இறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]

எல்லா எழுத்தாளர்களுக்கும் தன் பெயரை உலகம் சொல்லும்படிக்கு அதி உன்னதமான ஓர் படைப்பை எழுதிவிட ஆசை இருக்கும்.

பா.ராகவன் இதற்கென மெனக்கெடும் ஆளில்லை என்பதை பல விதங்களில் பலமுறை சொல்லியும், எழுதியுமிருக்கிறார்.

இறவான் – அவர் விரும்பியோ விரும்பாமலோ எழுதிவிட்ட கிளாசிக் நாவல்.

ஒரு முழு நீள நாவலில் நிச்சயம் தொய்வுறும் பகுதிகளென ஏதேனும் அமையும். ஆனால், இறவான் அந்த குறையையும் அநாயாசமாய் தாண்டியிருக்கிறது.

நாவலை வாசிக்க ஆரம்பித்தத்தில் இருந்து முற்றும் வரை கீழே வைக்கவிடாமல் வாசிக்க வைத்ததில் இருக்கிறது அதன் வெற்றி.

நாவலில் வரும் யூதனாய் தன்னை உணரும் இசைமேதையின் சிறுவயதிலிருந்து அவனை அவன் தான் ஒரு மேதையென அறிந்து தன் மேதைமையை இறக்கி வைக்கும் வரையிலும் இன்னும் குறிப்பாய் தன் பிறப்பின் கடமை முடிந்ததும் கிளம்பிச் செல்லும் வரையிலும் நாமும் ஒரு பார்வையாளனாய் உடன் வருகிறோம். அவன் ஜெயிக்க வேண்டுமே என மனம் அவாவுகிறது. இத்தனை பெரிய மேதமையுடைவன் வென்றாக வேண்டும், வெல்வான் என அவனைப்போலவே வாசகனும் பித்துக்கொள்கிறான்.

அவன் கிறித்தவனோ, யூதனோ அவன் பூர்வாஸ்ரம பெயரோ, சினிமாவுக்காக அவன் மாமனார் வைத்த பெயரோ, அல்லது அவனே சொல்லிக்கொண்ட பெயரோ எதுவுமே விஷயமில்லை, அவன் ஒரு இசை ஞானி என்பதைத்தவிர.

அவன் அலையும் அலைச்சல்களுடன், அவன் மனம் அடையும் கொதிப்பையும், அவன் வாழும் வாழ்க்கையையும் நாவல் முடியும்வரை நாமும் அடைகிறோம்.

முழுக்க முழுக்க கட்டிப்போடுகிறது நாவல்.

உண்மையில் இதற்கு விமர்சனம் எழுதுவதே எனக்கு அபத்தமாய் படுகிறது. வாசித்து உணர வேண்டிய உன்னதம் இது.

பா.ரா. இந்த இறவான் நாவல் மூலம் மிகப்பெரிய எழுத்துப் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார்.

ஒவ்வொரு உரையாடலையும் செதுக்கி இருக்கிறார்.

ஒவ்வொரு உன்னத கலைஞனுக்கும் அவனது மேதைமையை அறிந்தவள் அவனது பிரம்மாண்ட சாதனை நடந்து அவனது பெருமை பேசப்படவேண்டும் என்பதை தவிர வேறு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆத்மார்த்தமாய் தன்னையே ஒப்புகொடுப்பதும் இயல்பாய் நடக்கிறது, சிந்து பைரவியின் சுஹாசினியைப் போல.

இந்த சிம்பொனி என்ற வார்த்தை வந்ததும் மனதில் ஓடியது இளையராஜா
ஆனால், கதை நாயகனின் வாழ்க்கைக்கும் ராஜாவின் வாழ்க்கைக்கும் சிம்பொனி என்ற வார்த்தையை தாண்டி வேறு எந்த ஸ்நானப் பிரார்த்தியுமில்லை.

வேண்டுமென்றேதான் கதையில் வரும் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை இந்த விமர்சனத்தில்.

எப்படி வளைத்து வளைத்து எழுதினாலும் அதன் சாராம்சம் இதுவாகத்தான் இருக்கும்.

தமிழ் புனைவு எழுத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஓர் அற்புதம் இறவான்.

ஜெயகுமார் சீனிவாசன்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி