கையெழுத்து

குமுதத்துக்கு சாரு நிவேதிதா எழுதிய கடிதம் ஒன்றை அவரது தளத்தில் கண்டேன். அந்தக் குறிப்பிட்ட விவகாரம் குறித்த என் கருத்தை அவரிடம் தனியே சொல்லிவிட்டபடியால் அது இங்கே அநாவசியம். ஆனால் அந்தக் கடிதத்தில் கண்ட அவரது கையெழுத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

சாருவின் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அழகு என்பதைக் காட்டிலும் அதில் ஒரு நளினம் உண்டு. லை, னை  போன்றவற்றுக்கு விடாப்பிடியாகப் பழைய கொக்கி வளைவையே போடுவார். அது கொடுக்கிற அழகு பிந்தைய சீர்திருத்தத் தமிழில் கண்டிப்பாகக் கிடையாது. அதேபோல, மெய்யெழுத்துகளின் மீது அவர் வைக்கிற புள்ளி மிக அழுத்தமாக இருக்கும். எழுதிய சொல்லை, வேண்டாம் என்று தோன்றி அழிக்க நினைத்தால், மீண்டும் படித்துப் பார்க்கும்போது என்ன எழுதி அடித்தோம் என்பதை அறிந்துகொள்ள இடம் வைத்தே அடிப்பார்.

தொண்ணூறுகளில் நான் கல்கியில் பணியாற்றிய காலத்திலேயே இவற்றையெல்லாம் கவனித்து ரசித்திருக்கிறேன். இன்றுவரை அவர் கையெழுத்து மாறவேயில்லை.

ஜெயமோகன் கைப்பட எனக்குச் சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். இன்றல்ல. பல வருடங்களுக்கு முன்பு.

அவரது கையெழுத்தில் ஒரு சீற்றம் இருக்கும். ஒவ்வொரு எழுத்தும் அடுத்த எழுத்தின்மீது ஆக்ரோஷமாகப் பாயும். அடித்தல் திருத்தல் அறவே இருக்காது. எப்போதாவது ஞாபகம் வந்தால்தான் பேரா பிரிப்பார். மற்றபடி அது மடை திறந்த வெள்ளம்தான்.

சுந்தர ராமசாமி, லாசரா, திகசி போன்றவர்களின் கையெழுத்தைக் கொண்டே அவர்கள் எத்தனை நிதானமானவர்கள் என்பதை உணர முடியும். லாசரா ஒரு போஸ்ட் கார்டில் குறைந்தது இருபது வரிகள் எழுதுவார். ஆனால் ஒவ்வொரு எழுத்தும் அத்தனை தெளிவாக இருக்கும். அவரது கையெழுத்து அவரது மொழியின் தொனியைப் பிரதிபலிக்கிற மாதிரியே தோன்றும்.

அசோகமித்திரனின் எழுத்தில் மட்டுமல்ல; அவரது கையெழுத்திலும் எனக்கு ஜாக்கிரதை உணர்வு  தெரியும். கொஞ்சம் நடுங்கி இருக்கும்.  அவரது ஒற்றைக்கொம்புகள் மிகவும் ஒடுங்கி, உயர்ந்திருக்கும். முற்றுப்புள்ளிகளை ஓர் இடைவெளி விட்டு வைப்பார். தமிழ் எழுத்தாளர்களில் செமி கோலனை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியவர் எனக்குத் தெரிந்து அவர் மட்டும்தான். ; ல், கீழே உள்ள கமா பகுதியைக் கொஞ்சம் அழுத்தமாகப் போடுவார்.

நான் கவனித்த வரையில் கையெழுத்தில் ராணுவ ஒழுக்கம் காப்பவர் பிரபஞ்சன். பொடிப்பொடியாகத்தான் எழுதுவார். ஆனால் எந்த எழுத்தும் அடுத்த எழுத்தைத் தொடாது. ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்குமான இடைவெளி சீராக இருக்கும். பிரபஞ்சனின் மெய்யெழுத்துப் புள்ளிகளும், சாருவின் புள்ளிகளைப் போலவே அழுத்தமாக இருக்கும்.

ஒரு காலத்தில் என் கையெழுத்தும் அழகாகவே இருக்கும். ஆனால் கணினியில் எழுத ஆரம்பித்த பிறகு அதன் உருவம் சிதைந்துவிட்டது. ஒரு கட்டத்தில் செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவது தவிர வேறெதற்குமே பேனாவை எடுப்பதில்லை என்றாகிவிட்டது. இன்று சாருவின் கடிதத்தைக் கண்டதும் திரும்பவும் கையால் எழுதிப் பார்க்கலாமா என்று ஆசை வந்திருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் பத்து பேரைக் குலுக்கிப் போட்டு யார் வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!