் என்பதற்கு இந்த நூலில் இருக்கும் சிறு சிறு சமையல் குறிப்புகளே சாட்சி. கூடவே பயனுள்ள ஆரோக்கியக் குறிப்பு களும்.
தான் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்க வழக்கங்களின் தொகுப்பாக இதை அவர் எழுதி இருந்தாலும் சமையல், சாப்பாடு இரண்டில் எதில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் உமிழ் நீர் உணவோடு புரியும் ரசவாதத்தை புரிந்துகொள்ள “ருசியியல்” அவசியம்.
Amazon Kindle இல் கிடைக்கிறது.