அபாயகரம்

இணையத்தில் நான் எப்போதாவது கவிதை போன்ற தோற்றத்தில் (தோற்றத்தில் மட்டும்) எழுதுபவற்றைத் தொகுத்து கிண்டிலில் ஒரு மின்நூலாக வெளியிட்டிருக்கிறேன். அதற்கு எழுதிய முன்னுரை இது.

இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு வரி அல்லது ஒரு சில வரிகள் உங்களுக்குக் கவிதை போலத் தோன்றிவிடுமானால் அது பிழை. இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே.

எழுத்தின் அனைத்து சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்பது என் விருப்பம். சிறுகதை, நாவல், கட்டுரை, சில பா வகைகள் (வெண்பா, ஆசிரியப்பா, விருத்தங்கள்) நாடகம், திரைக்கதை இவையெல்லாம் நான் முயற்சி செய்து, ஓரளவு வசப்பட்ட வடிவங்கள். இந்த நவீன கவிதை மட்டும் இன்றுவரை ஆட்டம் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.

எனக்கு எது கவிதை என்று தெரியும். கோடி கவிதைகளைக் கொண்டு வந்து என் மீது கொட்டினாலும் அதில் தேறக்கூடிய ஒரே ஒரு கவிதையை நான் முகர்ந்து எடுத்துவிடுவேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்படித் தேறக்கூடிய ஒன்றை என்னால் இன்றுவரை எழுத முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் எழுதும்போது இருக்கும் மனக்கிளர்ச்சி, முடித்ததும் உடனே வடிந்துவிடுகிறது. எழுதியது பிடிக்காமல் போய்விடுகிறது.

காரணங்கள் இரண்டு. கவிதைக்கான கணங்களை நான் தவறவிட்டுவிடுகிறேன். ஒரு மேம்போக்கான எள்ளல் – பெரும்பாலும் வாழ்க்கை சார்ந்து – எனக்கு இருப்பது இதன் தலையாய பிரச்னை. எள்ளல் என்பது விமரிசனத்தின் ஒரு வடிவம். கவிதை விமரிசனங்களை அண்டவிடாத உணர்ச்சி மயத்தின் வெளிப்பாட்டு முறை. சிக்கல் தொடங்குவது அங்கேதான்.

இரண்டாவது காரணம், கவிதை மொழி என் உரைநடையை பாதித்துவிடக்கூடாது என்கிற அச்சம். எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்துகொண்டு ஒரு நல்ல கவிதையை யாரும் எழுதிவிட முடியாது என்று நினைக்கிறேன். குறிப்பாக, என்னால் முடியாது.

முன்பு பத்திரிகைகளிலும், பிறகு இணையத்திலும் கவிதை சார்ந்து நான் எழுதிய அங்கதக் குறிப்புகள் எனக்கொரு கவிதை விரோதி பிம்பத்தைக் கட்டமைத்து உலவவிட்டிருப்பதை அறிவேன். உண்மையில் என்னளவு கவிதைக்கு உருகுவோர் வெகு சிலரே இருக்க முடியும். அது ஆற்றமாட்டாதவனின் உணர்ச்சிகரம். சொற்களில் விவரிப்பது சிரமம்.

இந்தளவு தன்னிலை விளக்கமெல்லாம்கூட அநாவசியம் என்று இதை எழுதிக்கொண்டிருக்கும்போது தோன்றுகிறது. இன்று எண்டர் தட்டி என்ன எழுதினாலும் கவிதை என்றாகிவிடுகிறது. எழுதுவதற்கு எழுநூறு பேரும் விரும்புவதற்கு லட்சம் பேரும் உலகில் இருக்கிறார்கள். ஆனால் என்ன செய்ய. நிஜமான கவிதை இந்த வட்டத்துக்கும், எந்த வட்டத்துக்குமே வெளியில்தான் உள்ளது. ஒரு கவிஞனாக இன்று அடையாளம் ‘வாங்குவது’ மிகவும் சுலபம். ஆனால் ஒரு நல்ல கவிதையை எழுதிவிடுவது அப்படிப்பட்டதல்ல.

வாழ்ந்து முடிப்பதற்குள் ஒரு கவிதையையாவது எழுதிவிடவேண்டும் என்பது என் ஆசை. வாழ்ந்ததைச் சொல்ல வேறென்ன வழி?

 

அபாயகரம் தொகுப்பை வாசிக்க இங்கு செல்லவும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter