கலைஞர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். சிலர் காசுக்கு மாரடிப்பவர்கள். சிலர் புகழுக்கு மயங்குபவர்கள்.
பித்தனைப் போல் கலையே நான் என வாழ்பவர்கள் சொற்பம்.
பொதுவாகக் கலையைக் கடவுளாக நேசிக்கும் பலர் இயல்பிலிருந்து பிரிந்து வாழ்பவர்களாக இருப்தற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பெருங்கலைஞர்கள் பலர் வேறு உலகில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்.
பிரபல டச்சு ஓவியக்கலைஞர் Vincent Vam Gogh இம்மாதிரி மாய உலகில் சிக்கித் தவித்து தன் காதைத் தானே அறுத்துக்கொண்ட வரலாறு உண்டு.
நம் நாயகன் ஒரு படி மேலே. தானே இசை என்றல்லவா பிரகடனம் செய்கிறான்!
எட்வின் ஒரு சரீரம் மட்டுமே. ஆபிரஹாம் ஹராரி ஆத்மாவாக இயக்குகிறான். நடுவில் சந்தானப்பிரியன் வேறு.
எட்வினின் இந்த மல்டிபிள் பர்சனாலிடீஸ் பார்வையிலேயே கதை பயணிக்கிறது. பிறர் வருகிறார்கள். கொஞ்சநேரம் இருந்து போய் விடுகிறார்கள். இருந்து சாதிக்கப்போவது எதுவுமில்லையே..இளையராஜாவும், யேசுதாசுமே வந்து போனவர்களெனில் இவர்கள் என்ன…
கதாநாயகி அந்த பெயர் அறியாத பன் தந்த பெண்ணின் குரல். மரியா தான் அந்த பெண்ணா..அல்லது அக்குரல் மரியாவிடம் உள்ளதா…தெரியவில்லை. ஆனால் அக்குரலுக்கு செய்யவேண்டிய மரியாதையை நாயகன் செய்து விடுகிறான்.
ஆர்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிக்கு அடியில் ஒரு கடினமான பாறை தாங்குவதற்கு இருந்தால் தான் நலம். இல்லையேல் நீர்வீழ்ச்சியின் வேகம் தரையை அரித்து பள்ளமாக்கிவிடும். ஜானவி அந்த பாறையின் பணியை சிறப்பாக செய்கிறாள். ஒரு வேளை ஜானவி இல்லையெனில் எட்வினின் ஹராரி என்னவாயிருப்பான்?
மதம், இசை, காதல் என பலபரிமாணங்ளில் திரியும் நாயகன் கடைசியில் ஹராரியாகவும் எட்வினாகவும் ஒரே நேரத்தில் இரு பர்ஸனாலிடியும் மாறி மாறி
தோன்றுவதை ஆசிரியர் வெளிக்கொண்டுவந்த விதம் சிறப்பு..
எந்த கலைஞனும் இறப்பதில்லை. கலை வடிவிலே வாழ்கிறான். அவன் கலை மேடையேறாமல் போனாலும்…
இறவான், சிரஞ்சீவி.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.