அபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]

ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது.

சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது.

‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஐம்பது கவிதைகளும் வாசகனை கொஞ்சம் அனுசரணையாகவேதான் நடத்துகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சிறுகதை ஆசிரியர் என்பதைவிட கவிஞராகதான் பா.ராகவன் கூடுதலாக மிளிர்கிறார் என்பதாக எனக்குப் படுகிறது.

கவிதைகள் குறித்து மேம்போக்கான எள்ளல் எண்ணம் கொண்டவர்கள் கவிதை எழுத முடியாது என்கிற மூடநம்பிக்கையை தைரியமாகவே பாரா கைவிட்டு விடலாம். தீவிரக் கவிஞர்கள் தவறவிடுகிற சில்லறை தருணங்களை கவிதையாக்குகிற கவிஞர்களும் இலக்கியத்துக்குத் தேவையே.

ஆறேழு பக்கட்டுகளில்
தண்ணீர் பிடித்துவைக்க

ஆயிரக்கணக்கில் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

பிடித்த நீரைச் சிந்தாமல்
நகர்த்தி வைக்கத்தான்

பா.ராகவன்கள் தேவைப்படுகிறார்கள். நவீனக் கவிதைகள் குறித்த எள்ளல்கள் மிகுந்த பா.ராகவன் போன்றவர்களே, அக்கவிதைகள் குறித்த ‘புரியும்படியான’ விமர்சனங்களையும் எழுதமுடியும் என்று கருதுகிறேன்.

‘அபாயகரம்’ கவிதைத் தொகுப்பு, தன்னளவில் ஒரு தொகுப்பாக மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே கவிதையுலகில் நுழைய விரும்பும் எல்.கே.ஜி. வாசகர்களுக்கு அகலமாக தன் கதவுகளை திறந்துவைத்து ‘வெல்கம் போர்டு’ வைத்திருக்கிறது.

பா.ராகவனின் கவிதைகள் உடோப்பியாவில் நிகழ்வதில்லை. அக்மார்க் குரோம்பேட்டை சரக்கு. பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. அபூர்வமாக சிந்திக்கவும் தூண்டுகின்றன. நேற்றைய நிலவைவிட இன்றைய நிலவு அழகாக இருக்கிறது எனும்போது இன்றைய கவிதை நாளை நன்றாயிருக்கக் கூடும் மாதிரியான கூற்றுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு புன்னகையைத் தருகிறாய்
ஒரு ஆர்வத்தைத் தருகிறாய்
ஒரு பதற்றத்தைத் தருகிறாய்
ஒரு பெருமூச்சைத் தருகிறாய்
ஒரு தரிசனத்தைத் தருகிறார்

மாதிரியான கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் வாசனை.

குள்ளமா யிருப்பதே
குரோட்டனுக் கழகு

மாதிரியான அறிவிப்புகளில்தான் அசல் பாரா வெளிப்படுகிறார்.

காதலும், கவிதையும் பாராவின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அநியாயமாக இரையாகின்றன.

காட்டாக,

காதல் ஒரு வெட்டிவேலை என்பது
காதலிக்கும்போது தெரியவில்லை
கவிதையெழுதும்போது
கண்டிப்பாகத் தெரிகிறது

என்கிறார்.

காதைத் தேடும் கவிஞன் அமானுஷ்யத்தை ஏற்படுத்துகிறான்.

ரயிலில் ஏறிய கவிஞன், கனவுப் பெட்டியிலிருந்து இறங்கும் அதீதம் அருமை.

இந்தியாவது தொந்தியாவது என முடியும் கவிதையின் பகடி, மொழித்திணிப்பின் மீதான தமிழ் மண்ணின் நிரந்தர கிண்டல்.

பாம்பு அசைந்துக் கொண்டிருந்தது
மரம் இறங்கி ஊர்ந்துப் போனது

வாசிப்பவனின் கற்பனைக்கு ஓவர்டைம் உழைப்பு வாங்குகிறது.

கவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள் என்று இந்த விமர்சனத்துக்கு கவித்துவமாக தலைப்பிட்டுவிட்டாலும், எழுபது பக்கங்களை வாசித்து முடித்தபிறகு கவிதைத் தொகுப்பை வாசித்த தன்னிறைவுதான் ஏற்படுகிறது.

பாராவுக்கு இனியும் தன்னடக்கம் அவசியமில்லை. தாராளமாகவே கவிஞர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளலாம். இவையும் கவிதைகள்தான். இவற்றுக்குரிய வாசகர்களும் நிச்சயம் இருக்கிறார்கள், என்னைப் போல.

-யுவகிருஷ்ணா

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி